Press "Enter" to skip to content

உலகில் முதல் முறை – ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தை மதிப்பில் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவானான  ஆப்பிள் நிறுவனம், பங்கு சந்தை மதிப்பீட்டில்  மூன்று  ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 225 லட்சம் கோடி ரூபாய்.

கடந்த 2007ஆம் ஆண்டு, இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள்  தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ்  முதல் ஐகைபேசியை அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, இதன் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5,800 சதவீதம்  உயர்ந்துள்ளது.

ஆனால்,  இந்த சாதனையில் இருந்து  இதன் மதிப்பு சற்று  குறைந்து, நியூ யார்க்கில் திங்கட்கிழமையன்று நடந்த வணிகத்தில் 2.99 ட்ரில்லியன் டாலராக முடிந்துள்ளது.

தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கின் போது அதிகரித்த நிலையில், பெருந்தொற்று காலத்தில், அதிக வருமானம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றானது ஆப்பிள்.

“மூன்று ட்ரில்லியன் டாலர்களை எட்டியது ஆப்பிள் நிறுவனத்திற்கு வரலாற்று சாதனைப் படைத்த தருணம்; ஏனெனில், இந்த நிறுவனத்தின் மீது சந்தேகிப்பவர்களின் எண்ணம் தவறு என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறது,” என வெட்பூஷ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டான் இவ்ஸ் கூறுகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பீடு 2 ட்ரில்லியன் டாலர்களிலிருந்து 3 ட்ரில்லியன் டாலர்களாக ஆக உயர  கிட்டத்தட்ட 16 மாதங்கள் மட்டுமே ஆனது. இதற்கு காரணம்,  ஊரடங்கின் போது மக்கள் திறன்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகளை அதிகம் சார்ந்து இருந்ததால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவை அதிகரித்தது.

முன்னதாக, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  பங்குச் சந்தை மதிப்பீட்டில்  ஒரு ட்ரில்லியன் டாலர்களை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றது.

பொதுவாக, நிறுவனத்தின் மொத்த விற்பனையில் ஏறக்குறைய பாதி விற்பனைக்கு ஐபோன் பங்களிக்கிறது.  அதே நேரத்தில், ஐபாட், டேப்லெட்டுகள் மற்றும் மேக் கணினிகளுக்கும் இந்நிறுவனம் பெயர் பெற்றது.

Apple 1

பட மூலாதாரம், Getty Images

ஆப்பிள் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்படும் மென்பொருள்,  ஐ க்ளோட்  (iCloud) வழியாக சேமிப்பிடம், இசை, தொலைக்காட்சி மற்றும் உடற்பயிற்சி சந்தா தளங்கள் போன்ற சேவைகள் ஆகியவை இந்நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்கும் முக்கிய அம்சங்களாகும்.  

“ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பீட்டின் மறு தரவரிசைக்கு  அச்சாணியாக இருப்பது அதன் சேவை வணிகமாகவே உள்ளது. இது 1.5 டிரில்லியன் டாலர்கள்  மதிப்புடையது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று இவ்ஸ் கூறினார்.

கடந்த ஆகஸ்டு மாதம் , ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக், அந்நிறுவனத்தில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பங்குகளைப் பெற்றார். அப்போது, அவர் பணியில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.

அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்யும் ஒரு நிறுவனம், அவர் பெரும்பாலான பங்குகளை 750 மில்லியனுக்கும் அதிகமாக விற்றதாகக் காட்டியது.

இது ஸ்டீவ் ஜாப்ஸிடம் இருந்து அவர் பொறுப்பேற்றபோது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.  

எஸ் அண்ட் பி 500 பங்குக் குறியீட்டில் (S&P 500 stock index) உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிள் பங்குகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டன என்பதை ஒப்பிட்டு அவருக்கு பங்குகள் வழங்கப்பட்டன..

கலிஃபோர்னியாவின் க்யூபெர்டினோ நகரத்தில் 1976ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜாப்ஸ், அவரது வணிக கூட்டாளிகளான ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோரால் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டது.

1980ஆம் ஆண்டு சந்தை மதிப்பீட்டில், இந்நிறுவனம் 1.8 ட்ரில்லியன் டாலர்களுடன் பங்குச் சந்தையில் அறிமுகமானது.

கடந்த நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த ஏலத்தில், ஜாப்ஸும், வோஸ்னியாக்கும்  இணைந்து தயாரித்த முதல் ஆப்பிள் கணினிகளில் ஒன்று,  4 லட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »