Press "Enter" to skip to content

யுக்ரேன் மீதான ரஷ்ய-அமெரிக்க அழுத்தம்: இந்தியா எந்த பக்கம்?

  • ரூபஸா முகர்ஜி
  • பிபிசி மானிடரிங்க்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா எந்த ஒரு பக்கமும் சார்பு நிலை எடுப்பது சிக்கலாகி விட்டது. எனவே, அது சமநிலையைத் தக்க வைக்க முயற்சிக்கிறது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவின் கேந்திர முக்கியவம் வாய்ந்த கூட்டணி நாடுகள். ஆனால், யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இராஜதந்திர சமநிலையைக் கொண்டு வருவது இந்தியாவால் சாத்தியமா?

உண்மையில், இந்த விஷயத்தில் இந்தியா தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பும். ஆனால், ரஷ்யாவும் இந்தியாவுடனான சிறப்பான ராஜீய உறவை கொண்டுள்ள நாடு.

நீண்ட காலமாக ரஷ்ய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. எனவே, அது ரஷ்யாவை சார்ந்து இருக்கிறது. இதனுடன், சீனாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த விஷயத்திலும் ரஷ்யாவின் ஆதரவு அவசியம்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்கும் முயற்சியில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் யுக்ரேன் பதட்டங்கள் பற்றி விவாதிக்க ஜனவரி 31 அன்று நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

ஆனால், விவாதம் நடந்தபோது, அங்கு வந்திருந்த இந்தியப் பிரதிநிதி, இந்தப் பதற்றத்தைத் தணித்து, பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இக்கட்டான நிலையில் இந்தியா

யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இரு நட்பு நாடுகளும் மோதும் நிலையை இந்தியா விரும்பவில்லை. இது நடந்தால், இந்தியா ஒரு பக்கச் சார்பு நிலையை எடுக்க வேண்டி வரும். அதன் மூலோபாய சுயாட்சிக்கு அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.

மாறிவரும் புவி-அரசியல் சமன்பாட்டில் இது இந்தியாவுக்குக் கடினமான காலமாக இருக்கும்.

இந்த விவகாரத்தில் ராஜீய விவகார நிபுணர்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷ் கக்கர் பிப்ரவரி 1ஆம் தேதி இந்திய ஆங்கில நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேனில், “இந்தியா நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதே சிறந்த வழி. இந்தியாவின் பாரபட்சமற்ற தன்மை அமெரிக்காவை எரிச்சலடையச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியா AUKUS இல் உறுப்பினராக இருந்தால், அது அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். ஆனால், இந்தக் கூட்டமைப்பு, கஸில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும்.

இந்திய-ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தத்தால் அமெரிக்கா எரிச்சல்

இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியா தனது ராணுவ தளவாடங்களில் 55 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்க விரும்புகிறது. ஆனால், அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும், ஆயுதங்கள் வாங்கும் விஷயத்தில் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறிவருகிறது.

அரசை ஆதரிக்கும் இந்தி செய்தி சேனல் Zee News தனது நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் இந்த ‘இக்கட்டான நிலையை’ விவாதித்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்கள் என்பதால், யுக்ரேன் விவகாரத்தில் நரேந்திர மோடிக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

“இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வளர்ந்து வரும் நட்பால், ரஷ்யாவுடனான அதன் பழைய நட்பு பலவீனமடைந்துள்ளது என்று அர்த்தமல்ல” என்று அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

விளாடிமிர் புதின் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், EPA

சீன விவகாரம்

யுக்ரேன் விவகாரத்தில், ரஷ்யா மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால், சீனாவுடனான ரஷ்யாவின் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக, ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பும் வேகமாக அதிகரிக்கும்.

யுக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவை இந்தியா மறைமுகமாக ஆதரிக்க முயன்றால், அது ரஷ்யாவுடனான உறவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ரஷ்யா இதுவரை எந்தப் பக்கமும் சாரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திலும் இந்த விஷயத்தில் ரஷ்யா நடுநிலை வகிக்கும் என்று இந்தியா நம்புகிறது.

சர்வதேச விவகாரங்கள் ஆய்வாளர் ரஞ்சய் சென் ஜனவரி 22 அன்று ‘தி ட்ரிப்யூன்’ ஆங்கில செய்தித்தாளில், “இதுவரை இந்தியாவின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாளியாக அமெரிக்கா இருந்து வந்தது.

இந்தியா சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அமெரிக்காவுடன் கூட்டு அவசியம். அமெரிக்காவுடனான உறவு வலுவாக இருந்தால், சீனாவின் சவாலை இந்தியா எதிர்கொள்ள முடியும். ஆனால், ரஷ்யாவிற்கும் இந்திய-அமெரிக்கக் கூட்டணி பற்றிய அச்சம் இன்னும் குறையவில்லை” என்று எழுதினார்.

யுக்ரேன் படை

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் சீனாவால் இந்தியாவுக்குப் பின்னடைவு

ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சூழ்நிலையை இந்தியா தவிர்க்க விரும்புகிறது. அங்கிருந்து அமெரிக்கா வெளியேறியதும் தாலிபன்களை அங்கீகரிப்பதில் சீனா அபார வேகம் காட்டியது.

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதில் இந்தியாவை விட சீனா முன்னிலை பெற்றது. இந்தியாவின் திட்டங்கள் ஆட்டம் கண்டன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், ஈரான், லிபியா மற்றும் சீனாவில் கூட அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இந்தியா விலை கொடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கான இந்திய தூதராக இருந்த கன்வால் சிபல், ஜனவரி 21 அன்று தனது ட்வீட்டில், “நேட்டோவில் யுக்ரேனுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது என்று இந்தியா அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமா? யுக்ரேனைத் தாக்க வேண்டாம் என்று ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைக்க இந்தியாவால் இயலுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

யுக்ரேன் பதற்றம் காரணமாக, அமெரிக்காவின் கவனம் ஆசிய-பசிபிக் பகுதியிலிருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கு மாறும். இது இந்தியாவுக்குக் கூடுதல் கவலை அளிக்கும்.

நவம்பர் 2020 இல், கிரிமியாவில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உக்ரைன் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அப்போது இந்தியா இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

முன்னதாக 2014ல், கிரிமியாவை இணைத்த பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை மன்மோகன் சிங் அரசு எதிர்த்தது.

ஸ்னைப்பர் ஆயுதத்துடன் ராணுவ வீரர்

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 31 அன்று யுக்ரேன் நெருக்கடி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தியின் அறிக்கை வெவ்வேறுவிதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய திருமூர்த்தி, “யுக்ரேன்-ரஷ்யா எல்லையில் பதற்றம் உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு நலன்கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது,” என்றார்.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “இந்தியா தனது அறிக்கையில் ‘அனைத்து நாடுகளின் சட்டபூர்வமான பாதுகாப்பு நலன்கள்’ பற்றி பேசியது. ஆனால் அது ரஷ்யாவின் நலன்களுக்காக வாதிடும் அறிக்கை என்று பொதுவாக நம்பப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், மூலோபாய மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர் தன்வி மதான், யுக்ரேன் நெருக்கடிக்கு “அமைதியான தீர்வுக்கு” அழைப்பு விடுத்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் முந்தைய ட்வீட்டைக் குறிப்பிட்டார்.

“விளாடிமிர், அப்படிச் செய்ய வேண்டாம் என்று பகிரங்கமாகச் சொல்ல வருவதாகத் தெரிகிறது” என்று அவர் எழுதினார்.

பீரங்கிகள்

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

தற்போதைக்கு ரஷ்யா – யுக்ரேன் விவகாரத்தில் ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கும் என்று தெரிகிறது. ஆனால், ரஷ்யா ஆக்ரோஷமான அணுகுமுறையை எடுத்து, அமெரிக்காவுடனான அதன் பதற்றம் ஒரு பெரிய மோதலாக மாறினால், இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இருப்பினும், இத்தகைய சூழ்நிலையில் கூட இந்தியா-ரஷ்யா அல்லது இந்திய-அமெரிக்க உறவுகளில் பெரிய மாற்றம் ஏற்படாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வெளியுறவுத்துறை நிபுணர் ஜோராவர் தௌலத் சிங், “ஆசியா-பசிபிக் அல்லது யூரேசியாவில் சீன மேலாதிக்கத்தை ரஷ்யா எப்படிப் பொறுத்துக்கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்” என்று அரசு சார்பு ஆங்கில தொலைக்காட்சியான Times Now இல் கூறினார்.

அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்பெற்றாலும், சீனாவின் இளைய பங்காளியாக இருக்க ரஷ்யாவால் முடியாது. ” என்றும் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »