Press "Enter" to skip to content

வரலாறு: ரோமானிய காலத்தில் வாழ்ந்த இந்த பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத 7 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

பண்டைய ரோமில் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? தாய்ப்பாலூட்டுவது முதல் அசாதாரண அழகு ராணிகள் நடத்திய ஆளுகைகள் வரை, ரோமானிய பேரரசில் வாழ்ந்த பெண்கள், நவீன உலகில் வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பல அழுத்தங்களை அந்தக்காலத்திலேயே எதிர்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார்களா? தங்கள் கணவரை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்பட்டார்களா? இதுபோல நம் மனதில் தோன்றும் எளிய கேள்விகளுக்கு ஆசிரியரும் பாரம்பரிய வரலாற்றை ஆராய்ந்தவருமான ஏனலிஸ் ப்ரெய்சன்ப்ரக் கண்டறிந்த ஏழு வியத்தகு உண்மைகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

1. தாய்ப்பாலூட்டலை அறிவுறுத்திய மருத்துவர்கள் – சமரசம் ஆகாத தாய்மார்கள்

அந்தக்காலத்தில் பணக்கார ரோமானிய பெண்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. மாறாக, அந்தச் சேவையை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு அடிமை அல்லது வாடகைக்கு பணியமர்த்தப்பட்ட ஒரு செவிலித்தாயிடம் அந்த வேலையை ஒப்படைத்தனர். சோரனஸ் என்பவர் இரண்டாம் நூற்றாண்டின் மகப்பேறு மருத்துவ முறைகள் பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர். “குழந்தை பிறந்த சில நாட்களுக்கு, அதன் தாய் உணவளிக்க முடியாத அளவுக்கு சோர்வடைந்துவிடலாம் என்ற அடிப்படையில், செவிலித்தாயின் பால் விரும்பத்தக்கதாக இருக்கும்,” என்று குறிப்பிடுகிறார்.

தேவைக்கேற்ப பாலூட்டப்படுவதை ஏற்காத அவர், பழரசரத்தில் ஊறவைத்த ரொட்டி போன்ற திடப்பொருட்களை குழந்தைக்கு ஆறு மாதங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாக சோரனஸ் தெரிவித்துள்ளார்.

கிரேக்க செவிலித்தாயை பணியமர்த்துவதன் சாத்தியமான நன்மைகளையும் சொரானஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, அந்த பெண்மணியால் பிறந்த அந்த சுசுவுக்கு அதன் தாய்மொழியையே பரிசாக வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இந்தக் கூற்றை பெரும்பாலான ரோமானிய மருத்துவர்கள் மற்றும் தத்துவஞானிகள் ஆதரிக்கவில்லை. பிறந்த சிசுவுக்கு அதன் தாய்ப்பாலே சிறந்தது – அடிமைப்படுத்தப்பட்ட செவிலித்தாய்கள் மூலம் குழந்தைக்கு பாலூட்டப்பட்டால், அந்த குழந்தைக்கும் அடிமைத்தனமான குணநலன்களை வளரலாம் என்ற அடிப்படையில் அவர்கள் அந்த யோசனையை நிராகரித்ததாகக் கூறுகிறது வரலாறு.

மேலும், பெற்ற பிள்ளைக்கு தாய்மார்கள் பாலூட்டத் தவறும்போது அந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் சோம்பேறிகள் ஆகக் கூடும் என்றும் அத்தகைய தாய்மார்கள் தங்களுடைய உடல் அமைப்பை மட்டுமே நினைத்து கவலை கொள்வதால் பிள்ளைகளுக்குத்தான் பாதிப்பு என்றும் ஒரு பிரிவு ரோமானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

2. பார்பீ போன்ற பொம்மைகளுடன் விளையாடிய ​​ரோமானிய பெண்கள்

ரோமானிய பெண்களின் குழந்தைப் பருவம் வேகமாக வளர்ந்தது. அவர்கள் 12 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் அந்தக்காலத்தில் அமலில் இருந்தது. குழந்தை இறப்பு விகிதங்கள் அதிகமாக இருந்த அந்த நேரத்தில் இந்த பெண்களின் வளமான உடல் ஆரோக்கியத்தையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் காலத்திலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போது வாழ்ந்தவர்கள் கருதினர்.

ரோமானிய பெண்கள், திருமணமாகும் நாளில் அதுவரை கடைப்பிடித்து வந்த குழந்தைத்தனத்தை தான் பராமரித்து வந்த பார்பீ போன்ற பொம்மைகளுடன் சேர்த்து மூட்டை கட்டி வைத்து விட்டு கணவருடன் வாழ தயாராக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒருவேளை திருமண வயதை அடைவதற்குள் ரோமானிய பெண் இறந்துவிட்டால் அவர்கள் பராமரித்து வந்த பொம்மைகளும் அவரின் கல்லறைக்குள்ளேயே சடலத்துடன் சேர்த்து புதைக்கப்படும் வழக்கம் அமலில் இருந்துள்ளது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இரண்டாம் நூற்றாண்டு ரோமில் வாழ்ந்த க்ரெபெரியா டிரிஃபீனா என்ற பெண்ணுக்குச் சொந்தமான சர்கோபகஸ் (முற்றிலும் கற்களால் செய்யப்பட்ட கல்லறை) கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லறைப் பொருட்களில், இன்று சில சிறுமிகள் விளையாடும் நெகிழி (பிளாஸ்டிக்) சிலைகளைப் போல, நகர்த்தவும் வளைக்கவும் கூடிய கால்கள் மற்றும் கைகள் இணைந்த யானை தந்த பொம்மை இருந்தது.

க்ரெபெரியா உடுத்துவதற்காக பயன்படுத்திய ஆடைகளை தாங்கிக் கொள்ளும் வகையில் அந்த பொம்மைக்குள்ளேயே ஒரு சிறிய பெட்டியும் அதில் சில உடைகள் மற்றும் ஆபரணங்களும் இருந்துள்ளன.

ஆனால் நவீன பார்பீ பொம்மையின் மிகவும் விமர்சிக்கப்படும் பரிமாணங்களுக்கு மாறாக, க்ரெபெரியாவின் இடுப்பு பரந்த குழந்தை தாங்கும் வகையிலும் வட்டமான வயிற்றையும் கொண்டிருந்தது.

எதிர்காலத்தில் தாய்மை அடைவதையும் அப்படி ஒரு நிலை மதிக்கப்படுவதையும் உணர்த்தும் வகையில் அந்த கல்லறை இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரோமானிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

3. விவாகரத்துக்குப் பிறகு பிள்ளைகளுக்கு பாதுகாவலனாகும் தந்தை

பண்டைய ரோமில் விவாகரத்து விரைவாகவே கிடைக்கும். அதை பெறுவது எளிதானது மற்றும் வழக்கமான நிகழ்வு போல இருந்தது.

திருமணம் என்பது சமூகத்தில் பின்னிப்பிணைந்த வழக்கமாக கருதப்பட்டது. குடும்பங்களுக்கு இடையே அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளை எளிதாக்க அது பயன்பட்டது. இருப்பினும், திருமண உறவுகள் ஒருவருக்கு அல்லது மற்ற தரப்பினருக்கு இனி பயனுள்ளதாக இல்லாதபோது குறுகிய அறிவிப்பின் மூலம் அந்த உறவை துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பை அந்த கால சட்டம் ஆண், பெண் இருவருக்குமே வழங்கியிருந்தது. இன்றைய நடைமுறை போல இல்லாமல், விவாகரத்து பெறுவதற்கு சட்டபூர்வ விதிகள் மற்றும் நடைமுறை அந்த காலத்தில் இல்லை.

பொதுவாக கணவன் – அல்லது வழக்கத்திற்கு மாறாக மனைவி – விவாகரத்து பெறுவதாக கூறும்போது அவர்களின் மண வாழ்க்கை முறிவதாகவே கருதப்பட்டது.

பெற்ற மகளின் சார்பில் அவரது தந்தையே கூட விவாகரத்து பெறும் முடிவை அறிவிக்கலாம் என்ற வழக்கமும் அப்போது இருந்துள்ளது. அந்த வகையில் பெண் திருமணமான பிறகும் அவரது பாதுகாவலராக அவரது தந்தையே இருந்திருக்கிறார். இதன் மூலம் பெண்ணுக்கு திருமணத்தின்போது வரதட்சணையை திரும்பக் கோரும் ஏற்பாடுகள் எளிமையாகின.

இதிலும் ஒரு வாய்ப்பை அந்த காலத்துக்கு ரோமானிய கணவன்கள் கண்றிந்திருந்தனர். ஆதாவது, தங்களுடைய இல்வாழ்வுக்கு துரோகம் செய்யும் வகையில் தகாத உறவை தனது மனைவி கொண்டிருந்தால், அவரை விவாகரத்து செய்யும்போது திருமணத்தின்போது வழங்கப்பட்ட வரதட்சணையை அந்த கணவரே வைத்துக் கொள்ளலாம் என்று சில கணவன்கள் கோரி வந்துள்ளனர்.

ரோமானிய சட்ட அமைப்பு விவாகரத்து ஏற்பட்டால் தாய்க்கு ஆதரவாக இருப்பதை விட தந்தைக்கு சாதகமாக இருப்பதால் பெண்கள் சில சமயங்களில் தங்கள் கணவரை விட்டு பிரியாமல் தவிர்த்துள்ளனர்.

இதற்கு பேரரசர் அகஸ்டஸின் மகள் ஜூலியா மற்றும் அவரது தாயார் ஸ்க்ரிபோனியாவின் வரலாறை குறிப்பிடலாம். ஜூலியா புதிதாகப் பிறந்தபோது பேரரசரின் மூன்றாவது மனைவி லிவியாவுக்கு ஆதரவாக ஸ்க்ரிபோனியா பேரரசால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

ஜூலியா பின்னர் கலகத்தனமான நடத்தையின் காரணமாக அவரது தந்தையால் நாடு கடத்தப்பட்டபோது, ஸ்க்ரிபோனியா தானாக முன்வந்து தனது வளர்ந்த மகளுடன் வென்டோடீன் தீவுக்கு (ரோமன் காலத்தில் பாண்டடேரியா என்று அழைக்கப்பட்டது) சென்று வாழ்ந்தார்.

ரோமானிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

4. முரட்டுத்தனமாக அழகை பராமரித்த பெண்கள்

ரோமானியப் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அழுத்தத்திற்கு ஆளானார்கள். அதன் ஒரு பகுதியாக, ஒரு பெண்ணின் தோற்றம் அவளுடைய கணவனைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

அதே நேரத்தில் பெண்கள் அழகுக்கான இளமையை பல வழிகளில் பேண முயன்றனர். அவ்வாறு செய்ததற்காக அவர்கள் கேலி செய்யப்பட்டனர்.

பண்டைய ரோமில் அழகுசாதன தொழில் செழிப்பாக இருந்தது. நொறுக்கப்பட்ட ரோஜா இதழ்கள் அல்லது தேன் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைப் பொருட்களை சில சமையல் வகையில் பயன்படுத்தப்பட்டன.

புருவங்களை உயர்த்தும் சிகிச்சை, கோழி கொழுப்பு மற்றும் வெங்காயம் பயன்படுத்தி பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள், நரை முடியை மறைக்க நொறுக்கப்பட்ட மண்புழுக்கள் மற்றும் எண்ணெய் கலவை தடவும் சிகிச்சை பயன்படுத்தப்பட்டது.

வேறு சில எழுத்தாளர்கள் அந்த காலத்தில் முதலையின் சாணத்தை பெண்கள் ஒரு வகையான முரட்டுத்தனமாகப் பயன்படுத்தியதாக குறிப்பிடுகின்றனர். இத்தகைய நடைமுறைகள், இளமையை பேண விரும்பும் பெண்களின் பலனற்ற முயற்சிகளைக் கேலி செய்யும் நையாண்டியாளர்களின் குறும்புத்தனமான கண்டுபிடிப்புகளாகக் கூட இருக்கலாம்.

ஆனால் சில அழகு சாதனப் பொருட்களுக்கான சமையல் குறிப்புகள் உண்மையில் சற்றே விநோதமானவை என்பது தொல்பொருள் கண்டுபிடிப்புகளிலிருந்து தெளிவாகிறது.

2003இல் லண்டனில் ஒரு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய அழகுசாதன கொள்கலனில் 2,000 ஆண்டுகள் பழமையான ரோமானிய முக கிரீம் எச்சங்கள் இருந்தன. ஆய்வு செய்தபோது, அது விலங்குகளின் கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவற்றின் கலவையில் இருந்து தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.

ரோமானிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

5. குறிப்பிட்ட அளவு வரை கல்வியில் கொண்ட நம்பிக்கை

ரோமானிய காலத்தில் பெண்களின் கல்வி ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. ரோமானிய உயர் மற்றும் நடுத்தர வகுப்புகளில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு வாசிப்பு மற்றும் எழுதும் அடிப்படைத் திறன்கள் கற்பிக்கப்பட்டன.

சில குடும்பங்கள் மேலும் முன்னேறி, தங்கள் மகள்களுக்கு மிகவும் மேம்பட்ட இலக்கணம் அல்லது கிரேக்க மொழியைக் கற்பிக்க தனியார் ஆசிரியர்களை நியமித்தனர்.இவை அனைத்தும் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணின் எதிர்கால பங்கை எளிதாக்குவதற்கும், அவளை அதிக கல்வியறிவு கொண்டவளாகவும் உருப்பெறும் தகுதியை வளர்க்கும் என குடும்பத்தினர் கருதினர்.

இயல்பாகவே அவள் கணவனுக்கு துணையாக இருக்க அந்தத் தகுதி உதவி செய்யும் என நம்பப்பட்டது. பெண்களால் எழுதப்பட்ட சில எழுத்துக்கள் மட்டுமே பழங்காலத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு ரோமானிய பெண்கள் முற்றிலுமாக எழுதவில்லை என்று பொருள் கொள்ள முடியாது.

ஹட்ரியனின் சுவரில் உள்ள ரோமானிய கோட்டையான விண்டோலண்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கிடையேயான கடிதங்கள், எல்லையில் அந்தக்காலத்தில் நீடித்த வாழ்க்கையின் பரபரப்பான சமூகக் காட்சியை விளக்குகின்றன. மேலும் நீரோவின் தாயார் அக்ரிப்பினா தி யங்கர் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். ஆனால், அது வழி, வழியாக பராமரிக்கப்படாததால் வரலாற்றாய்வாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

அதே சமயம், அதிகமாக கல்வி கற்பது ஒரு பெண்ணை பாசாங்குத்தனமான செயல்களைக் கொண்டவளாக மாற்றும் என்று பல ரோமானியர்கள் நம்பினர். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், அறிவார்ந்த சுதந்திரம் என்பது பாலுறவு முடிவை எடுப்பதற்கு இணையாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.

ஆயினும்கூட, சில உயர் குடும்பங்கள் தங்கள் மகள்களை வழக்கத்திற்கு மாறாக படித்த ஆளுமையை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தன. குறிப்பாக குடும்பம் அறிவுசார் சாதனைகளை பதிவுசெய்திருந்தால். சிசரோவின் சிறந்த அரசவை போட்டியாளரான ஹார்டென்சியஸின் மகள் ஹார்டென்சியா இதற்கு மிகவும் பிரபலமான உதாரணம்.

ஒரு பேச்சாளராக தனது திறமைகளுக்காக கொண்டாடப்பட்ட மிகச் சில ரோமானிய பெண்களில் இவரும் ஒருவர் . கிமு 42 இல், ஹார்டென்சியா ரோமானிய மன்றத்தில் பேச்சாளர் மேடையில் நின்று, போருக்குச் செலுத்த உதவுவதற்காக ரோமின் பணக்காரப் பெண்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பைக் கண்டித்து உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்கிறது வரலாறு.

6. கணவரின் அரசியல் பிரசாரங்களில் முக்கிய பங்கு

ரோமானிய பெண்களால் அரசியல் பதவிக்கு தாங்களாகவே போட்டியிட முடியாது ஆனால் அவர்களால் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதில் பங்கு வகிக்க முடியும். பாம்பீயின் சுவர்களில் இருந்து வரும் கிராஃபிட்டி காட்சிகள், சில வேட்பாளர்களுக்கு ஆதரவை வலியுறுத்தும் பெண்களின் நிலைக்கு சான்று கூறுகின்றன. இதற்கிடையில், அரசியல்வாதிகளின் மனைவிகள், நவீன கால அதிபர் மற்றும் பிரதமர் போன்றோரின் வாழ்க்கைத் துணைகளுடன் ஒப்பிடமுடியாத ஒரு பாத்திரத்தை வகித்தனர். தங்கள் கணவர்களின் ‘குடும்ப’ படத்தை பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தினர். பெரும்பாலான ரோமானிய பேரரசர்கள் தங்கள் மனைவிகள், சகோதரிகள், மகள்கள் மற்றும் தாய்மார்களுடன் தங்களைப் பற்றிய சிறந்த படங்களை பேரரசு முழுவதும் பரவச் செய்தனர்.

நாணயங்கள் மற்றும் சிற்ப உருவப்படங்கள் ரோமின் ‘முதல் குடும்பத்தை’ ஒரு இணக்கமான, நெருக்கமான சமூகம் என முன்வைக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. அகஸ்டஸ் ரோமின் முதல் பேரரசராக ஆனபோது, ​​விலையுயர்ந்த ஆடைகளுக்குப் பதிலாக, தனது மனைவி வீட்டார் தனக்காகத் தயாரித்த எளிய கம்பளி கவுன்களை அணிய விரும்புவதாகத் தெரிவித்ததன் மூலம், அவர் மக்களின் மனிதனாகவே இருக்கிறார் என்ற மாயையைப் பாதுகாக்க முயன்றார்.

ஒரு கடமையாற்றும் ரோமானியனுக்கு கம்பளி துணி தயாரிப்பது சிறந்த பொழுதுபோக்கு என அந்த காலத்தில் கருதப்பட்டதால், அந்த செயல்பாடு ஏகாதிபத்திய குடும்பத்தின் பிம்பத்தை உடைக்க உதவியது.ரோமானிய அரசியல்வாதிகள் மற்றும் பேரரசர்களின் மனைவிகள் மற்றும் பிற பெண் உறவினர்கள் நேர்மையுடன் வாழ்ந்தால் மட்டுமே அரச சொத்துகளை அனுபவிக்க முடியும் என்ற நிலை அந்த காலத்தில் இருந்துள்ளது. கிமு 18இல் தகாத உறவுக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றிய அகஸ்டஸ், பின்னர் அதே குற்றச்சாட்டின் பேரில் தனது சொந்த மகள் ஜூலியாவை நாடுகடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

7. கணவரின் அரசியல் வாழ்வில் பங்களிப்பு வழங்கிய பெண்கள்

ரோமானிய பேரரசு

பட மூலாதாரம், Getty Images

ரோமானியப் பேரரசிகள் அனைவரும் வசைப்பாடுபவர்கள் மற்றும் விஷமிகள் அல்ல. ரோமின் பேரரசிகள் நீண்ட காலமாக இலக்கியம் மற்றும் திரைப்படம் இரண்டிலும் விஷமிகள் மற்றும் நிம்போமேனியாக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் தங்களுடைய கணவரின் லட்சியங்களுக்குத் தடையாக இருப்பவர்களை அகற்ற எதையும் செய்வார்கள். அகஸ்டஸின் மனைவி லிவியா, திருமணமான 52 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து பறிக்க விரும்பிய பச்சை அத்திப்பழங்களில் விஷம் ஊற்றி அவரைக் கொன்றதாக பரவலாக கூறப்படுகிறது.

அக்ரிப்பினா தனது வயதான கணவர் கிளாடியஸுக்கு எதிராக இதேபோன்ற செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது காளான்களின் இரவு உணவில் ஒரு கொடிய நச்சுத்தன்மை திரவத்தை அவர் கலக்கச் செய்தார் என்ற கூற்று உள்ளது.

அக்ரிப்பினாவின் முன்னோடியான மெசலினா – கிளாடியஸின் பதின்ம வயது மூன்றாவது மனைவி – முதன்மையாக தனது எதிரிகளின் மரணத்திற்கு கட்டளையிட்டதற்காக பிரபலமாக அறியப்படுபவர்.

ஆனால் அகஸ்டஸின் மரணம் பற்றிய பிற ரோமானிய வரலாற்றுக் குறிப்புகள், லிவியாவை சூழ்ச்சிக்காரி என்றோ விஷம் வைத்து கணவரை கொன்றவர் என்றோ சித்தரிக்கவில்லை. ஆனால் ஒரு அர்ப்பணிப்பு மற்றும் துக்கத்தால் பாதிக்கப்பட்ட கைம்பெண் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், லிவியா மற்றும் அக்ரிப்பினா மட்டுமின்றி, டிராஜனின் மனைவி புளோட்டினா மற்றும் டொமிஷியனின் மனைவி டோமிஷியா போன்ற பிற ரோமானியப் பேரரசிகள் தங்கள் கணவர்களின் மரணத்தில் உள்ள தொடர்புக்கு சில ஒற்றுமைகள் உள்ளன.சக்கரவர்த்தியின் மனைவிகளை நச்சுத் துரோகிகளாகவும் சதிகாரர்களாகவும் சித்தரிக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட கதைகள் உண்மையில் இந்த பெண்கள் பேரரசர்களின் காலத்தில் அதிகாரத்தின் இதயத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்ற கவலையைப் பற்றி பேசுகிறது.

ரோமானிய செனட்டில் ஒரு காலத்தில் அதிகாரம் இருந்த இடத்தில், இப்போது பெண்கள் ஒரு குடும்பத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். அது அரசாங்கத்தின் மையமாகவும் இருந்தது. இந்த வரலாற்று உண்மையை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »