Press "Enter" to skip to content

சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் ஷியான் நகரிலிருந்து சில குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டு பின் தனிமைப்படுத்துதல் முகாமில் அடைக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஷியான் நகரில்தான் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக பரவிவருகிறது. எனவே அங்கு அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அந்த நகரின் மக்கள்தொகை சுமார் 13 மில்லியன் ஆகும். ஷியான் நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட மக்கள் வெளியில் வர அனுமதியில்லை.

சந்திர புத்தாண்டு மற்றும் அந்நாட்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் கொரோனா தொற்று பரவலை அழிக்க வேண்டும் என அதிகாரிகள் செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஷியான் நகரில் விதிக்கப்பட்டுள்ள அதீத கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அங்குள்ள மக்களுக்கு அதிகாரிகள் இலவச உணவு வழங்கி வருகின்றனர் ஆனால் சிலர் அது போதவில்லை என்றும், அல்லது தங்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஷியான் நகரின் தெற்கு பகுதியில் உள்ள மிங்டே 8 யிங்லி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் ஜனவரி ஒன்றாம் தேதி இரவு தங்கள் வீட்டைவிட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

அந்த பகுதியில் சமீபமாக கொரோனா தொற்று ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கொரோனா பரிசோதனையின்போது மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சீன ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.

எத்தனை பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அந்த குடியிருப்பு பகுதிக்கு வெளியே 30 பேருந்துகள் இருப்பதை கண்டதாக ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். மற்றொருவர் 1000 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

பலர் தாங்கள் பேருந்துகளிலேயே பல மணிநேரம் காக்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து ஒன்றிற்காக இரவு நேர குளிரில் முதியவர் ஒருவர் காத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அது குறித்து பலர் தங்களின் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

சிலர் தனிமைப்படுத்தல் முகாமில் போதைய வசதி இல்லை என்றும் அங்கு போதைய உணவு வழங்கப்படவில்லை என்றும் குளிராகவுள்ளது என்றும் அதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

“இங்கு எதுவும் இல்லை, யாரும் எங்களை கவனித்து கொள்ள வரவில்லை. இது என்னமாதிரியான தனிமைப்படுத்துதல்? அவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்களை இங்கு அழைத்து வந்துள்ளனர் அதுவும் இரவில். இங்குள்ளவர்களில் பலர் முதியோர் மற்றும் குழந்தைகள். அவர்கள் போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை. எங்களை மிக கவனக்குறைவாக இங்கு விட்டுவிட்டனர்” என பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். “குடியிருப்புவாசிகள் ஏற்கனவே இரு வாரங்களுக்கு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தபோது இப்படி ஏன் நள்ளிரவில் அழைத்து செல்ல வேண்டும்,” என வீய்போவில் கேள்வி எழுப்பியுள்ளனர்?

அரசு மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது

பட மூலாதாரம், Reuters

கடந்த வாரம்வரை குடியிருப்புவாசிகள் உணவு வாங்குவதற்காக வெளியில் செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அதன்பிறகு கோவிட் பரிசோதனை செய்து கொள்ள மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்று அதிகாரிகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கினர்.

ஷியான் நகரில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் தற்போதுவரை 1,600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால் ஏற்படும் பதற்றங்களில் இந்த சமீபத்திய சம்பவமும் அடங்கும்.

கடந்த வாரம் உணவுப் பொருள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு நபரை தொற்று நோய் தடுப்பு அதிகாரிகள் தாக்கும் காணொளி சமூக ஊடகத்தில் சமீபத்தில் மிகுதியாக பகிரப்பட்டது. அதன்பின் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டதாக நகர நிர்வாகம் தெரிவித்தது.

ஷியான் நகரில் அனைவருக்கும் உணவு கிடைக்கும் என அரசு உறுதியளித்திருந்தது. அப்போதிலிருந்து தாங்கள் பெற்று வரும் உணவின் புகைப்படங்களை அங்குள்ளவர்கள் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »