Press "Enter" to skip to content

காந்தியை எரித்த சாம்பல் அவர் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்க ஆன்மிக மையத்தில் இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் தேசத்தந்தையாக கொண்டாடப்படும் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றோடு 74 ஆண்டுகள் ஆகின்றன. அவரது உடலை எரித்த சாம்பல் தங்களிடம் இருப்பதாக கூறும் ஓர் அமெரிக்க ஆன்மிக மையத்தில் இருந்து அது குறித்து செய்தி எழுதுகிறார், சவிதா பட்டேல்.

அமெரிக்காவில் ஹாலிவுட்டில் இருந்து சில நிமிடங்களில் அடைகிற தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சன்செட் பொலிவார்டில் உள்ள ஏரி ஆலயத்தில் அமைந்திருக்கிறது காந்தி உலக அமைதி நினைவகம். இந்த ஆலயத்தின் நிறுவனர் பரமஹன்ச யோகானந்தா என்பவரால் இது 1950ல் கட்டப்பட்டது. பசுமையான தோட்டங்கள், அருவி மத்தியில் கடலைப் பார்த்தபடி இது அமைந்துள்ளது.

இந்த இடத்தில் சீனாவில் இருந்து வந்த பழமையான கல் பெட்டியில் ஒரு வெள்ளிப் பேழையும், ஒரு வெண்கலப் பேழையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேழைகளில்தான் காந்தியின் உடலை எரித்த சாம்பல் இருப்பதாக கூறப்படுகிறது.

1948ல் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, அவரது சாம்பல் 20 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல பாகங்களுக்கு மக்கள் நினைவுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் சில பாகங்கள் எப்படியோ வெளிநாடு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது.

“காந்தியடிகளின் சாம்பலை நிறையபேர் கேட்டார்கள்,” என்கிறார் அவரது கொள்ளுப் பேரன் துஷார் காந்தி. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியின் சாம்பல் இந்த ஏரி ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களைத் தொடர்புகொண்டதாகவும், ஆனால், பதில் வரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“அவரது சாம்பலை வைத்திருப்பது அவரது விருப்பத்துக்கு மாறானது. தாம் மறைந்துவிட்டால், தமது சாம்பலை வைத்திருக்கக்கூடாது. கரைத்துவிடவேண்டும் என்பது அவரது விருப்பம்,” என்கிறார் அவர்.

ஆனால், “எங்கள் குரு உருவாக்கியதை நாங்கள் கைவிடமாட்டோம். இந்த சாம்பல் எங்கள் குரு யோகானந்தாவுக்கு தரப்பட்ட பரிசு. இதனால், அதிருப்தி அடைகிறவர்கள், இதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்,” என்கிறார், இப்போது இந்த ஆலயத்தை நடத்தும் சாமியார் ரிதானந்தா.

line
line

இந்த சாம்பலை தந்துவிடவேண்டும் அல்லது கரைத்துவிடவேண்டும் என்று காந்தியின் வாரிசுகள் கோரியிருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

சாம்பல் இருக்கிற பேழையைத் தாம் பார்த்ததில்லை என்றும், ஆனால், அதனை யோகானந்தா கல் பெட்டியில் வைத்துப் பூட்டுவதைக் காட்டும் காணொளியை மட்டுமே பார்த்திருப்பதாகவும் ரிதானந்தா கூறுகிறார்.

இந்த ஆலயத்தில் சாம்பல் இருக்கிற ஒரு பெட்டி இருக்கிறது என்பதற்கு இதைத்தவிர ஆதாரம் எதுவுமில்லை. அதுவும் அந்த சாம்பல் காந்தியினுடையது என்று சொல்வதற்குப் போதுமானதல்ல.

கல்பெட்டி

பட மூலாதாரம், Lake Shrine

புனேவை சேர்ந்த வெளியீட்டாளர், பத்திரிகையாளர் வி.எம். நாவ்லேயிடம் இருந்து யோகானந்தாவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. யோகானந்தாவும், நாவ்லேயும் நண்பர்கள். உத்தரப்பிரதேசத்தில் முகுந்த் லால் கோஷ் என்ற பெயரில் பிறந்த யோகானந்தா பிறகு அமெரிக்கா சென்று அங்கே இந்த ஏரி ஆலயத்தை அமைத்தார்.

1935ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்துக்கு வந்த யோகானந்தா சில யோகாசனங்களை செய்து காட்டி, காந்தியைப் பற்றியும் புகழ்ந்து பேசியதாக அவரது சுயசரிதை கூறுகிறது. அப்போதுதான் அவர் காந்திக்கு ஒரு நினைவகம் கட்டுவதாகவும் கூறியிருக்கிறார்.

நாவ்லேவுக்கு எப்படி அந்த சாம்பல் கிடைத்தது என்பதைப் பற்றி அந்த சுயசரிதையில் ஒன்றும் இல்லை. ஆனால், நாவ்லே எழுதிய ஒரு கடிதத்தின் பகுதியை அந்த சுயசரிதை மேற்கோள் காட்டுகிறது.

“காந்தியின் சாம்பலைப் பொறுத்தவரை, அவை எல்லா முக்கிய ஆறுகள், கடல்களிலும் கலக்கப்பட்டுவிட்டன. நான் உங்களுக்கு பெரிய சிரமங்களுக்கு இடையில் அனுப்பிய அஸ்தியைத் தவிர வேறு எதுவும் இந்தியாவைத் தாண்டி செல்லவில்லை” என்று அந்த கடிதம் கூறுவதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், அது உண்மையாக இருக்க முடியாது என்கிறார் துஷார் காந்தி.

திரிவேணி சங்கமத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் காந்தியின் சாம்பல்.

பட மூலாதாரம், Getty Images

“காந்தியடிகளின் சாம்பலின் ஒரு பகுதி 1948ல் தென்னாப்பிரிக்காவில் கரைக்கப்பட்டது. அது அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டதா? சிலர் சும்மா அதை கையில் எடுத்துச் சென்றார்களா? என்பது தெரியவில்லை,” என்று தெரிவித்தார்.

“பரமஹன்ச யோகானந்தாவுக்கு யார் இந்த அஸ்தியை அனுப்பிவைத்தார்கள் என்பது தெரியவில்லை. அமைச்சர்கள், முக்கிய காந்தியவாதிகள் அடங்கிய குழு ஒன்றுதான் அவர் இறந்தபோது, அஸ்தியை பிரித்து அனுப்புவதற்குப் பொறுப்பாக இருந்தது,” என்கிறார், துஷார் காந்தி.

காந்தியின் பெருமளவிலான சாம்பல் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டுவிட்டது. கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் இந்த இடத்தில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைப்பதை புனிதமான ஒன்றாகப் பலர் கடைபிடிக்கின்றனர். அதைப் போலவே தமது சாம்பலும் கரைக்கப்படவேண்டும் என்று காந்தி விரும்பினார்.

ஆனால், முழு சாம்பலும் அப்படி கரைக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு வெவ்வேறு இடங்களில் காந்தி அஸ்திகள் கரைக்கப்பட்டன, நினைவுக் கூட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2019ம் ஆண்டு மத்திய இந்தியாவில் உள்ள ஒரு காந்தி நினைவகத்தில் இருந்து அவரது சாம்பல் களவு போனது. ஒரு சாம்பல் தொகுதி திடீரென 10 ஆண்டுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் தோன்றியது.

“எனது உறவினர்கள் அதை டர்பன் வளைகுடாவில் கரைத்தார்கள்,” என்றார் துஷார் காந்தி.

அதற்கு முன்பாக, ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து காந்தி குடும்பத்துக்கு ஒரு தொகுப்பு அஸ்தி கிடைத்தது. அதை ஒரு இந்திய வணிகர் அந்த அருங்காட்சியகத்துக்கு தந்திருந்தார். அவரது தந்தைக்கு காந்தியைத் தெரியுமாம். அந்த சாம்பல் மும்பை மாநகரில் 2008ல் கரைக்கப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள காந்தி அமைதி நினைவகம்.

பட மூலாதாரம், Lake Shrine

ஒடிஷாவில் ஒரு வங்கி லாக்கரில் காந்தியின் அஸ்தி அடங்கிய ஒரு கலயம் இருந்ததாக பத்திரிகை செய்தி மூலம் தமக்குத் தெரியவந்ததாகவும், அந்த லாக்கர் முன்னாள் அதிகாரி ஒருவர் பெயரில் இருந்ததாகவும் கூறிய துஷார் காந்தி, அது திரிவேணி சங்கமத்தில் 1997ம் ஆண்டு கரைக்கப்பட்டதாகக் கூறினார்.

line

தெரிந்தவரையில், இந்தியாவில் உள்ள கடைசி தொகுதி சாம்பல் புனே நகரில் உள்ள ஆகா கான் மாளிகையில் உள்ளது. அது ஒரு சலவைக்கல் அமைப்பில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை வளாகத்தில்தான் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் உடல் எரியூட்டப்பட்டது. எனவே, இங்கே அவருக்கு ஒரு சமாதி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பக்கத்திலேயே காந்தியின் அஸ்தி அடங்கிய சலவைக்கல் அமைப்பு அமைந்துள்ளது.

அதை வைத்திருக்கவேண்டும் என்று மற்றவர்கள் விரும்புவதன் காரணத்தை துஷார் புரிந்துகொள்கிறார்.

“1997ல் திரிவேணி சங்கமத்தில் அஸ்தியைக் கரைத்தபோது, அத்தனை ஆண்டுகள் அதை வைத்திருந்த பித்தளைக் கலயத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால், வேறொரு சிந்தனையும் வந்தது. இதை நம்மால் பத்திரமாக வைத்திருக்க முடியும். அதன் பிறகு… என்ன ஆகும் என்று தோன்றியது. எனவே அதை டெல்லியில் உள்ள காந்தி தேசிய அருங்காட்சியகத்துக்கு கொடையாக அளித்துவிட்டேன்,” என்றார் அவர்.

காந்தியை வழிபடுவதற்கான எல்லோருடைய உரிமையை மதிக்கும் துஷார், ஏரி ஆலயம் காந்தியின் சாம்பலை நன்றாக பராமரிப்பதாகவே நினைக்கிறார். ஆனால், இது அவமரியாதைக்கு உள்ளானால் அது தங்கள் குடும்பத்தை புண்படுத்தும் என்று நினைக்கிறார்.

“அதனால்தான், முறைப்படி அஸ்தி கரைக்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன்,” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »