Press "Enter" to skip to content

நியூசிலாந்தில் 9 ஒமிக்ரான் தொற்று: தன் திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர் ஜெசிந்தா

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து நாட்டில் 9 ஒமிக்ரான் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், தனது திருமணத்தையும் தள்ளிவைத்தார்.

வேகமாகப் பரவுகிற திரிபாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரான் நியூசிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதிலும் உயர்ந்தபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

நிகழ்ச்சிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 பேருக்கு மேல் கூடக்கூடாது, கடைகளில், பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியவேண்டும் என்பவை இந்த கட்டுப்பாடுகளில் அடக்கம்.

நியூசிலாந்தில் இதுவரை மொத்தமாகவே 15,104 கொரோனா தொற்றுகளும், 52 மரணங்களும் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர் கிளார்க் கேஃபோர்டுடன் ஜெசிந்தாவுக்கு நடக்கவிருந்த திருமணம் நடக்காது என்று வெளியான செய்திகளை பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.

“உலகப் பெருந்தொற்றால் இன்னும் பெரிய நாசகரமான தாக்கத்தை எதிர்கொண்ட நியூசிலாந்து மக்களைவிட நான் வேறுபட்டவள் இல்லை என்று துணிந்து கூறுவேன். அன்புக்குரியவர்கள் மோசமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அவர்களோடு இருக்கமுடியாத நிலைதான் இந்த பாதிப்புகளிலேயே மிக மோசமானது. நான் அனுபவிக்கும் எந்த துன்பத்தைவிடவும் அது மிக அதிகமானது,” என்று தெரிவித்தார் அவர்.

உள்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் (கிரீன்விச் சராசரி நேரப்படி 11 மணி) புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

9 பேரைக் கொண்ட ஒமிக்ரான் கிளஸ்டர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

ஆக்லாந்தில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஒரு குடும்பம் சவுத் ஐலேன்டில் உள்ள வீட்டுக்குத் திரும்பிய நிலையில் அவர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. விமானப் பணியாளர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இந்தக் குழுவிடம் இருந்து சமூகத்தில் நோய்த் தொற்று பரவும் விகிதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகளின்படி நான்கு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பள்ளியில் முகக் கவசம் அணியவேண்டியிருக்கும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே கறாரான கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. இதனால், அந்த நாட்டில் கோவிட் மரணங்கள் மிகக் குறைவு. உலகில் தங்கள் எல்லைகளை முதலில் மூடிக்கொண்ட நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட தொற்றுகளை கடுமையான லாக்டவுன் மூலம் முறியடித்தது இந்நாடு.

ஆனால், டெல்டா திரிபு உருவான பிறகு பிரதமர் ஆர்டென் தனது அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். முழுமையாக கோவிட்டை ஒழிப்பது என்ற இலக்குக்கு மாற்றாக, அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்தவேண்டும் என்பதில் அவர் அக்கறை செலுத்தினார். கோவிட்டை பெருந்தொற்று என்று கருதும் நிலையில் இருந்து பொதுத்தொற்று (என்டமிக்) என்று கருதும் நிலையை நோக்கி அவர் நகர்ந்தார்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 94 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 56 சதவீதம் பேர் பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்டனர்.

படிப்படியாக எல்லைகளைத் திறக்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதி முதல் கடைசி தொகுதியாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு நாட்டில் நுழைய அனுமதி அளிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »