Press "Enter" to skip to content

உலக வரலாறு: மத்திய கிழக்கு எல்லை பதற்றத்தை வைத்திருக்கும் ஒரு பென்சில் கோடு

பட மூலாதாரம், Copyright of National Archive, paid for by Chris B

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 26வது கட்டுரை இது)

20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் கச்சா சைனாகிராஃப்-பென்சிலால் குறிக்கப்பட்ட வரைபடம் ஒன்று, நவீன மத்திய கிழக்கை உருவாக்க உதவிய 100 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ்-பிரெஞ்சு திட்டத்தின் லட்சியத்தையும் அசட்டுத்தனத்தையும்காட்டுகிறது.

நேர்கோடுகள் சிக்கலற்ற எல்லைகளை உருவாக்குகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க் சைக்ஸ் (Mark Sykes) மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் பிராங்ஸ்வா ஜார்ஜஸ்-பிகாட் (Francois Georges-Picot) ஆகியோர் 1916இல் ஒப்புக்கொண்ட பெரும்பாலான வரைபட வரிகள் நேராக இருந்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

இவர்களால் முன்னெடுக்கப்பட்ட ரகசிய ஒப்பந்தம், தென்மேற்கு ஆசியாவில் அவர்களால் முன்மொழியப்பட்ட செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டின் கோளங்களை வரையறுத்து, முதல் உலக போரின் போது டிரிபிள் என்டென்ட் ஓட்டோமான் பேரரசை தோற்கடிப்பதில் வெற்றி பெற உதவியது.

மத்திய கிழக்கு பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

சைக்ஸ் மற்றும் பிகாட் சிறந்த “பேரரசு நிர்வாகிகள்”. இருவரும் பிரபுக்கள், காலனித்துவ நிர்வாகத்தில் அனுபவமுள்ளவர்கள், மேலும் ஐரோப்பிய பேரரசுகளின் கீழ் இப்பகுதி மக்கள் சிறப்பாக இருப்பார்கள் என்ற கருத்தியலை முக்கியமாக நம்புபவர்கள்.

இருவருக்குமே மத்திய கிழக்கு பற்றி ஆழமான அறிவு இருந்தது.

முதலாம் உலக போரின் கொந்தளிப்பின் மத்தியில் இவர்கள் அவசர அவசரமாகப் பேசி முடித்த உடன்படிக்கையின் முக்கியக் கோட்பாடுகள் இன்றுவரை அப்பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் சைக்ஸ்-பிகோட்டின் நேர்கோடுகள் பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருந்தபோதிலும், அப்பகுதி மக்கள் மீது அவற்றின் தாக்கம் முற்றிலும் வேறுபட்டது.

இருவரும் வரைந்த வரைபடம் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த நிலத்தை புதிய நாடுகளாகப் பிரித்தது – மேலும் இந்த அரசியல் ஆளுமைகள் செல்வாக்கு செலுத்தக் கூடிய இரு மண்டலங்களாக உருப்பெற்றன.

• பிரிட்டிஷ் செல்வாக்கின் கீழ் இராக், டிரான்ஸ்ஜோர்டான் மற்றும் பாலத்தீனம்• பிரெஞ்சு செல்வாக்கின் கீழ் சிரியா மற்றும் லெபனான் வந்தன.

வட ஆபிரிக்காவில் அரபு நாடுகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய இந்த இரண்டு செல்வாக்கு மிக்க மனிதர்களும் கட்டாயப்படுத்தப்படவில்லை, ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எகிப்தும் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் மக்ரெப்பும் கட்டுப்படுத்தப்பட்டு அங்கும் இரு வேறு செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்தின.

ரகசிய ஒப்பந்தம்

மத்திய கிழக்கு பதற்றம்

ஆனால் சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தத்தில் இருந்து வெளிப்பட்ட புவி-அரசியல் ஒழுங்கில் மூன்று சிக்கல்கள் இருந்தன.முதலாவதாக, அரபு அறிவு இல்லாமல் ரகசியமாக அது இருந்தது, மேலும் 1910களில் அரேபியர்களுக்கு பிரிட்டன் அளித்த முக்கிய வாக்குறுதிக்கு முரணமாக அது இருந்தது. அந்த காலத்தில் ஓட்டோமான்களுக்கு எதிராக அரேபியர்கள் கிளர்ச்சி செய்தால், அந்த பேரரசின் வீழ்ச்சி மூலம் அவர்களுக்கு சுதந்திரம் தரப்படும் என்பது பிரிட்டனின் வாக்குறுதி.

முதல் உலகப் போருக்குப் பிறகு அந்த சுதந்திரம் நிறைவேறாதபோது, ​​இந்த காலனித்துவ சக்திகள், 1920கள், 30கள் மற்றும் 40களில், அரபு உலகில் அபரிமிதமான செல்வாக்கைத் தொடர்ந்தன.

அதுவே ​​அரபு அரசியலின் உந்துதல் – வட ஆபிரிக்காவிலும் கிழக்கு மத்தியதரைக் கடலிலும் – படிப்படியாக ஆனால் தீர்க்கமான முறையில் தாராளவாத அரசியலமைப்பு நிர்வாக அமைப்புகளை (எகிப்து, சிரியா மற்றும் இராக் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் கண்டது போல்) உறுதியான தேசியவாதத்திற்கு மக்களை இட்டுச் சென்றது.

அதன் முக்கிய நோக்கம் காலனித்துவவாதிகள் மற்றும் அவர்களுடன் வேலை செய்த ஆளும் அமைப்புகளை தாய் மண்ணில் இருந்து அகற்றுவதாகும்.1950களில் இருந்து 2011 வரை நடந்த அரபு எழுச்சிகள் வரை பல அரபு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த வந்த ராணுவ ஆட்சிகளின் எழுச்சிக்கு இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

பழங்குடிகள் பகுதிகள்

இரண்டாவது சிக்கல், நேர் கோடுகளை இருவரும் மனம் போன போக்கில் வரைந்ததுதான்.

சைக்ஸ்-பிகாட் லெவண்டை மதவாத குழு அடிப்படையில் பிரிக்க எண்ணினார்:

  • லெபனான் கிறிஸ்துவர்கள் (குறிப்பாக மரோனைட்டுகள்) மற்றும் ட்ரூஸுக்கு புகலிடமாக கருதப்பட்டது.
  • கணிசமான யூத சமூகத்துடன் பாலத்தீனம்
  • இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு, ஷியா முஸ்லிம்களுக்கு சாதகமாக விடப்பட்டது.
  • பிராந்தியத்தின் மிகப்பெரிய மதவாத மக்கள்தொகை கொண்ட சிரியா, சுன்னி முஸ்லிம்களால் நிறைந்திருந்தது.

இந்த வரைபட பிரித்தாளும் போக்குக்கு அங்கு அமைந்த புவியியல் அமைப்பு உதவியது.

குறிக்கோளுக்காக மேற்கொள்ளப்பட்ட சிலுவைப்போரின் முடிவில் இருந்து 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகளின் வருகை தரும் வரை பிராந்தியத்தில் துடிப்பான வர்த்தக கலாசாரம் இருந்தது. ஆனாலும், அங்கு வெவ்வேறு பிரிவுகள் திறம்பட ஒருவருக்கொருவர் தனித்தனியாக வாழ்ந்தன.

ஆனால் சைக்ஸ் – பிகாட் மனதில் நின்ற சிந்தனை நடைமுறையில் உருவாகவில்லை. அதாவது புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைகள் களத்தில் வாழ்ந்த மதவாத, இனவாத, பழங்குடி அல்லது பிற இன வேறுபாடுகளுடன் ஒத்துப்போகவில்லை.

ஆனாலும் இந்த இந்த வேறுபாடுகள் அனைத்தும், முதலில் ஐரோப்பிய சக்திகளை மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கான அரேபியர்களின் எழுச்சிக்கும் பின்னர் அரபு தேசியவாதத்தின் பெரும் அலையாலும் புதைக்கப்பட்டன.

ஒன்றுபட்ட அரபு உலகம்

1950களின் பிற்பகுதியிலிருந்து 1970களின் பிற்பகுதி வரையிலும், குறிப்பாக எகிப்தின் கமல் அப்தெல் நாசரின் தலைமை உச்சத்தில் இருந்த காலத்திலும் (1956 சூயஸ் நெருக்கடியிலிருந்து 1960களின் இறுதி வரை) அரபு தேசியவாதம் ஒன்றுபட்ட அரபு உலகம் அமையும் என்ற எண்ணத்திற்கு மகத்தான வேகத்தை அளித்தது.

இந்த எழுச்சியும் தாகமும் அதன் மக்களிடையே இருந்த சமூக-மக்கள்தொகை வேறுபாடுகளை நீர்த்துப்போகச் செய்தது.

1980கள் மற்றும் 1990களில், அரபு உலகின் வலிமையான தலைவர்களாக எடுத்துக்காட்டாக, ஹபீஸ் அசாத் மற்றும் லெவண்டில் சதாம் ஹுசைன் மற்றும் வட ஆப்ரிக்காவில் கர்னல் முயம்மர் கடாஃபி – வேறுபாடுகளை அடக்கினர். அதற்கு அவர்கள் பெரும்பாலும் அபரிமிதமான கொடூர நடவடிக்கைகளைப் பயன்படுத்தினர்.

ஆனால் இந்த வேறுபாடுகள் தோற்றுவித்த பதற்றங்களும் ஆசைகளும் அந்த தலைவர்களை விட்டு நீங்கவில்லை.

வெளி ஆதிக்க சக்திகளை ஓடச் செய்த பிறகு, இந்த நாடுகளில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியபோது – முதலில் இந்த வலிமையான தலைவர்கள் படிப்படியாக பல கட்டங்களில் மறையத் தொடங்கினர்.

பின்னர் பல அரபு குடியரசுகள் படிப்படியாக சிறிய பொருளாதார நலன்களால் கட்டுப்படுத்தப்படும் பரம்பரை நாடுகளாக மாறின. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2011 எழுச்சிகளுக்குப் பிறகு – பழைய உரசல்கள், ஏமாற்றங்கள், மற்றும் பல தசாப்தங்களாக மறைக்கப்பட்ட நம்பிக்கைகள் முன்னுக்கு வந்தன.

அடையாளப் போராட்டம்

மூன்றாவது பிரச்னை என்னவென்றால், முதல் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அரசு அமைப்பு, கடந்த நூற்றாண்டு மற்றும் அரை நூற்றாண்டாக அவர்கள் எதிர்கொண்ட முக்கியமான இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் முயற்சியில் அரேபியர்கள் தோல்வியடைந்தனர். அது அவர்களின் நிலையை மோசமாக்கியது.

ஒருபுறம் தேசியவாதம் மற்றும் மதசார்பின்மை இடையேயான அடையாளப் போராட்டம். மறுபுறம், இஸ்லாமியம் (மற்றும் சில சமயங்களில் கிறிஸ்துவம்).

மத்திய கிழக்கு பதற்றம்

அரபு தாராளவாத யுகத்தின் நிறுவனர்கள் – 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 1940 கள் வரை – அரசு அமைப்பு முறையை உருவாக்கினர் (உதாரணமாக 1861இல் துனீஷியாவில் மதசார்பற்ற அரசியலமைப்பு மற்றும் போருக்கு இடையிலான காலகட்டத்தில் எகிப்தில் ஒரு தாராளவாத ஜனநாயகத்தின் ஆரம்பமான கட்டம்).

பல சமூகக் குழுக்கள் (குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர்) இந்த கதையை ஆதரித்தனர். ஆனால் அவர்கள் வழிநடத்திய லட்சிய சமூக நவீனமயமாக்கலில் அவர்களின் சமூகங்களின் பக்தி, பழமைவாதம் மற்றும் மதக் குறிப்புகளை பின்னிப் பிணைக்கத் தவறிவிட்டனர்.

தொழில்மயமாக்கலில் பெரும் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும்பான்மையான மக்களிடையேயும் வியத்தகு சமத்துவமின்மை தொடர்ந்தது.

அரேபிய தேசியவாதத்தின் வலுவான மனிதர்கள் – மகத்தான மக்கள் ஆதரவுடன் – வேறுபட்ட (சோசலிச, மற்றும் சில நேரங்களில் ராணுவவாத) முறையில் சிவில் மற்றும் அரசியல் சுதந்திரங்களின் இழப்பை விலையாகக் கொடுத்து வலுப்பெற்றனர்.

மேலும் 2010க்கு முந்தைய நான்கு தசாப்தங்களாக, அரபு உலகம் அதன் சமூக கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகளை எதிர்கொள்ளும் தேசிய திட்டத்தையோ தீவிர முயற்சியையோ செயல்படுத்தவில்லை.

புதிய தலைமுறை அரசு அரசியல் அமைப்பு எந்த நேரத்திலும் பிளவுபட தயாராக இருந்தது, மேலும் மாறிவரும் பூகோள அரசியலும் மக்களின் எழுச்சியைத் தூண்டின. 201க்கு முந்தைய நான்கு தசாப்தங்களில், அரபு உலகின் மக்கள்தொகை அதன் முந்தைய நிலையை விட இரட்டிப்பானது. அந்த காலகட்டத்தில் 330 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் மூன்றில் இரண்டு பங்கு 35 வயதுக்குட்பட்டவர்கள்.

மத்திய கிழக்கு பதற்றம்

பட மூலாதாரம், National Archives

இந்த சவால்களைக் கடந்துதான் அரபு உலகம் கடந்த சில தசாப்தங்களில் இல்லாத வகையில் அது பங்களிக்காத கடுமையான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களை மரபுரிமையாகக் கொண்டு வாழ்ந்தது. ஆனால் அதன் விளைவுகளை அந்த நாடுகள் இப்போதும் அனுபவித்து வருகின்றன.

கைவிடப்பட்டு பரஸ்பரம் ஆதரவுக்கரம் கொடுக்காததால் சில நாடுகளில் கல்வித் தரம், வேலை கிடைக்கும் தன்மை, பொருளாதார வாய்ப்புகள், எதிர்காலத்தைப் பற்றிய கருத்து வரை வரம்புக்குட்பட்டதாக உள்ளன.

2011 இல் தொடங்கிய அரபு எழுச்சிகளின் அலை, முதல் உலகப் போருக்குப் பிறகு தொடங்கிய அரச ஒழுங்கின் விளைவுகளை மாற்றுவதற்கான இந்தத் தலைமுறையின் முயற்சியாகும்.

தற்போது வெளிவரும் இந்த மாற்றமானது ஒரு சிறந்த எதிர்காலத்தைத் தேடும் புதிய தலைமுறையின் வாக்குறுதியையும், பல ஆண்டுகளாக இப்பகுதியை மூழ்கடிக்கும் குழப்ப அலையின் அபாயத்தையும் உள்ளடக்கியது. அதை அந்த மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையின் எழுத்தாளர் டாரெக் ஓஸ்மான் – த மேக்கிங் ஆஃப் தி மாடர்ன் அரபு வேர்ல்ட், சாண்ட்ஸ் ஆஃப் டைம்: எ ஹிஸ்டரி ஆஃப் செளதி அரேபியா மற்றும் இஸ்லாம் டிவைடட்: சன்னி-ஷி உள்ளிட்ட பல பிபிசி ஆவணத் தொடர்களை எழுதி வழங்கியவர். இவர் முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய உலக ஆய்வு சொற்பொழிவுகளில் தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருபவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »