Press "Enter" to skip to content

யுக்ரேன் பதற்றம்: ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக அணி திரளும் மேற்கு நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனுடனான எல்லையில் ரஷ்யா அதன் துருப்புகளை நிலைநிறுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் “முழு ஒருமித்த கருத்துடன்” இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு சக்திகள் ஒரு பொதுவான மூலோபாயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதையடுத்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை காணொளி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தினார். யுக்ரேனுக்குள் ரஷ்யா ஊடுருவல் செய்தால் அந்த நாட்டுக்கு எதிராக “விரைவான” மற்றும் “முன்னெப்போதும் இல்லாத” வகையிலான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.யுக்ரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்த போதிலும், அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் திட்டத்தை ரஷ்யா மறுத்து வருகிறது.இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஓரணியில் உள்ளனர்.

இதையடுத்து அந்த நாடுகளின் தலைவர்களுடனான காணொளி காட்சி கலந்துரையாடலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் இணைந்தனர். நேட்டோ தலைவர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் விடுத்த அழைப்பின் பேரில் இந்த கலந்துரையாடல் நடந்தது. “இது எனக்கு மிக, மிக நல்ல சந்திப்பு இருந்தது – அனைத்து ஐரோப்பிய தலைவர்களுடனும் முழு ஒருமித்த கருத்து உள்ளது” என்று பைடன் இந்த சந்திப்பு குறித்து தெரிவித்தார்.

முன்னதாக, கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதாக நேட்டோ திங்கள்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது. அப்போது முதல் ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

மறுபுறம் அயர்லாந்து, யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், யுக்ரேன் எல்லையில் போர் போன்ற சூழ்நிலை உருவாக அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு நாடுகள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், யுக்ரேனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை பிரிட்டன் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது.

யுக்ரேன் ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

இந்த பதற்றத்தின் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொல்ளவில்லை. ஆனால் தலைநகர் கீஃபில் உள்ள தூதரகத்தில் பணியாற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்புகின்றனர்.

மறுபுறம் யுக்ரேனில் உள்ள தனது தூதரகத்தில் உள்ளவர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அமெரிக்கா, அங்குள்ள தமது நாட்டவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.

இப்போதைக்கு ஆபத்து இல்லை

ரஷ்யாவின் தாக்குதல் அச்சத்திற்கு மத்தியில், யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் இருவரும் தங்களுடைய தூதரக அதிகாரிகளை பரஸ்பரம் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று கூறியுள்ளனர்.

ஒருவேளை ரஷ்யா அதன் படைகளை யுக்ரேனுக்குள் அனுப்பினால் அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தயாராகி வருகிறது.

இந்த விஷயத்தில் ரஷ்யா உரிய பதிலைக் கொடுக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

இத்தகைய சூழலில்தான், தமது உறுப்பு நாடுகள், கிழக்கு ஐரோப்பா நோக்கி அவற்றின் போர்க்கப்பல்கள் மற்றும் வான்படை தளவாடங்களை அனுப்பியுள்ளதாகக நேட்டோ கூறியுள்ளது.

டென்மார்க், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் தங்களின் ராணுவத்தினரை தயார் நிலையில் வைத்துள்ளன.

நேட்டோ மற்றும் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுகள்

யுக்ரேன்

பட மூலாதாரம், EPA

நேட்டோ தலைவர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “நேட்டோ தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளது” என்றார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வது நேட்டோ தான் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. யுக்ரேனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கையை ஆபத்தை நேட்டோ அதிகரிக்கச் செய்து விட்டதாக ரஷ்யா கூறுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரல், கீஃபில் இருந்து தூதர்களை திரும்ப அழைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருவதால் எவ்வித களேபரத்துக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

டென்மார்க் நிலைப்பாடு

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம், Russia Defence Ministry

இதேவேளை “மிகப்பெரிய பொருளாதார தடைகள் வந்தாலும் அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தயாராக உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த எதிர்வினை இதுவரை கண்டிராததாக இருக்கும்” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் ஜெப் கோஃபோட் கூறினார்.

அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே அதன் உறுப்பு நாடுகள் சில சொந்த பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ரஷ்யாவுடன் வெவ்வேறு வகையில் உறவுகளைக் கொண்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சவாலானதாக இருக்கும்.

ஐரோப்பாவின் பொருளாதார மையமான ஜெர்மனி, ஏற்ெகனவே யுக்ரேன் விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டுக்காக விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாடு தமது படைகளை யுக்ரேனுக்கு அனுப்ப மறுத்துள்ளது. அதே சமயம், ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் ஐரோப்பா கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலினா எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

இதற்கிடையே, யுக்ரேனுக்கு இரண்டரை பில்லியன் டாலர்கள் அவசர நிதி உதவி வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வூர்சூலா ஃபொன்டேலயன் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறியது. இந்த நிலையில், அதன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனில் தமது ஆதரவு தலைமையை கொண்டு வருவதற்காக ரஷ்யா திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

யுக்ரேனை ரஷ்யா தாக்கினால் புதிய செச்சன்யா போன்ற நிலை உருவாக நேரிடும் என அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே, அட்லான்டிக் பெருங்கடலின் சர்வதேச கடற்பகுதியில் ரஷ்யாவின் ராணுவ பயிற்சிகளுக்கு அயர்லாந்து எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளது.

அயர்லாந்து நேட்டோவில் உறுப்பினராக இல்லை. அதே சமயம், ரஷ்ய கடற்படை பயிற்சி மேற்கொள்ளும் இடம் அயர்லாந்தின் தென்மேற்கு கடல் பகுதி அருகில் உள்ளது.2014இல் கிரிமியாவை யுக்ரேனுடன் ரஷ்யா இணைத்தது முதல் அங்கு பதற்றம் அதிகமானது. அந்த நாடு ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக் குழுவுடன் கிழக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் கடந்த 8 ஆண்டுகளில் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »