Press "Enter" to skip to content

வீகர் இஸ்லாமிய சிறுபான்மையினர் குறித்து அக்கறை இல்லை – முன்னாள் ஃபேஸ்புக் அதிகாரி கருத்துக்கு கடும் விமர்சனம்

பட மூலாதாரம், Reuters

தானும், பெரும்பாலான அமெரிக்கர்களும் சீனாவில் உள்ள வீகர் சிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து கவலைப்படுவதில்லை என கூறியதற்காக, பில்லியனர் முதலீட்டாளர் சமத் பலிஹபிடியா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

சான் பிசான்சிஸ்கோ கூடைப்பந்தாட்ட அணியின் பகுதி உரிமையாளரான சமத் பலிஹபிடியா, இந்த பிரச்சனை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செயல்பாடுகள் அவருக்கு அரசியல் ரீதியில் உதவியதா? என்பது குறித்து பாட்காஸ்ட் விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி ஒரு கருத்தைக் கூறினார்.

இக்கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தான் கூறிய கருத்தில் அனுதாபமில்லாமல் இருந்தது என அவரே பின்னர் ஒப்புக் கொண்டார்.

வீகர் இஸ்லாமியர்கள் விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த “முக்கிய பிரச்சனைகளுக்கு முக்கிய விவாதங்கள் தேவை” என தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் “சீனாவிலோ, அமெரிக்காவிலோ அல்லது உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் மனித உரிமைகள் முக்கியம்” என தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“மக்கள் மன்னிப்பு கோரும் போது, அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். சமத்தால், தான் கூறிய கருத்து எப்படி வீகர் சமூக மக்களை காயப்படுத்தியது என்று கூட ஒப்புக் கொள்ள முடியவில்லை எனும் போது இதை ஒரு மன்னிப்பாக என்னால் பார்க்க முடியவில்லை. கார்ப்பரேட் நிர்வாகிகள் தங்களை ஆதரிப்பார்கள் என்பதை சீனா அறிந்து கொண்டு இனப்படுகொலைகளைத் தொடரும்” என்று மனித உரிமைகள் வழக்குரைஞர் ரயன் அசட் தன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில், இஸ்லாமிய வீகர் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை, சீனா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் சீனா அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான சமத் பலிஹபிடியா, தற்போது முக்கிய வெஞ்சர் முதலீட்டாளராக இருக்கிறார்.

‘ஆல் இன்’ என்கிற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், வீகர் சிறுபான்மையினர் பிரச்சனை தொடர்பாக அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாடு குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்ட போது “நாம் உண்மையாக இருப்போம், வீகர் இஸ்லாமியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. சரி தானே? நீங்கள் இது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள், காரணம் நீங்கள் அது குறித்து உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள். அக்கறை செலுத்துவது அருமை என்று நான் கருதுகிறேன்… எங்களைப் போன்ற மற்றவர்கள் அது குறித்து கவலைப்படுவதில்லை. நான் கசப்பான உண்மையைக் கூறுகிறேன்” என்றார்.

மனித உரிமைகள் பிரச்சனை குறித்தும், கட்டாய உழைப்பு கோரும் சட்டம் தொடர்பாக பிரசாரங்களை மேற்கொண்டு வெளிப்படையாகப் பேசி வரும் பாஸ்டன் செல்டிக்ஸ் அணியைச் சேர்ந்த ஈனஸ் கன்டர் (Enes Kanter) என்பவரும் தன் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். “இனப்படுகொலைகள் நடக்கும் போது, இவரைப் போன்ற மக்கள் தான் நடக்கவிடுகிறார்கள்” என்றும் கூறினார் ஈனஸ்.

கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் என்கிற கூடைப்பந்தாட்ட அணி சமத் பலிஹபிடியாவிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு அறிக்கையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. சமத் அந்த கூடைப்பந்தாட்ட அணியில் 10% பங்குகளை வைத்திருக்கிறார். அவர் அணியின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் கூறியுள்ளது.

அதில் “சமத் எங்கள் அணி சார்பாக பேசவில்லை. அவரது கருத்துக்கள் எங்கள் அமைப்பின் கருத்தை நிச்சயமாக பிரதிபலிக்கவில்லை” என்று கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »