Press "Enter" to skip to content

ஏமன் சிறை மீது சௌதி கூட்டணி விமானத் தாக்குதல்: 70 பேர் பலி, ஐ.நா. கண்டனம்

பட மூலாதாரம், EPA

ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை ஐ.நா. கண்டித்துள்ளது.

இந்த தடுத்துவைப்பு மையம் (அல்லது சிறைக்கூடம்), ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளது.

போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்படவேண்டும் என்று கூறிய ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வெள்ளிக்கிழமை நடந்த விமானத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டார்.

ஏமனில் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணி நாடுகள் 2015 முதல் போராடி வருகின்றன.

2015 முதல் ஹூதி அமைப்புக்கு எதிராக போர் தொடுத்துவரும் சௌதி தலைமையிலான கூட்டணி.

பட மூலாதாரம், Reuters

10 ஆயிரம் குழந்தைகள் உட்பட பல்லாயிரம் பொதுமக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ளனர். இது இந்த சண்டையின் நேரடிப் பாதிப்பு மட்டுமே.

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போரால் புலம் பெயர்ந்துள்ளனர். பஞ்சம் ஏற்படும் ஆபத்து தலைகாட்டி வருகிறது. இது மக்கள் தொகையின் பெரும்பகுதியைப் பாதிக்கும் நிலை உள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடந்து பல மணி நேரம் கழிந்த பிறகும், இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் சடலங்களை எடுத்தவண்ணம் இருந்தனர். இந்த இடிபாடுகளில் யாராவது உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை தேய்ந்து வருகிறது என்கிறார் பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் அன்னா ஃபாஸ்டர்.

இறந்தவர்கள் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை.

குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சுவதாகவும் மெடசின்ஸ் சேன்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எல்லைகள் கடந்த மருத்துவர்கள்) என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆட்கள் இடிபாடுகளை வெறும் கையால் அகற்றும் காட்சிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தொலைக்காட்சி காட்டியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் இருக்கும் காட்சியும் அதில் காட்டப்பட்டது. ஒரு மருத்துவமனைக்கு 200 காயமடைந்தோர் வந்ததாக மெடசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர் (எம்.எஸ்.எஃப்.) அமைப்பு தெரிவித்தது.

“விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் இன்னும் பல சடலங்கள் உள்ளன. எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அறிவது சாத்தியமாக இல்லை. இது கொடூரமான வன்செயலாகத் தெரிகிறது” என ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் எம்.எஸ்.எஃப். அமைப்பின் ஏமன் நாட்டுத் தலைவர் அகமது மகட் தெரிவித்தார்.

பதற்றம் தணிய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன்.

மேலும் ஒரு தாக்குதல் – 3 சிறுவர்கள் பலி

இடிபாடுகள் மீது நிற்கும் ஒரு நபர்.

பட மூலாதாரம், Reuters

மேலும், தென் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹுடைடா நகரில் தொலைத் தொடர்பு அமைப்பு ஒன்று தாக்கப்பட்டபோது அருகில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறது சேவ் சில்ட்ரன் என்ற உதவி அமைப்பு.

அதே நேரத்தில், கிட்டத்தட்ட நாடு முழுவதும் இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு அமைப்பு தாக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறது ஹூதி அமைப்பு.

தாக்குதல் நடந்த பின்னணி

ஹூடைடாவில் தங்கள் கூட்டணி தாக்குதல் நடத்தியதாகக் கூறிய சௌதி அரேபியா, சாதாவில் நடந்த தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐக்கிய அரபு எமிரேட் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்திய பிறகு சௌதி கூட்டணி ஏமனில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது போன்ற மோசமான தாக்குதல் அந்நாட்டின் மீது நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »