Press "Enter" to skip to content

இஸ்லாமிய அரசு பெண்கள் படைப்பிரிவுக்கு தளபதியாக இருந்த பெண் அமெரிக்காவில் கைது

பட மூலாதாரம், AFP

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவில் பெண்கள் மட்டுமே இருந்த படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கி, பயிற்சி அளித்ததாக ஓர் அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலிசன் ஃப்ளூக்- எக்ரன் எனும் இந்த பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்தவர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இவர் சேர்த்ததாகவும் ஏகே- 47 ரக துப்பாக்கிகளை கையாளவும், தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான அங்கிகளை அணியவும் இவர் சிரியாவில் பயிற்சி அளித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஓர் அமெரிக்க கல்லூரி வளாகத்தில் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதற்காக இவர் ஆள் சேர்த்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ, 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் கைது செய்யப்பட்ட இவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு சனியன்று இந்த பிரமாண பத்திரத்தில் இருக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டன.

சிரியாவின் ரக்கா நகரில் ”கதீபா நுசைபா” எனும் பெண்கள் மட்டுமே கொண்ட படைப்பிரிவு ஒன்று 2016ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

அந்த சமயத்தில் ரக்கா நகரம்தான் இஸ்லாமிய அரசு குழுவின் நடவடிக்கைகளுக்கு தலைமையகம் போல செயல்பட்டு வந்தது.

இந்தப் படைப்பிரிவில் ஐ.எஸ் அமைப்பில் உள்ள ஆண் போராளிகளுடன் திருமணம் செய்துகொண்ட பெண்கள் மட்டுமே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்குழுவில் சேர்ந்த சில நாட்களிலேயே அதன் அமைப்பாளராகவும் தலைவராகவும் ஆலிசன் ஃப்ளூக்- எக்ரன் உருவெடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் எதிரிகளிடமிருந்து தங்களை எவ்வாறு பெண்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது முக்கிய பணி என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ஐ.எஸ் வசமிருந்த ரக்கா நகரம் அரசு படைகளால் 2017இல் மீட்கப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

ஏகே- 47 ரக துப்பாக்கிகள், தற்கொலை தாக்குதலுக்கான அங்கிகள் உள்ளிட்டவற்றை கையாள இவர் வெற்றிகரமாக பயிற்சி அளித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும் ஆயுதங்களை கையாள இவர் பயிற்றுவித்தார் என்று சாட்சி ஒருவர் கூறுவதாக எஃப்பிஐ அமைப்பின் பிரமாண பத்திரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாட்சியின் கூற்றுப்படி அப்போது 5 அல்லது 6 வயதே ஆகியிருந்த இப்பெண்ணின் மகன்களில் ஒருவர் ஓர் இயந்திர துப்பாக்கியை தன் வசம் வைத்துள்ளார்.

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் மட்டுமல்லாது வெடிபொருட்களை வைத்து கடையில் வாங்குதல் மால் ஒன்றிலும் தாக்குதல் நடத்த இவர் திட்டமிட்டிருந்ததாக எஃப்பிஐ தெரிவிக்கிறது.

அந்தத் தாக்குதல் நிறையப் பேரை கொல்லவில்லை என்றால் அது தமது வளங்களை வீணாக்கும் என்று சாட்சி ஒருவரிடம் ஆலிசன் கூறினார் என்று எஃப்பிஐ பிரமாண பத்திரம் தெரிவிக்கிறது.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தப் பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »