Press "Enter" to skip to content

நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம் – பெண் மருத்துவரின் ஆச்சர்ய அனுபவம்

  • மேக்ஸ் மாட்சா
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், AISHA KHATIB

கத்தாரில் இருந்து உகாண்டாவுக்கு சென்ற விமானம் ஒன்றில் இரவோடு இரவாக குழந்தை ஒன்றை பிரசவிக்க உதவியது குறித்து தமது மகிழ்ச்சியை கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது டிசம்பர் 5ஆம் தேதியே நடந்த நிகழ்வாக இருந்தாலும், தமது பணிச்சுமை காரணமாக சமீபத்தில்தான் இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார் அந்த மருத்துவர்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மருத்துவர் ஆயிஷா கதீப் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இருந்து உகண்டாவின் என்டபீ நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விமானத்தில்தான் சௌதி அரேபியாவில் பணியாற்றும் உகாண்டா பெண்மணி ஒருவர் தமது முதல் குழந்தையை பிரசவித்துள்ளார்.

கருவான 35 வாரத்தில் பிரசவம் ஆகியுள்ள இந்த குழந்தைக்கு ‘மிராக்கிள் ஆயிஷா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டொராண்டோவில் பணியாற்றிவரும் மருத்துவர் ஆயிஷா விமானப் பயணத்தின்போது ஓய்வாக இருந்தார்.

அப்பொழுது அங்கு மருத்துவர்கள் யாரும் உள்ளனரா என்று விமான ஊழியர்கள் இன்டர்காம் மூலம் கேட்டனர். உடனே சிகிச்சை தேவைப்படும் பெண்ணின் இருக்கைக்கு அருகில் சென்றார் ஆயிஷா.

”அந்தப் பெண்ணைச் சுற்றிலும் மக்கள் கூட்டமாக நின்றனர். அப்பொழுது மாரடைப்பு போன்ற ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை இருப்பதாக நான் கருதினேன்,” என்று பிபிசியிடம் பேசிய மருத்துவர் ஆயிஷா தெரிவித்தார்.

ஆனால் அருகில் சென்று பார்த்த போதுதான், அங்கு ஒரு பெண்மணி பிரசவ வலியில் இருப்பதையும் குழந்தை வெளியே வந்து கொண்டிருப்பதையும் ஆயிஷா பார்த்தார்.

இந்த பிரசவத்திற்கு மருத்துவர் ஆயிஷாவுக்கு உதவ அங்கு வேறு இரண்டு மருத்துவ ஊழியர்களும் இருந்தனர்.

The mother was brought to sit in business class after giving birth

பட மூலாதாரம், Aisha Khatib

அதே விமானத்தில் இருந்த புற்று நோய்களுக்கான செவிலியர் ஒருவர் மற்றும் ‘மருத்துவர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ அமைப்பை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் ஆகியோரின் உதவியுடன் மருத்துவர் ஆயிஷா உகாண்டா பெண்மணிக்கு பிரசவம் பார்த்தார்.

குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையை குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிசோதிக்க கொடுத்துவிட்டார் மருத்துவர் ஆயிஷா.

”நான் குழந்தையைப் பார்த்தேன்; அவள் நல்ல உடல் நலத்துடன் இருந்தாள். பின்பு தாயைப் பார்த்தேன்; அவரும் நன்றாக இருந்தார்,” என்று மருத்துவர் ஆயிஷா கூறினார்.

”நான் ‘வாழ்த்துகள்! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’ என்று குழந்தையின் அம்மாவிடம் கூறிய பொழுது விமானத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அப்பொழுதுதான் நான் ஒரு விமானத்தில் இருப்பதையும், அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தேன்,” என்றார்.

”எனது பெயரையே குழந்தைக்கும் சூட்டுவது தான் மிகவும் சிறப்பானது,” என்று கூறிய ஆயிஷா அரபு மொழியில் ஆயிஷா என்று எழுதப்பட்டிருந்த தங்க நெக்லஸ் ஒன்றையும் தமது பெயரை சூட்டப்பட்ட குழந்தையான மிராக்கிள் ஆயிஷாவுக்கு வழங்கினார்.

35,000 அடி உயரத்தில் நைல் நதிக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது தனது தம்மை பிரசவித்த மருத்துவரின் சிறு நினைவுச் சின்னமாக அக்குழந்தை அதை வைத்திருப்பாள் என்று மருத்துவர் ஆயிஷா கூறினார்.

நல்வாய்ப்பாக அதே விமானத்தில் இன்னொரு மருத்துவர் இருந்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உகாண்டா மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தபின் டிசம்பர் 18ஆம் தேதி கனடா திரும்பியுள்ளார் மருத்துவர் ஆயிஷா. அந்த விமானப் பயணத்தின்போதும் ஒரு பயணிக்கு நடுவானில் அவசர சிகிச்சை அளித்துள்ளார் ஆயிஷா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »