Press "Enter" to skip to content

சிரியாவில் ஐ.எஸ் தலைவரை அழிக்க பைடன் வகுத்த வியூகம் – புதிய தகவல்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷியின் மரணத்தின் மூலம் “உலகின் முன்னிருந்த ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கியுள்ளது,” என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க படையினரின் ராணுவ நடவடிக்கையின் கடைசி கட்டத்தில், குரேஷி ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னையும் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் அவர் மாய்த்துக் கொண்ட செயல், கோழைத்தன விரக்தியின் அடையாளம்”, என்று பைடன் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பிறகு சம்பவ பகுதியில் 13 பேரின் உடல்கள் கிடைத்ததாக சிரியாவின் மீட்புக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையானது, வடக்கு இட்லிப் மாகாணம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே உள்ள எதிர்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அட்மேஹ் நகரின் புறநகரில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டத்தை இலக்கு வைத்து நடந்தது.

இப்பகுதி ஜிஹாதிக் குழுக்கள் மற்றும் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் பிரிவுகளின் கோட்டையாக கருதப்படுகிறது.

இந்த பகுதி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ரீதியாக வீழ்த்தப்பட்டிருந்தாலும், பின்னர் படிப்படியாக எழுச்சி பெற்று வந்தது.

சிரியா தாக்குதல்

பட மூலாதாரம், EPA

அப்துல்லா கர்தாஷ் மற்றும் ஹஜ்ஜி அப்துல்லா என்றும் அழைக்கப்படும் குரேஷியை பிடிக்க அல்லது கொல்லும் நடவடிக்கை குறித்து அதிபர் பைடனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்க ராணுவ தளபதிகள் விவரித்திருந்தனர் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரேஷி தனது குடும்பத்துடன் அட்மேயில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வசித்து வந்ததாகவும், அவர் ஒருபோதும் வெளியில் செல்வதில்லை என்றும், அதற்கு பதிலாக கூரியர்களை பயன்படுத்தி சிரியா மற்றும் பிற இடங்களில் உள்ள ஐஎஸ் குழுக்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்து வந்ததாகவும் உளவுத்துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தனைக்கும் இதே கட்டடத்தில் ஐ.எஸ் குழுவுடன் தொடர்பில்லாத அல்லது குரேஷியின் இருப்பை அறியாத மற்றொரு குடும்பம் தரை தளத்தில் வசித்து வந்தது.

இந்த நிலையில், குரேஷியை இலக்கு வைக்கும் ராணுவ நடவடிக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஜோ பைடன் அனுமதி அளித்தார். இதையடுத்து புதன், வியாழனுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் (புதன்கிழமை 22:00 GMT) பல உலங்கூர்திகள் அட்மேக்கு வந்தன. அங்கிருந்தபடி வெள்ளை மாளிகையின் போர்ச்சூழல் கண்காணிப்பு அறையில் இருந்தபடி குரேஷி தாக்குதல் நடவடிக்கையை நேரலையில் அதிபர் கண்காணித்தார்.

அமெரிக்க சிறப்புப் படைகள் தரையில் ஐஎஸ் ஆயுததாரிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும், வாகனங்களில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

உலங்கூர்திகள் புறப்படுவதற்கு இரண்டு மணிநேரம் முன்புவரை தொடர் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் குண்டு சத்தம் கேட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் கூறின.

1px transparent line

இந்த ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் தரை தளத்தில் வசிக்கும் குடும்பத்தில் இருந்த ஒரு பெண், ஒரு ஆண் மற்றும் பல குழந்தைகள் – பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், குரேஷி “ஒரு குண்டை வெடிக்கச் செய்தார் என்றும் அது அவரையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அவரது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் கொன்றது” என்றும் ஒரு அதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இந்த நடவடிக்கையின் முடிவுகளை நாங்கள் இன்னும் மதிப்பிடும்போது, அல்-பாக்தாதியை அழித்த 2019ஆம் ஆண்டு நடவடிக்கையில் நாங்கள் பார்த்த அதே கோழைத்தனமான பயங்கரவாத தந்திரமாக இது தோன்றுகிறது,” என்று அந்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.

குரேஷியின் முன்னோடியான அபு பக்கர் அல்-பாக்தாதி, அட்மேவிலிருந்து 16 கிமீ (10 மைல்) தொலைவில் உள்ள ஒரு மறைவிடத்தில் இருந்தபோது அவரை பிடிக்க அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய சோதனையின் போது அவரும் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னையும் மூன்று குழந்தைகளையும் கொன்றதாக அமெரிக்கா கூறியது.

குரேஷியின் கூட்டாளி ஒருவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களுடன் முதல் மாடியில் மறைந்திருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த ஆயுததாரியும் அவரது மனைவியும் சாகும்வரை அமெரிக்க துருப்புக்களுடன் சண்டையிட்டனர். பின்னர், கட்டடத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் வெளியே வந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, வேறொரு இடத்தில் இருந்து கொண்டு ராணுவ உலங்கூர்தி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் குறைந்தது இரண்டு பேரும் அந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

சிரியா தாக்குதல்

பட மூலாதாரம், EPA

வியாழன் காலையில் குடியிருப்பு கட்டடத்தை பார்வையிட்ட ஏஎஃப்பி செய்தி நிறுவன நிருபர் ஒருவர், ரத்தம் தெறித்த சுவர்கள், கருகிய கூரைகள் மற்றும் ஒரு பகுதி இடிந்து விழுந்த கூரையுடன் – கடுமையான போரின் வடுக்களை கட்டடம் தாங்கியதாக கூறினார்.

சிரியா சிவில் டிஃபென்ஸ் என்று அழைக்கப்படும் ஒயிட் தலைக்கவசம்ஸ் மீட்புக்குழுவினர், சரியாக காலை 03:15 மணிக்கு கட்டடத்தை அடைந்து ஆறு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 13 பேரின் உடல்களை மீட்டதாக தெரிய வந்துள்ளது.

காயமடைந்த ஒரு பெண்ணையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர், அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் அங்கு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒயிட் தலைக்கவசம்ஸ் அமைப்பு கூறியது.

என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக மோதலின் போது கட்டடத்தை நெருங்கியபோது காயமடைந்த ஒருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான மனித உரிமைகளுக்கான சிரியன் அப்மேலாய்வுட்டரி அமைப்பு, இறந்தவர்களின் எண்ணிக்கை 13 என்று கூறியது. அதில் நான்கு பேர் குழந்தைகள் மற்றும் மூன்று பேர் பெண்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »