Press "Enter" to skip to content

வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?

  • அபுல் கலாம் ஆசாத்
  • பிபிசி பங்களா, டாக்கா

பட மூலாதாரம், Getty Images

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வங்கதேசத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

பைடன் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக கேந்திர சூழலில் ஏற்பட்ட மாற்றமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 2021 ‘ஜனநாயக மாநாட்டிலிருந்து’ வங்கதேசத்தை அமெரிக்கா ஒதுக்கி வைத்தது. வங்கதேசத்தின் அதிவிரைவுப்படை (RAB) மற்றும் பல அதிகாரிகள் மீது மனித உரிமைகள் தினத்தன்று (டிசம்பர் 10) அமெரிக்கா தடை விதித்தது.

இது தவிர, வங்கதேச எழுத்தாளர் அபிஜீத் ராயைக் கொன்று தப்பியோடிய கொலையாளிகளைப் கண்டுபிடிப்பதில் தகவல் கொடுத்து உதவுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ 37 கோடி) வெகுமதி வழங்கப்படும் என்றும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அறிவித்தது.

இது போன்ற பல காரணங்களால் தற்போது அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவு குறித்து நிறைய விவாதங்கள் எழுந்துள்ளன. வங்கதேசத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்கா ஏன் குரல் கொடுக்கிறது என்று நிபுணர்கள் மத்தியில் நிறைய ஆர்வம் உள்ளது.

பேராசிரியர் ருக்சானா கிபரியா

அமெரிக்கா எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகளை, வங்கதேசத்துடனான அதன் உறவுகளில் நிலவும் பதற்றமாக பலர் பார்க்கிறார்கள்.

“இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கலான திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு வல்லரசாகும். எனவே இந்த விவகாரம் வெளியில் வந்ததும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க அரசு பல விவகாரங்கள் தொடர்பாக வங்கதேசத்தின் மீது வெளிப்படையாகவே கோபமாக உள்ளது,” என்று சர்வதேச விவகாரங்கள் நிபுணரான பேராசிரியர் ருக்சானா கிபரியா கூறினார்.

அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அவை அரசியல் நோக்கத்திலானது என்றும் அவர் கூறுகிறார்.

“பைடன் நிர்வாகத்தின் சமீபத்திய முடிவைப் பார்க்கும்போது, அதன் கொள்கை தெளிவாக மாறுகிறது என்று நாம் கூறலாம். வங்கதேசத்தில் நடக்கும் பல விஷயங்கள் தொடர்பாக அமெரிக்கா மகிழ்ச்சியாக இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம்,” என்கிறார் கிபரியா.

அமெரிக்காவின் சமீபத்திய முடிவை வங்கதேசம் மீதான அதன் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமாக பலர் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

உறவுகள் வலுவிழந்துவிட்டதா அல்லது அமெரிக்க கொள்கை மாறிவிட்டதா?

அமெரிக்காவின் சமீபத்திய முடிவுகள் வங்கதேசத்துடனான அதன் உறவுகளின் வலுவிழப்பாக பார்க்கப்படாமல், அதன் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பைடன் நிர்வாகம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் வைத்துள்ளது என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியின், ‘ நிர்வாகம் மற்றும் அரசியல்’ பாடப்பிரிவின் பிரபல பேராசிரியரான அலி ரியாஸ் நம்புகிறார். எவ்வாறாயினும், இந்த கொள்கையானது தேசிய நலன் மற்றும் பாதுகாப்பிற்காக செயல்தந்திர ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

“பைடன் நிர்வாகம் மனித உரிமைகளின் ஜனநாயக விழுமியங்களை தொடர்ந்து மதிப்பதாகக் கூறுகிறது. அமெரிக்காவிற்கு சில வெளியுறவுக் கொள்கை சிக்கல்கள் உள்ளன. தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் அதன் உத்தி. அமெரிக்கா இரண்டு விஷயங்களைச் செய்ய முயற்சிக்கிறது. முதலாவது மனித உரிமைகள் அல்லது ஜனநாயகம். இரண்டாவதாக பைடன் நிர்வாகம் ஆரம்பத்தில் இருந்தே ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்துகிறது,”என்று அவர் தெரிவித்தார்.

“இதன் மூலம் அமெரிக்கா, சீனாவை ஒரு முக்கிய போட்டியாளராக உருவாக்கி, சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கை நிறுத்த முயற்சிக்கிறது. அதனால்தான் அமெரிக்கா பல நாடுகளின் அரசுகள் மீது நெருக்குதல் கொடுக்கிறது.”என்று மருத்துவர் ரியாஸ் கூறுகிறார்.

“வங்கதேசத்தின் மீது சீனா ஒருவித செல்வாக்கைச் செலுத்துகிறது. இதை அமெரிக்கா கருத்தில் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. எனினும் வங்கதேசத்தை தனிமைப்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை. குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கவில்லை. வங்கதேசம் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெளிவான சமிக்ஞையை அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில், வங்கதேசம் தன்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சீனாவை தடுப்பதே முக்கிய நோக்கமா?

ரஃபிக் தோசானி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட RAND கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆசிய-பசிஃபிக் கொள்கை மையத்தின் இயக்குநர்.

பட மூலாதாரம், ZOOM

வங்கதேசத்தின் மீதான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புவிசார் அரசியல் பார்வையில் முக்கியமானது என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ‘ராண்ட் கார்ப்பரேஷன்’ இன் ஆசிய-பசிஃபிக் கொள்கை மையத்தின் இயக்குனர் ரஃபிக் தோசானி நம்புகிறார்.

வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகமும், அதன் அருகில் உள்ள சிட்வே துறைமுகமும் வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் சீனாவுக்கு முக்கியமானவை என்கிறார் தோசானி.

அமெரிக்காவின் கொள்கை மற்றும் வங்கதேசம் மீதான அதன் அணுகுமுறையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முக்கிய குறிக்கோள், சீனாவை தடுத்து நிறுத்துவதாகும். இந்த விஷயத்தில் வெளியுறவுக் கொள்கையை அணுகும் முறையை பைடன் நிர்வாகம் மாற்றியுள்ளது,” என்கிறார் அவர்.

“இரண்டு சக்திகளில் ஒன்றை தேர்வு செய்ய வங்கதேசம் தயாராக இல்லை. ஆனால், வங்கதேசம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இந்த விஷயத்தில் வங்கதேசம் சிக்கிக்கொண்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.” என்று ரஃபிக் தோசானி கூறினார்.

“இது வங்கதேசத்தின் நெருக்கடி மட்டுமல்ல. முழு ஆசியாவும் இந்த சிக்கலை எதிர்கொள்கிறது. நீங்கள் என்னுடன் இருக்கிறீகள் அல்லது எனக்கு எதிராக இருக்கிறீர்கள் என்ற முறையை அமெரிக்கா இந்த நேரத்தில் பின்பற்றுகிறது. இதுதான் அங்கு நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.”என்று அவர் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் காரணங்களுக்காக தெற்காசியாவில் வங்கதேசம் முக்கியமானது

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசம் இந்தியாவை சார்ந்து இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை

புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில், வங்கதேசம் தெற்காசியாவில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அங்கு ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளபோதிலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா நீண்ட காலமாக மௌனம் சாதித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவின் ஆதரவையும் வங்கதேசம் பெற்றுள்ளது. இருப்பினும், வங்கதேசம் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தை இந்தியா மீதான அமெரிக்காவின் கொள்கையின் மாற்றமாகவும் மருத்துவர் அலி ரியாஸ் பார்க்கிறார்.

“வங்கதேச விவகாரம் இந்தியாவை மையமாகக் கொண்டது என்று நான் நினைக்கிறேன். இது வங்கதேசத்தின் விவகாரம் மட்டுமல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தவிர, இலங்கை, மாலத்தீவுகள், நேபாளம் போன்ற தெற்காசியாவின் நாடுகள் தொடர்பாகவும் அமெரிக்கா மறுபரிசீலனை செய்கிறது என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதை அமெரிக்கா குறைக்க விரும்புகிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்றும் அது விரும்புகிறது,”என்று தோசானி கூறுகிறார்,

“சீனாவை இந்தியா கையாளும் விதம் குறித்து அமெரிக்கா அதிருப்தியுடன் உள்ளது,” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »