Press "Enter" to skip to content

பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்?

  • கிளேர் ஹில்ஸ்
  • பிபிசி நியூஸ், வாஷிங்டன்

பட மூலாதாரம், Getty Images

கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனர்கள் மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும் என்று அமெரிக்கா காலத்தோடு போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கிறது.

தென்சீனக் கடலில், அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூ எஸ் எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட F35-C வகை அதிநவீன போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கத் தரப்பு கூறுகிறது. இந்த விமானத்தின் மதிப்பு 10 கோடி அமெரிக்க டாலர்.

இந்த போர் விமானம், பல்வேறு அதி நவீன ரகசிய சாதனங்களால் நிறைந்தது. அது விழுந்த இடம் சர்வதேச எல்லைக்குள் வருவதால் பலநாடுகளும் அதைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

யார் முதலில் அதைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

இத்தனை சிரமப்பட்டு அந்த போர் விமானத்தைக் கடலில் தேடிக் கண்டுபிடிப்பதால் கிடைக்கும் பரிசு என்ன? இந்த விலை உயர்ந்த போர் விமானத்தின் பின்னிருக்கும் ரகசிய போர் தொழில்நுட்பங்கள்தான்.

கடந்த திங்கட்கிழமை ராணுவப் பயிற்சியின் போது வின்சன் கப்பலின் தளத்தில் மோதி விமானம் கடலில் விழுந்த விபத்தில் ஏழு மாலுமிகள் காயமடைந்தனர்.

விமானம் தற்போது கடலுக்கடியில் கிடக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. போர் விமானம் எங்கிருந்து விழுந்தது என்பதையோ, அதை மீட்க எவ்வளவு நேரமாகும் என்பதையோ கடற்படை கூறாது.

தென்சீனக் கடலை முழுமையாக உரிமை கோரி வருகிறது சீனா, அதை உறுதிப்படுத்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சீனா தென் சீனக் கடலில் உரிமை கொண்டாட எந்த வித சட்ட ரீதியிலான அடிப்படை காரணங்களும் இல்லை என, கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பையும் அங்கீகரிக்க மறுத்து வருகிறது சீனா.

“எங்களுக்கு அந்த F35C விமானத்தைக் கண்டுபிடிக்க ஆர்வம் ஏதுமில்லை” என்று வியாழக்கிழமை கூறினார் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன்.

சீனப் படை இந்த விமானத்தைத் தேடிச் செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கும் என அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மீட்புக் கப்பல் குறைந்தது 10 நாட்கள் பயணம் செய்தால்தான் குறிப்பிட்ட இடத்தை அடையமுடியும்.

ஆனால், அது மிகவும் தாமதமாக இருக்கும் என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் எபி ஆஸ்டன், ஏனெனில் போர் விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியின் மின்கலன் அதற்கு முன்பே போதிய மின்சாரமின்றி செயலிழந்துவிடும். அப்படி நடந்துவிட்டால், போர் விமானத்தைக் கண்டுபிடிப்பது மேலும் கடினமாகிவிடும் என்கிறார் அவர்.

“அமெரிக்கா இதை கண்டுபிடித்தாக வேண்டியது மிகவும் அவசியம்” என்று அவர் கூறுகிறார். “F35C போர் விமானம் அடிப்படையில் ஒரு பறக்கும் கணினியைப் போன்றது. இது மற்ற முக்கிய விவரங்களோடு இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது – ‘ஷூட்டர்களை இணைக்கும் இணைப்பு சென்சார்’ என்று இவ்விமானத்தை அழைக்கிறது விமானப்படை.”

சீனாவிடம் அப்படிப்பட்ட தொழில்நுட்பம் இல்லை, எனவே அது சீனாவின் கையில் கிடைத்தால் அவர்களுக்கு அது ஒரு பெரிய தொழில்நுட்ப பாய்ச்சலை கொடுக்கும் என்றும் கூறுகிறார் எபி ஆஸ்டின்.

F35C-ல் என்ன இருக்கிறது?

F35 போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

* இந்த போர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, தன்னிடமுள்ள தரவுகளைப் பகிரும் வலையமைப்பைக் கொண்டது.

* தாழ்வாகப் பறந்து கண்காணிக்கும் திறன் கொண்ட, விமானம் தாங்கிக் கப்பலில் இருந்தே புறப்பட்டு அதிலேயே தரையிறங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் முதல் விமானம்.

* பெரிய இறக்கைகள், அருமையான லேண்டிங் கியர்களைக் கொண்டிருப்பதால், விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து உந்தி ஏவும் முறையில் செலுத்த கச்சிதமாக ஏற்ற விமானம் இது.

* உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமான என்ஜினைக் கொண்டது இது. இந்த விமானம் மணிக்கு 1,200 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது.

* வெளியே இரு ஏவுகணைகள், உள்ளே நான்கு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

தென் சீனக் கடலில் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் மரைன் படைகள்

பட மூலாதாரம், TED ALJIBE

போர் விமான சிதைவுகளைக் கண்டு பிடிப்பதற்கான உரிமையை சீனா கோரினால், அது அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் அமெரிக்க படைகளின் கூட்டுத் தலைவரின் முன்னாள் ஆலோசகரும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ராஜீய அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான எபி ஆஸ்டன்.

அமெரிக்க படைகள் ஒருங்கிணைப்பின்றி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக உணரப்பட்டு வரும் இந்த அபாயகரமான காலத்தில் இப்படி ஒரு பிரச்சனை வருவதாகக் கருதுகிறார் அவர்.

சீனா இந்த விமானத்தைக் கைப்பற்ற விரும்புகிறது என்பதில் சந்தேகம் இல்லை, இருப்பினும் சைபர் உளவு மூலம் அப்போர் விமானத்தின் உட்புறம், கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து ஓரளவு அறிந்திருக்க வாய்ப்புள்ளது என சீன விவகார வல்லுநரும், ட்ரூமன் திட்டத்தில் பாதுகாப்பு ஆய்வாளராக இருப்பவருமான பிரைஸ் பார்ரோஸ் கூறுகிறார்.

“அது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது மற்றும் அந்த விமானம் எப்படி எல்லாம் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் விமானத்தின் உண்மையான பகுதிகளைப் பார்க்க விரும்புவதாக நான் கருதுகிறேன்” என்கிறார் அவர்.

யு எஸ் எஸ் கார்ல் வின்சன் கப்பலில் ஏற்பட்ட “விபத்தை” தொடர்ந்து, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை ஓர் அறிக்கையில் ஒப்புக்கொண்டது.

மீட்புப் பணிகள் உண்மையில் எப்படி நடக்கும்?

யு எஸ் எஸ் கார்ல் வின்சன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க ‘நேவி சூப்பர்வைசர் ஆஃப் சால்வேஜ் அண்ட் டைவிங்’ அணியினர், விழுந்த விமானத்தின் உடற்பகுதியில் காற்றுப் பைகளை இணைத்து, மெல்ல காற்றை நிரப்பி வெளியே கொண்டு வர முயல்வர். F35-C விமானத்தின் உடற்பகுதி ஒரே துண்டாக இல்லை எனில், மீட்புப் பணிகள் சிக்கலாகலாம்.

விமானத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஏவுகணைகள், அதன் இறக்கைகளில் அல்லது விமானத்துக்குள்ளே ஆயுதங்கள் வைக்கும் பகுதியில் இருந்திருக்கலாம். இது மீட்பை சிக்கலாக்கும்.

1974ல், அமெரிக்கா – ரஷ்யா இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, ஒரு ராட்சத எந்திர கொக்கியைப் பயன்படுத்தி, கடலின் தரையில் கிடந்த ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை ரகசியமாக இழுத்தது. ஹவாய் கடற்கரை அருகே இது நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், சீனாவின் கிழக்குக் கடற்கரையில் மூழ்கிய பிரிட்டனின் ஹெச் எம் எஸ் பொசெடான் (Poseidon) என்கிற நீர்மூழ்கிக் கப்பலை சீன ராணுவம் ரகசியமாக மீட்டது.

2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடனின் வளாகத்தில் நடந்த தாக்குதலில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் ஸ்டெல்த் ஹெலிகாப்டரின் சிதைவுகளை சீனா கைப்பற்றியதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.

கடந்த 2019 மே மாதத்தில் பிலிப்பைன்ஸ் கடலுக்கடியிலிருந்து, அமெரிக்க கடற்படையின் போக்குவரத்து விமானத்தின் சிதைவுகளை வெளியே எடுத்ததே கின்னஸ் உலக சாதனை படைத்த வெற்றிகரமான ஆழ்கடல் மீட்புப் பணி (5,638 மீட்டர்) என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்பதைத் தவிர, சீனர்களின் கையில் அந்த விமானம் கிடைக்கக் கூடாது என்றால், விமானத்தை அழிப்பது மற்றொரு தேர்வாக இருக்கிறது.

“அதன் மீது டார்பிடோ கடல் ஏவுகணையைக் கொண்டு தாக்கி அழிப்பது எளிதான காரியம்” என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்த யோசனை தற்போது பரிசீலனையில் இருப்பதாகத் தெரியவிவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »