Press "Enter" to skip to content

மியான்மர் ராணுவம்: சொந்த மக்களையே வேட்டையாடும் கொடூரம் – இத்தனை பலம் பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஓராண்டுக்கு முன்னர் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ ச்சீ அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து, மியான்மரின் ராணுவம் – தாட்மடா என்று அழைக்கப்படுகிறது. – கொடூரமான அடக்குமுறை மூலம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களை கொன்று உலகையே அந்நாட்டு ராணுவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மியான்மர் குடிமக்களைப் பொறுத்தவரை, கண்மூடித்தனமான வீதியோரகொலைகள் மற்றும் கிராமங்கள் மீது நடத்தப்படும் மோசமான ராணுவ தாக்குதல்களின் ஆண்டாக இது உள்ளது.

மிக சமீபத்தில் 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் ‘தாட்மடா’ தொடர் தாக்குதல்களை நடத்தி எதிரிகளை சித்திரவதை மற்றும் வெகுஜன கொலையில் ஈடுபட்டதை பிபிசியின் புலனாய்வு கண்டறிந்தது.

அரசியல் கைதிகளுக்கான உதவி வழங்கும் அமைப்பின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது முதல் இதுவரை 1,500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் தாட்மடா எப்படி இந்த நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதப்படையாக மாறியது, அது ஏன் இவ்வளவு கொடூரமானதாக செயல்படுகிறது?

தாட்மடா என்றால் என்ன?

மியான்மர் ராணுவம்

பட மூலாதாரம், Reuters

தாட்மடா என்பது பர்மிய மொழியில் “ஆயுதப் படைகள்” என்று பொருள்படும், ஆனால் இந்த பெயர் தற்போதைய ராணுவ அதிகாரத்திற்கு ஒத்ததாக மாறியுள்ளது,

அந்த நாட்டில் மிகப்பெரிய சக்தியாகவும் உலகளாவிய கவனத்தையும் இந்த தாட்மடா பெற்றுள்ளது.

பல நூற்றாண்டுகளாக பர்மிய மன்னராட்சி ஒரு நிலையான ராணுவத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அது பிரிட்டிஷ் ஆளுகையின்போது கலைக்கப்பட்டது.

தாட்மடாவின் வேர்கள் பர்மா சுதந்திர ராணுவத்தில் (BIA) 1941இல் நிறுவப்பட்டன. அந்த படை பர்மிய புரட்சியாளரான ஆங் சானை உள்ளடக்கிய குழுவால் உருவாக்கப்பட்டது. பல பர்மியர்களால் ஆன்மிக “தேசத்தின் தந்தை” என்று ஆங் சான் கருதப்படுகிறார். அவர்தான் ஆங் சான் சூ ச்சீயின் தந்தை.

1948இல் பிரிட்டனில் இருந்து பர்மா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆங் சான் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே, பர்மிய ராணுவம் ஏற்கனவே பிற போராளிகளுடன் இணைந்து தேசிய ஆயுதப் படையை உருவாக்கியிருந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, அது இறுதியில் தாட்மடா என்று இன்று நாம் அறியும் பெயரில் அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மியான்மர் ராணுவம் விரைவாக அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெற்றது.

1962 ஆண்டு வாக்கில், அது ஒரு புரட்சி மூலம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. அதன் பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட போட்டியின்றி ராணுவ ஆட்சி அங்கு நடந்தது. 1989இல், பர்மா என்ற நாட்டின் பெயரை அதிகாரபூர்வமாக மியான்மர் என ராணுவ ஆளுகை மாற்றியது.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் மிக உயரிய அந்தஸ்தை கொண்டுள்ள இந்த ராணுவ படையில் சேருவது பலருக்கும் ஒரு லட்சிய இலக்காகவே இருக்கிறது. இருப்பினும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை அதன் சில உறுப்பினர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

“நான் ராணுவத்தில் சேர்ந்தேன், ஏனென்றால் நான் துப்பாக்கியை பிடித்து, போர் முன்னரங்கில் சென்று, சண்டையிட விரும்பினேன். சாகசங்கள் செய்து நாட்டிற்காக தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு பிடிக்கும்,” என்று ராணுவத்தின் முன்னாள் கேப்டன் *லின் ஹடெட் ஆங் கூறினார்.

பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக எழுச்சி பெற்ற நாட்டின் ஒத்துழையாமை இயக்கத்தில் (CDM) சேரும் நோக்குடன் அவர் ராணுவ பணியில் இருந்து விலகினார், மருத்துவர்கள், செவிலியர்கள், தொழிற்சங்கத் தொழிலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

“[ஆனால் இப்போது நான்] மிகவும் வெட்கப்படுகிறேன். அந்த ஆயுத படை பற்றிய எனது தவறான நினைப்பால் தவறு செய்துவிட்டேன். அமைதியாக போராடியவர்கள் சில சமயங்களில் வெடிகுண்டுகள், கொடூரமான படைகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது நாங்கள் எதிர்பார்த்த தாட்மடா அல்ல. அதனால்தான் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தேன்,” என்கிறார் கேப்டன் *லின்.

மியான்மரின் உருவகம்

மியான்மர் 130க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனக்குழுக்களைக் கொண்டுள்ளது. பௌத்த பாமர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாட்டின் பெரும்பாலான உயரடுக்குகளில் பாமர்களும் உள்ளனர் – மேலும் ராணுவம் தன்னை உயர் வகுப்பினரில் மிக உயர்ந்தவர்களாக பார்ப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நவீன மியான்மருடன் ஆழமாக பின்னிப்பிணைந்த வரலாற்றுடன், தன்னை தேசத்தின் நிறுவனராக தாட்மடா சுயமாக அழைத்துக் கொள்கிறது. தங்களுடன் இருப்பவர்களே உண்மையான பர்மியர் என்றும் அது கூறுகிறது.

“இந்த அதி-தேசியவாத சித்தாந்தத்தில் மிக மிக ஊறியவர்களாக ராணுவத்தினர் உள்ளனர்,” என்கிறார் பாங்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் மியான்மர் விவகாரங்கள் நிபுணர் க்வென் ராபின்சன்.

“மியன்மாரின் சொந்தப் பகுதிக்கு தகுதியற்றவர்களாக சிறுபான்மையின குழுக்களை கருதும் ராணுவம் அந்த மக்களை எப்போதும் அச்சுறுத்தல்களாகவே பார்க்கிறது. நாட்டின் ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்க விரும்பும் குழுக்களாக, சிறுபான்மையினரை கருதி அவர்களை பிரதான நிலத்தில் இருந்து அகற்ற வேண்டும் அல்லது ஒடுக்க வேண்டும் என ராணுவம் கருதுகிறது,” என்கிறார் க்வென் ராபின்சன்.

இந்த சிந்தனைதான் பல தசாப்தங்களாக, டஜன் கணக்கான சிறிய அளவிலான உள்நாட்டுப் போர்களின் தளமாக மியான்மர் இருக்க காரணம்.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

ஆயுதமேந்திய இனப் போராளிகளின் சிக்கலான, போட்டியிடும் வலையமைப்பு – அனைத்தும் மத்திய பர்மிய அரசிலிருந்து விலகி சுயநிர்ணய உரிமையை நாடுவதாக உள்ளன.

தாட்மடா எப்போதும் ஒரே நேரத்தில் பல முனைகளில் சண்டையிடுவதை உறுதி செய்துள்ளது. உண்மையில், இந்த இன ரீதியிலான போராளிகளுடன் பர்மிய ராணுவம் தொடர்ந்து மோதலில் ஈடுபடுவது உலகின் மிக நீண்ட கால உள்நாட்டு மோதலாக சில பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

“இது தாட்மடாவை இரக்கமற்ற சண்டை போடும் இயந்திரமாக உருவகப்படுத்தியிருக்கிறது. இந்த ராணுவப்படையினர் ரோபோ முறையில் வாங்குதல்களைப் பின்பற்றுவார்கள்,” என்கிறார் க்வின் ராபின்சன்.

ஆனால், இந்த ராணுவத்தினருக்கு எதிரான பிரசாரம், ஒவ்வொரு நாளும் தீவிரம் அடைவது, இனக்குழுக்குள் உடனான அவர்களின் மோதலை கடினப்படுத்தியது.

முக்கியமாக, சொந்த எல்லைகளுக்குள் சொந்த மக்களையே கொல்லும் பழக்கத்தை ராணுவத்தினர் மத்தியில் ஏற்படுத்தியது.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் போன்ற சில சிறுபான்மை இனத்தவர்கள் நீண்ட காலமாக ராணுவத்தின் மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இப்போது, பல பாமர் பௌத்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அவர்களது சொந்த ராணுவத்தாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

‘மத வழிபாட்டு முறை போல’

க்வின் ராபின்சனின் கூற்றுப்படி, தாட்மடாவின் பார்வையில் அதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சாத்தியமான கிளர்ச்சியாளர்கள்: “இந்த எதிர்ப்பாளர்களை ராணுவத்தினர் துரோகிகளாகப் பார்க்கிறார்கள்.”

சமூகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கடமையாற்றும் ராணுவத்தினருக்கு இந்த சிந்தனை இயல்பாகவே ஏற்படுகிறது.

நிபுணர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளின் சாட்சியங்களின்படி, சிலர் மூடிமறைக்கப்பட்ட முகாம்களுக்குள் அல்லது படைத் தளங்களுக்குள் வாழ்கின்றனர்,

அங்கு அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரிதும் கண்காணிக்கப்பட்டு ராணுவ சார்பு செயல்பாடுகளுக்கு உடன்பட்டவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

இது ராணுவ வீரர்களுக்கு உள்ளேயே குடும்ப உணர்வை வளர்க்கும் நோக்கில் அதிகாரிகளின் குழந்தைகள் சில சமயங்களில் மற்ற அதிகாரிகளின் குழந்தைகளை திருமணம் செய்து கொள்வதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“மியான்மர் ராணுவம் ஒரு மத வழிபாட்டு முறைக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது,” எனும் க்வின் ராபின்சன் , “அவர்களுக்கு வெளியாட்களுடன் அதிக தொடர்பு இல்லை,” என்று கூறுகிறார்.

சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர வந்த ஒரு முன்னாள் வீரர் இதை நம்மிடையே உறுதிப்படுத்துகிறார்.

“இந்த வீரர்கள் நீண்ட காலமாக ராணுவத்தில் பணியாற்றுபவர்கள். அவர்களுக்கு ராணுவத்தில் உள்ள மொழி மட்டுமே தெரியும். ராணுவத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு புரிவதில்லை,” என்கிறார் முன்னாள் லெப்டிணன்ட் சான் மியா தூ.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

மேலும், மியான்மரின் ஆயுதமேந்திய இன அமைப்புகளுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள், பெரும்பாலும் கொடூரமானதாக இருந்தபோதிலும், அது ராணுவத்திற்கு மிகவும் ஆதாயம் தரக் கூடிய நடவடிக்கையாக இருந்துள்ளது.

கவனமாக நிர்வகிக்கப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தங்கள் தேச வளங்கான பச்சை மாணிக்க கல், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முக்கிய வளங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உதவின.

இந்த வளங்களின் லாபங்கள் – சில சமயங்களில் சட்டபூர்வமானவை. சில சமயங்களில் சட்டவிரோதமானவை – பல தசாப்தங்களாக ராணுவத்தின் முக்கிய வருமான ஆதாரமாக அவை இருந்து வருகின்றன.

வங்கியில் தொடங்கி பீர் மற்றும் சுற்றுலா வரை அனைத்திலும் முதலீடு செய்து பெரிய நிறுவனங்களையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

பொருளாதாரத்தின் மீதான ராணுவத்தின் பிடி அதிகம் என்பதால் எல்லா நேரங்களிலும் எல்லோரும் ராணுவத்தை எதிர்க்கவில்லை.

எண்ணற்ற கொடுமைகளை தாட்மடா செய்த போதிலும், பழமைவாத வணிக உரிமையாளர்கள் அதனுடன் கூட்டு சேர்ந்தே பணியாற்றுகிறார்கள்.

ஆனால் பல ஆண்டுகளாக நிர்வாகத்தில் காணப்பட்ட ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகள் தொடர்பான பொதுவான கருத்து, ராணுவ தலைமைக்கு எதிராகவும், ஆங் சான் சூ ச்சீயின் கீழ் ஜனநாயக பாணியிலான ஆட்சியை நோக்கியும் திசை திருப்பின. அவரது தேசிய ஜனநாயக லீக் (NLD) சமீபத்திய தேர்தல்களில் பெரும் வெற்றியைப் பெற்றது.

‘ஒரு தேசத்துக்குள் தேசம்’

தாட்மடாவின் சிந்தனையின் பெரும்பகுதி இன்னும் மர்மமாகவே உள்ளது.

2020ஆம் ஆண்டு வரை மியான்மருக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஸ்காட் மார்சீல், “இது உண்மையில் ஒரு தேசத்துக்குள் இருக்கும் தேசம்” என்கிறார்.

“ராணுவத்தினர் மற்ற சமூகத்தினருடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒரு மாபெரும் எதிரொலி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் அனைவரும் எவ்வளவு முக்கியமானவர்கள், அவர்கள் மட்டும் எப்படி நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியும், அவர்கள் அதிகாரத்தில் இல்லாமல் வேரு யார் இருக்க முடியும் என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொல்கிறார்கள். தாங்கள் இல்லாவிட்டால் நாடு சிதைந்துவிடும் என்ற கருத்தைக் கொண்டவர்கள்,” என்கிறார் ஸ்காட் மார்சீல்.

உதாரணமாக, மார்ச் மாதம் தலைநகர் நே பே தாவில் ஜெனரல்கள் ஆடம்பரமான ராணுவ அணிவகுப்பு மற்றும் இரவு விருந்தை எவ்வாறு நடத்தினர் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் துருப்புக்கள் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றனர்.

ஆனால் இந்த வசதி வாய்ப்புகள் என்பது மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் மட்டுமே இருக்கும் என்று கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

“உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் பணக்காரர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் ஈட்டும் செல்வம் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுடன் பகிரப்படுவதில்லை,” என்று முன்னாள் ராணுவ வீரர் மேஜர் ஹெய்ன் தாவ் ஓ* பிபிசி பர்மிய சேவையிடம் கூறினார்.

“நான் தாட்மடாவில் சேர்ந்தபோது, ​​நான் நமது எல்லைகளையும் இறையாண்மையையும் காக்கப் போகிறேன் என்று நினைத்தேன். அதற்குப் பதிலாக, கீழ்மட்ட பதவிகள் மதிக்கப்படுவதில்லை மற்றும் மேலதிகாரிகளால் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டேன்,” என்கிறார் அவர்.

ராணுவப் படையினர் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த தங்களுடைய தலைவரும் ஜெனரலுமான மின் ஆங் ஹ்லைங்கிடமிருந்து தங்களுக்கான கட்டளைகளைப் பெறுகிறார்கள்.

ஆனால் ஒரு ராணுவ ஆட்சியாளரைச் சுற்றி நீங்கள் வழக்கமாக எதிர்பார்க்கும் ஆளுமை முறை என்பது அவரிடம் துளியும் இல்லை என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

“அவர் தான் அடிப்படை பிரச்னை என்று நினைப்பது தவறு” என்கிறார் மார்சீல். “இந்த ராணுவமும் அதன் கட்டமைப்பும்தான் பிரச்னை என்று நான் நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு கச்சிதமாக ஜெனரல் பொருந்தியிருக்கிறார்,” என்கிறார் அவர்.

“அநேகமாக எனது தொழில்முறை வாழ்க்கையில் நான் கையாண்ட மற்ற அமைப்புகளை விட, மற்றவர்கள் எவ்வளவு அழகாக விஷயங்களைப் பார்க்கிறார்கள் என்பதை ஒப்பிடும்போது அவர்கள் பார்க்கும் விதத்திற்கு இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது,” என ஜெனரல் ஹ்லைங் பொறுப்பேற்றபோது, பிபிசி பர்மிய சேவையிடம் மேஜர் ஓ கூறினார்.

“ஆனால் ஜெனரலின் பதவிக்காலம் முடிவடைந்தபோது அவர் தன்னைத்தானே நீட்டித்துக் கொண்டார். படையில் அவரை விட பல தளபதிகள் இருந்தனர், ஆனால் அவர் பதவி விலக மறுத்துவிட்டார். அவர் தனது சொந்த நலனுக்காக விதிகளை மீறியவர்,” என்கிறார் மேஜர் ஓ.

இருப்பினும், சக்திவாய்ந்த மியான்மர் ராணுவத்தில் மேஜர் ஓ போன்றவர்கள் சிறுபான்மையினர் ஆக உள்ளனர். பெரும்பாலான வீரர்கள் ஜெனரல் ஹ்லைங்கையும் அவரது புரட்சி நடவடிக்கையையும் ஆதரிக்கின்றனர்.

​​முன்னெப்போதையும் விட, தாட்மடா தனது சொந்த உருவகத்துக்கு ஏற்றவாறு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. ரகசியமான, உயர்வான எண்ணத்துடன் தனக்கு மட்டுமே கட்டுப்படக் கூடிய அமைப்பாக அது ஒரு உருவகத்தை கட்டமைத்து வருகிறது.

மார்சீல் இதைத்தான், “அடிப்படை என்னவென்றால் – உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி மியான்மர் ராணுவத்தினர் அதிகம் கவலைப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறுகிறார்.

நிக் மார்ஷ் மற்றும் பிபிசி பர்மிய சேவையின் செய்தி.

*அடையாளங்களைப் பாதுகாக்க சிலரது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »