Press "Enter" to skip to content

மியான்மர்: ராணுவ ஆட்சியை எதிர்க்கும் இளைஞர்களால் உள்நாட்டுப் போர் வர வாய்ப்பு? பிபிசி புலனாய்வு

  • சோ வின், கோகோ ஆங், நசோஸ் ஸ்டிலியானோ
  • பிபிசி பர்மீஸ், பிபிசி தரவு இதழியல் பிரிவு

பட மூலாதாரம், Getty Images

மியான்மர் ராணுவத்துக்கும் ஆயுதமேந்திய பொதுமக்கள் குழுக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ராணுவத்தை எதிர்த்துப் போராடுபவர்களில் பலர், மியான்மரில் ஏற்பட்ட ராணுவ ஆட்சியால் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இளைஞர்கள். இந்த வன்முறையின் தீவிரத்தன்மை, விரிவு, எதிர்ப்பின் ஒருங்கிணைப்பு ஆகியவை, இந்த மோதல், எழுச்சியிலிருந்து உள்நாட்டுப் போராக மாறுவதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சிக்கலைக் கண்காணிக்கும் அமைப்பான ACLED [Armed Conflict Location and Event Data Project] அளித்த தரவுகளின்படி, வன்முறை இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது . களத்திலிருந்து வரும் செய்திகள், சண்டை பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், நகர்ப்புற மையங்களை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

1 பிப்ரவரி 2021 அன்று இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து சுமார் 12,000 பேர் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்களைத் தொகுத்துள்ளது ACLED. மோதல்கள் கொடியதாக வளர்ந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் வலுவடைந்த இந்தப் போரில் துல்லியமான இறப்பு எண்ணிக்கையை சரிபார்ப்பது கடினமாக இருந்தாலும், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளின் அடிப்படையில் ACLED தெரிவித்த எண்ணிக்கைதான் இந்த 12000.

Please upgrade your browser to see this visualisation

பர்மா என்றும் அழைக்கப்பட்ட மியான்மரில் நடைபெற்று வரும் மோதலை இப்போது உள்நாட்டுப் போர் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை மீட்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் “வலுவான நடவடிக்கையை” எடுக்க வேண்டும் என்றும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிஷெல் பேச்சலெட் ஒப்புக்கொண்டார்.

இந்த நெருக்கடி தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய அளவு அவசரமாக எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் கூறினார். நிலைமையை “பேரழிவு” என்று விவரித்த அவர், மோதல் இப்போது வட்டார நிலைத்தன்மையை அச்சுறுத்துகிறது என எச்சரித்தார்.

அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போராடும் குழுக்கள் ஒட்டுமொத்தமாக மக்கள் பாதுகாப்புப் படை (People’s Defence Force -PDF) என அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட போராளிக் குழுக்களின் ஒரு கூட்டமைப்பு.

PDF உறுப்பினர்கள் தற்காலிக ஆயுதங்களுடன் பயிற்சி பெறுகிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

18 வயதான ஹேரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ராணுவக் கிளர்ச்சியை எதிர்த்துப் போராட்டங்களில் சேர்ந்தபோது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருந்தார். மத்திய மியான்மரில் PDF படைப்பிரிவுத் தளபதியாக மாற வேண்டும் என்பதற்காக தனது பல்கலைக்கழகத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளார்.

பிப்ரவரி 2021 போராட்டத்தின் போது, மாணவி மியா த்வே கொடூரமாக சுடப்பட்டு மரணமடைந்த பிறகுதான், தனக்கு PDF இல் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஹேராவின் பெற்றோர்கள் தங்கள் மகள் ஒரு PDF போர்ப் பயிற்சி வகுப்பைத் தொடங்கியபோது முதலில் கவலையடைந்தனர், ஆனால் அவள் தீவிரமானவள் என்பதை உணர்ந்தபோது அவர்கள் அதை ஒப்புக்கொண்டனர்.

மியான்மரில் உள்நாட்டுப் போர் – எப்படி கிடைத்தது தரவு?

உலகெங்கிலும் உள்ள அரசியல் வன்முறை மற்றும் போராட்டங்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ACLED அமைப்பின் புள்ளிவிவரங்களை பிபிசி பயன்படுத்தியது.

இது செய்தி அறிக்கைகள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் வெளியீடுகள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பாதுகாப்பு தகவல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

Graphic visualising the changing pattern of the conflict in Myanmar, showing how in the initial weeks following the February 2021 coup most deaths came in protests and riots, while since then armed clashes have claimed the most lives, with a recent uptick in fatalities from remote violence such as explosives and landmines

ACLED ஒவ்வொரு செய்தி அறிக்கையையும் சுயாதீனமாக சரிபார்க்கவில்லை என்றாலும் , நிகழ்வுகள் மற்றும் இறப்பு குறித்த புதிய தகவல்கள் கிடைக்கப்பெறுவதால், இறப்புகள் பற்றிய அதன் தரவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாக அது கூறுகிறது.

Bar chart showing how the conflict in Myanmar has grown deadlier, highlighting the increase in deaths following the February 2021 coup, especially in the most recentmonths

இரு தரப்பினரும் கடுமையான பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் நிகழ்வுகளின் முழுமையான துல்லியமான தரவுகளைப் பெறுவது சாத்தியமில்லை. பத்திரிக்கையாளர்களின் செய்திகளும் இதில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பிபிசியின் பர்மிய சேவையானது, மியான்மர் ராணுவம் – PDF இரண்டுக்கும் இடையில் 2021 மே முதல் ஜூன் வரையிலான மோதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய தகவலையும் சேகரித்தது. இதுவும் ACLED தரவுகளின் போக்குகளுடன் ஒத்துப்போகிறது.

விவசாயிகள், இல்லத்தரசிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இணைந்துதான் PDF உருவானது. இவர்கள் அனைவரும், இந்த ராணுவ ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற உறுதியுடன் ஒன்றுபட்டுள்ளனர்.

“பல [பொதுமக்கள்] இந்த போராளிக் குழுக்களுக்குள் இதுவரை சென்றுள்ளனர். பலர் மக்கள் பாதுகாப்பு படைகள் (PDF) என்று அழைக்கப்படுபவர்களை உருவாக்கியுள்ளனர்” என்று மிஷெல் பேச்சலெட் பிபிசியிடம் கூறினார்.

மேலும், “அதனால்தான், நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன், இதற்காக நாம் இன்னும் வலுவாக ஏதாவது செய்யாவிட்டால், அது சிரியாவின் நிலைமையைப் போல மாறிவிடும்.” என்றும் தெரிவித்தார்.

இராணுவப் படைகளின் ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட தீ - உள்ளூர் ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய மியான்மரின் சகாயிங்க் பகுதியில் பல PDF குழுக்களை கட்டுப்படுத்தும் முன்னாள் தொழிலதிபரான நாகர், “இது சமமான சண்டை அல்ல” என்று பிபிசியிடம் கூறினார். PDF ஆனது கவண்களுடன் மட்டுமே தொடங்கியது, இருப்பினும் அவர்கள் தங்கள் சொந்த ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் தற்போது உருவாக்கியுள்ளனர்.

பெரும் ஆயுத பலம் கொண்ட ராணுவம் வான்வழி சுடும் சக்தியைக் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யா, சீனா உட்பட இந்த ராணுவ ஆட்சிக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடுகளிடமிருந்து அவர்கள் ஆயுதங்களை வாங்க முடியும்.

இது தொடர்பாக ஒரு வெளிப்படையான விசாரணை ஒன்று பிபிசியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அந்த விசாரணை அறிவிப்பு, ரஷ்ய கவச வாகனங்கள் சில வாரங்களுக்கு முன்பு யாங்கூனில் இறக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

ஆனால் PDF இன் பலம் உள்ளூர் சமூகங்களில் அதற்கு உள்ள ஆதரவு. அடிமட்ட எதிர்ப்பாக ஆரம்பித்து, இப்போது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட , தைரியமான மற்றும் கடினமானதாக இந்தப் போர் மாறியுள்ளது . ராணுவ ஆட்சியால் நாடுகடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் [NUG] சில PDF குழுக்களை அமைக்கவும் வழிநடத்தவும் உதவியது. மேலும் அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றவர்களுடன் தொடர்பிலும் உள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை தாங்களே எடுத்துக்கொள்வதைத் தவிர PDFக்கு வேறு வழியில்லை என்கிறார் நாகர். “ஒரு வட்ட மேசையில் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பதெல்லாம் இன்று வேலைக்கு ஆகாது என்று நான் நினைக்கிறேன். உலகம் நம் நாட்டைப் புறக்கணிக்கிறது. அதனால் நான் ஆயுதம் ஏந்துவேன்.”

இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் கவண் வில்லை பயன்படுத்தினர்

பட மூலாதாரம், Getty Images

தனது அக்காக்களுடன் PDF இல் இணைந்த ஹேரா, “ராணுவ சர்வாதிகாரத்தை வேரறுப்பதே” தங்கள் நோக்கம் என்கிறார்.

மேலும், “ராணுவம் அப்பாவி மக்களைக் கொன்றது. மக்களின் வாழ்வாதாரம், சொத்துக்கள் மற்றும் உடமைகளை அழித்தது. மக்களைப் பயமுறுத்துகிறது . அதை என்னால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றும் அழுத்தமாகக் கூறுகிறார்.

டிசம்பர் மாதம் நடந்த மற்றொரு ராணுவத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவரிடம் பிபிசி பேசியது. மத்திய மியான்மரில் உள்ள நாகாட்வினில் உள்ள அவர்களது கிராமத்திற்குள் ராணுவ வீரர்கள் நுழைந்தபோது ஓட முடியாமல் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மூவர் முதியவர்கள், இருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கிராம மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தினர், எதிர்ப்புப் போராளிகளைத் தேடிக்கொண்டிருந்ததாக உயிர் பிழைத்தவர் கூறுகிறார்.

இறந்த ஒருவரின் மனைவி, தனது கணவரின் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறுகிறார். “விளக்கம் சொல்லும் அளவுக்கு கூட பேச முடியாத ஒரு முதியவரை அவர்கள் கொன்றனர். அதை என்னால் மறக்கவே முடியாது. அதை நினைக்கும் போதெல்லாம் அழுகிறேன்” என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

ராணுவம் நேர்காணல் வழங்குவதெல்லாம் மிக அரிது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த ராணுவ ஆட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன் , PDF ஐ பயங்கரவாதிகள் என்று விவரித்தார். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கைகளை நியாயப்படுத்தும் விதமாக அவர் இப்படி ஒரு சொல்லைப் பயன்படுத்தினார்.

மேலும், “அவர்கள் எங்களைத் தாக்கினால், பதிலடி கொடுக்கும்படி எங்கள் படைகளுக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நியாயமான பாதுகாப்பை அடைவதற்காக தகுந்த பலத்தைப் பயன்படுத்தி நாட்டையும், வட்டாரங்களையும் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

ராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயம்பட்ட நபரை பாதுகாக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

இரு தரப்பிலும் உள்ள போராளிகளின் சரியான எண்ணிக்கையை மதிப்பிடுவது கடினம். அதிகாரபூர்வமாக, மியான்மர் ராணுவம் சுமார் 3,70,000 படையினரைக் கொண்டது. ஆனால் உண்மையில் அது மிகவும் சிறியதாகவும் இருக்கலாம். மேலும் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு நடந்த விலகல்களால் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். இதேபோல், PDF இல் உள்ளவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிடுவது கடினம்.

NUG ஆல் உருவாக்கப்பட்ட பிரிவுகளுடன் சேர்த்து, சில PDF உறுப்பினர்கள் எல்லையில் இயங்கும் ஆயுதக் குழுக்களால் பயிற்சியளிக்கப்பட்டு ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள். சில குழுக்கள் முந்தைய அரசாங்கங்களுடன் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்டன. அந்த போர் நிறுத்தங்கள் எல்லாம் இப்போது அமலில் இல்லை.

குழுக்கள் இணைந்து நாட்டைத் தகர்க்க விரும்பியதற்காகவும் முன்னர் ராணுவப் பிரசாரத்தை நம்பியதற்காகவும் PDF இப்போது இனப் போராளிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது . அத்துடன் PDF இப்போது ஒருமனதாக எதிர்கால கூட்டாட்சிக்கும் அழைப்பு விடுக்கிறது, அதில் அனைவருக்கும் சம உரிமைகள் இருக்கும்.

ராணுவ ஆட்சி அமலானபோது அதை எதிர்த்த போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்காக மார்ச் 2021 இல் காவல்துறை முன்பு மண்டியிட்டார் ஒரு கன்னியாஸ்திரி. அவர், பிபிசியிடம் பேசியபோது, ” ராணுவ ஆட்சி ஏற்பட்டதிலிருந்து உருவான அரசியல் எழுச்சி பொதுமக்களின் வாழ்க்கையில் ஒரு நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

காவல்துறையின் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

பட மூலாதாரம், Myitkyinar News Journal via Reuters

இதுகுறித்து பேசிய கனியாஸ்திரி,

இந்தப் போராட்டங்களால் “குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. கல்வி, சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் அனைத்தும் பின்தங்கிவிட்டன. மோசமான பொருளாதாரம் காரணமாக சிலர் கருக்கலைப்பு செய்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்வாதார சிரமங்களால் சரியாக வழிநடத்த முடியாமல் போனது.” என்று கோபப்பட்டார்.

அதேசமயம் இந்த கன்னியாஸ்திரி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போற்றுவதாகவும் கூறுகிறார்.

“அவர்கள் துணிச்சலானவர்கள். ஜனநாயகத்தை அடைவதற்கும், நாட்டின் நலனுக்காகவும், அமைதியைப் பெறவும், இந்த நாட்டை [இராணுவ ஆட்சியில் இருந்து] விடுவிக்கவும் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்வதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நான் அவர்களைப் பாராட்டுகிறேன், நான்’ நான் அவர்களைப் பற்றி பெருமைப்படுகிறேன், நான் அவர்களை மதிக்கிறேன்.” என்றும் தெரிவித்தார்.

Additional reporting by Rebecca Henschke and Becky Dale. Design by Jana Tauschinski.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »