Press "Enter" to skip to content

எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்: உணவுக்காக பிச்சை எடுக்கும் டீக்ரே மருத்துவர்கள்

பட மூலாதாரம், Getty Images

எத்தியோப்பியாவில் போரினால் பாதிக்கப்பட்ட டீக்ரே பகுதியிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் சில செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டியுள்ளதாக மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

எட்டு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழிகளைத் தேட வேண்டிய் கட்டாயத்தில் அவர்கள் இருப்பதாகக் கூறினார்.

டீக்ரேயில் இன்னும் அதிகமான மக்களை “கடுமையான பட்டினி” பாதிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கைகள் கூறும் நிலையில் மருத்துவர் இதைத் தெரிவித்துள்ளார்.

22 லட்சம் மக்கள் “உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களில் பாதிப் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஐ.நா உலக உணவு திட்டத்தின் (WFP) கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

மொத்தத்தில், டீக்ரே, அமாரா, அஃபார் ஆகிய பகுதிகளில், பல மாதங்களாக நடக்கும் போரினால் 90 லட்சம் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையான உணவு உதவிக்கான தேவை உள்ளதாக ஐ.நா உலக உணவுக் கூட்டமைப்பு கூறுகிறது.

நவம்பர் 2020-ஆம் ஆண்டு முதல் எத்தியோப்பிய மத்திய அரசுப் படைகள் வடக்கு டீக்ரே பிராந்தியத்தில் இருந்து கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் டீக்ரேயின் பெரும்பகுதி துண்டிக்கப்பட்டது. முக்கிய உதவி, மருத்துவப் பொருட்களை வழங்குவது போன்றவை கடினமாகின. வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. அதாவது மக்கள் மற்றவர்களுக்குப் பணம் செலுத்த அவர்களுடைய நிதியை எடுத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்தத் துன்பங்களில் இருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் கூடத் தப்பவில்லை.

டீக்ரேயின் தலைநகரான மெக்கெல்லில் உள்ள அய்டர் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர், பெயர் குறிப்பிடக் கூடாது என்ற கோரிக்கையோடு பிபிசியிடம் பேசியபோது, உணவுப் பொட்டலங்களுக்காக செவிலியர்களும் மருத்துவர்களும் வரிசையில் நிற்பதைப் பார்ப்பது கடந்த ஏழு மாதங்களாகச் சாதாரணமாகிவிட்டது என்கிறார்.

உணவின்றி உயிரிழக்கும் குழந்தைகள்

இவர்களுக்குக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

“பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய உணவின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டனர். சமையல் எண்ணெய், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை வாங்குவதற்கே நினைக்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. சிலர் உணவுக்காக பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளனர்,” என்று மருத்துவர் கூறினார்.

மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை சிகிச்சையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்தும் அவர் பேசினார். அறுவை சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் காயங்களைச் சுத்தம் செய்வதற்கு அவசியமான கிரும் நீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை துணிகளுக்குப் பதிலாக, அய்டர் மருத்துவமனை நன்கொடையாகக் கிடைத்த ஆடைகளைச் சார்ந்துள்ளது. அவை வெட்டப்பட்டு, சுத்தம் செய்து பின்னர் பயன்படுத்தப்படுகின்றன.

எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்

பட மூலாதாரம், Getty Images

இந்த மாதத் தொடக்கத்தில் சுரஃபீல் மேரிக் என்ற 3 மாத குழந்தையைப் பற்றி பிபிசி எழுதியது. அந்தக் குழந்தை இறந்துவிட்டதாகவும் மருத்துவர் கூறினார். உடல் எடை அதிகரித்ததால் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட குழந்தை, வீட்டில் போதுமான உணவு இல்லாததால், ஜனவரி 1 அன்று உயிரிழந்தது.

போரின் தொடக்கத்திலிருந்து டீக்ரேயின் பெரும்பகுதி தகவல் தொடர்பு முடக்கத்தில் இருப்பதால் பிபிசியால் விவரங்களைச் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

இந்த வாரம் சில சிறிய நிவாரணங்கள் இருக்கலாம். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கடந்த செப்டம்பருக்குப் பிறகு முதன்முறையாக மருத்துவ உதவிகளை மெகெல்லேவுக்கு அனுப்ப முடிந்தது.

டிசம்பர் மத்தியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஐ.நா-வின் வாகனங்கள் எதுவும் டீக்ரேவை சென்றடையவில்லை. ஆனால், பட்டினி மரணங்களைத் தடுக்க ஒரு நாளைக்கு 100 பார வண்டிகள் தேவை என்று உலக உணவுத் திட்டம் கூறுகிறது.

அடுத்த 6 மாதங்களுக்கு வடக்கு எத்தியோப்பியாவில் அதன் செயல்பாடுகளுக்கு 337 மில்லியன் டாலர் நிதியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு கேட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில் டீக்ரே மோதல் வெடித்தது. பிரதமர் அபிய் அகமது அந்தப் பகுதியிலுள்ள பிராந்தியப் படைகளுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள அரசுப் படையினர் தங்கியிருந்த ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக அவ்வாறு செய்ததாகக் கூறினார்.

அபியின் அரசுக்கும் டீக்ரேவில் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே பல மாதங்களாக நடந்த சண்டைக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டது.

எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்

கடந்த சில மாதங்களில், கூட்டாட்சி ராணுவம் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை முறியடித்துள்ளது. ஆனால், டீக்ரே மற்றும் அஃபார் பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கு அருகில் சண்டை தொடர்கிறது.

அமைதிப் பேச்சு வார்த்தை விரைவில் நடக்கலாம் எனக் கொஞ்சம் நம்பிக்கை உள்ளது.

‘ஹார்ன் ஆஃப் ஆப்ரிக்கா’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க சிறப்புத் தூதுவர் டேவ்விட் சாட்டர்ஃபீல்ட், சமீபத்தில் அடிஸ் அபாபாவுக்குச் சென்றார்.

அதேநேரத்தில் ஆப்ரிக்க யூனியனின் மத்தியஸ்தரான முன்னால் நைஜீரிய அதிபர் ஒலுசெகுன் ஒபாசன்ஜோ டீக்ரேயின் மூத்த தலைவர்களையும் சந்தித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »