Press "Enter" to skip to content

குடியரசு தினம்: இந்தியாவுக்கு இந்த மாபெரும் அணிவகுப்பு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?

  • ஷரண்யா ஹ்ரிஷிகேஷ்
  • பிபிசி நியூஸ், டெல்லி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தனது 73ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசாங்கம் ஒரு அசாதாரண செய்திக்குறிப்பை வெளியிட்டது. அது… இந்த ஆண்டு அணிவகுப்பில் பாலிவுட்டின் பாடல் இடம்பெறாது என்பதுதான்.உண்மையில், குடியரசு தின அணிவகுப்பில் ஒருபோதும் பாலிவுட் மெட்டு இடம்பெற்றதில்லை. ஆனால் சமீபத்திய சர்ச்சையின் காரணமாக அரசாங்கம் இந்த விஷயத்தில் விளக்க தரும் நிலைக்கு தள்ளப்பட்டது.

குடியரசு தினத்தை குறிக்கும் பிரமாண்டமான வருடாந்திர அணிவகுப்புக்கான முன்னோட்ட தகவல் போல இந்திய அரசாங்கத்தின் ஒரு ட்விட்டர் பக்கத்தில் காணொளியொன்று வெளியிடப்பட்டது. அதில் பின்னணி இசையாக பாலிவுட் பட இசை ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த காணொளியில் கடற்படை இசைக்குழு இருந்ததால் பார்ப்பவர்களுக்கு அவர்களே அந்த மெட்டை இசைப்பது போல தோன்றியது.

இந்த காணொளியை மேற்கோள்காட்டி பலரும் சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் ஆயுதப்படைகளின் கண்ணியத்தை நீர்த்துப்போகச் செய்ததாக குற்றம்சாட்டினர். அந்த விமர்சனங்களை முன்வைத்தவர்களில் பலர் எதிர்கட்சி தலைவர்கள்.

இது குறித்து விசாரித்தபோது, அந்த ட்விட்டர் பக்கத்தில் அணிவகுப்புக்கான “கடுமையான” ஒத்திகையால் வீரர்கள் ஓய்வு எடுப்பதை குறிக்கவே அந்த ட்வீட் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற சர்ச்சை இப்போது முதல் முறையாக நடக்கவில்லை. இதற்கு முன்பும் சில சர்ச்சைகள் இப்படி வந்து மறைந்து போயிருக்கின்றன.

இத்தகைய நிகழ்வை லட்சக்கணக்கான இந்தியர்கள் பார்ப்பதால் இந்த ட்வீட்டுகள் மற்றும் விமர்சனங்கள் அந்த பார்வையாளர்களின் உற்சாகத்தை குறைக்க வாய்ப்பில்லை – காரணம், குடியரசு தின விழா முழுவதும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும், இது தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.ஒவ்வோர் ஆண்டும், இந்தியா தனது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஜனவரி 26ஆம் தேதியை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறது. இதன் மூலம் இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா பிரதிபலிக்கிறது. இந்த நாளில் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் தனது ராணுவ வலிமை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை பறைசாற்றுகிறது இந்தியா.

1950ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடனான இந்தியாவின் உறவுகளின் முடிவைக் குறிக்கும் நாளாக மாறியது ஜனவரி 26. அப்போது நாட்டின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

முதலாவது குடியரசு தின அணிவகுப்பு குறித்து தனது ‘காந்திக்கு பிந்தைய இந்தியா’ என்ற புத்தகத்தில் எழுதிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, “இந்திய முப்படைகளைச் சேர்ந்த மூன்றாயிரம் வீரர்கள், நாட்டின் குடியரசு தலைவர் முன்பாக அணிவகுத்துச் சென்றனர். சுதந்திர இந்தியாவின் விமானப்படை விமானங்கள் வானில் மேலே பறந்தன. பீரங்கிகள் 31 குண்டுகள் முழங்கின” என்று குறிப்பிடுகிறார். ஆனால், அதற்கடுத்த ஆண்டின் அணிவகுப்பு மிகவும் வித்தியாசமானது என்று கல்வியாளர் சுசித்ரா பாலசுப்ரமணியன் கூறுகிறார். அணிவகுப்பு இடம் முன்பு நடந்த மைதானத்தில் இருந்து ராஜ்பாத்துக்கு (முன்னர் கிங்ஸ் அவென்யூ) மாற்றப்பட்டது. அந்த இடம் “அரசின் பல அலுவலகங்களுக்கு அருகே இந்த பெரிய நிலப்பரப்பு” என்கிறார் அவர். “அந்த புதிய இடத்தில், கொண்டாட்டங்கள் கண்கவர் காட்சிக்கான வாய்ப்பை கொடுத்தன,” என்று அவர் மேலும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விழாவுக்கு மெருகூட்டம் வகையில் அணிவகுப்பின் ஒரு பகுதியாக கலாசார பெருமைகளை உணர்த்த மாநிலங்களுக்கு அந்த அணிவகுப்பில் பங்கேற்கும் அழைப்பை இந்திய மத்திய அரசு விடுத்தது.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

“அந்த காலத்தில் மொழி மற்றும் பிராந்திய அளவிலான நிலைப்பாடுகள் மாநில கட்சிகள் கடுமையாக வெளிப்படுத்தி அவற்றின் இருப்பை உறுதிப்படுத்தி வந்தன,” என்கிறார் சுசித்ரா. அதே சமயம், அணிவகுப்பு ஒரு பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தாலும் அது ஒன்றுபட்ட நாட்டின் அடையாளமாக காலப்போக்கில் மாறியது – “அது ஒரு சாத்தியமான, ஒருங்கிணைந்த தேசத்தின் அடையாளம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் மொழி ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இருந்தது. மத்திய அரசு இந்தியை ஒரே அதிகாரபூர்வ மொழியாக்க முயற்சித்தது. அது தென் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. தென் மாநிலங்களின் மொழிகள் மற்றும் எழுத்துக்கள் ஹிந்தியிலிருந்து முற்றிலும் வேறுபட்டன.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் இந்தி புத்தகங்களை எரித்தும், ஹிந்தியில் எழுதப்பட்ட பலகைகளை கருமை நிறமாக்கியும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு வலுத்தது.

1965ஆம் ஆண்டு ஜனவரி 26க்கு பிறகு, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் (அப்போது மெட்ராஸ்) இரண்டு ஹிந்தி மொழி எதிர்ப்பாளர்கள் தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொண்ட பிறகு மொழி ஆதிக்க போக்கை மத்தியில் ஆண்ட அரசு கைவிட்டது.மாநிலங்கள் தங்களுடைய சொந்த கலாச்சாரம் அல்லது வரலாற்று சாதனைகள் அடிப்படையில் அலங்கார ஊர்திகளை டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்ய விரும்பின. இதனால் நாளடைவில் குடியரசு தின அணிவகுப்பின் நேரமும் பங்கேற்கும் ஊர்திகளின் எண்ணிக்கையும் நீண்டன.டெல்லியின் அதிகார மையத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, அணிவகுப்பில் தங்கள் மாநிலத்தின் பங்களிப்பைக் காண்பது இன்னும் சிலிர்ப்பாக இருக்கிறது.கடந்த சில தசாப்தங்களாக விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளின் மாதிரிகளைக் காண்பிக்கும் பல அரசுத்துறை அலங்கார ஊர்திகள் கூட அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு, குடியரசு அணிவகுப்பு என்பது தங்களுடைய அடையாளத்தையும் இந்தியாவை சக்திவாய்ந்த குடியரசாகவும் காட்டிக்கொள்ளும் வாய்ப்பு என்று வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார்.

இந்தியர்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமாகியிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்தியின் காட்சிப்படுத்தப்பட்ட மாபெரும் வரவேற்புகள் மற்றும் ஊர்வலங்கள், அவர்கள் இதுபோன்ற விழாவை சிறப்பாக நடத்தும் உத்வேகத்தை கொடுக்கிறது என்கிறார் அவர்.

இந்த அணிவகுப்பு உலகின் பிற நாடுகளுக்கு இந்தியாவின் திறன்களைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ராகவன் தெரிவிக்கிறார்.

1950இல் இந்தோனீசிய அதிபர் சுகர்னோ தொடங்கி, இந்தியா எப்போதும் ஒரு வெளிநாட்டு தலைவரை அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அழைப்பது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு முதல் இது சாத்தியப்படவில்லை.

தலைமை விருந்தினர்களாக வருபவர்கள் சார்ந்த நாடுகள், பல ஆண்டுகளாக இந்தியா அவற்றுடன் கொண்டிருக்கும் இணக்கமான ராஜீய உறவுகளை பிரதிபலிக்கிறது.

இந்தியா கடைசியாக 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதிநிதி ஒருவருக்கு அழைப்பு விடுத்தது. பாகிஸ்தானுடன் நடந்த நான்கு போரில் இரண்டாவது போர் நடக்கவிருந்த சில மாதங்களுக்கு முன்புதான் அந்த நாட்டின் பிரதிநிதி இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார்.

இதேபோல சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மார்ஷல் யே ஜியான்யிங், 1958இல் அழைக்கப்பட்டிருந்தார். அதன் பிந்தைய நான்கு ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் போரில் மோதின.

2021இல் திட்டமிட்டபடி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவுக்கு வந்திருந்தால், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் குடியரசு தின நிகழ்வுக்கு விருந்தினராக வரும் ஆறாவது தலைவராகியிருப்பார்.

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

2015இல் இந்தியாவும், அமெரிக்காவும் இணக்கமற்ற கருத்துப் பரிமாற்றங்களை செய்து வந்த வேளையில், அதன் அதிபராக இருந்த ஒபாமாவை குடியரசு தின தலைமை விருந்தினராக அழைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அது பிரதமர் பதவிக்கு மோதி வந்து ஓராண்டான நிலையில் நடந்த முக்கிய நிகழ்வாக கருதப்பட்டதால் அது மோதியின் ராஜீய உத்தியாக கருதப்பட்டது.

“பிரதமர் மோதியின் அழைப்பை ஒபாமா ஏற்றுக்கொண்டது, இந்தியாவுக்கான ஒரு சிறந்த மரியாதையாக பார்க்கப்பட்டது, இது உலக அரங்கில் இந்தியா நிலையான இடத்துக்கு வந்த அறிகுறி” என்று தி நியூயார்க் டைம்ஸ் எழுதியது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுடன் சேர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியரசு தின கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், அணிவகுப்பில் பங்கேற்க இந்திய மாநிலங்கள் மற்றும் ராணுவப் படைப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இன்னும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.இந்த விஷயத்தில் அணிவகுப்பில் பங்கேற்ற சில இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை, “அவற்றின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவதற்கும், சாதனைகளை தேசிய அளவில் பிரதிபலிக்கவும் இது ஒரு வழியாக அமைந்தது” என்கிறார் ராகவன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »