Press "Enter" to skip to content

‘எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான பனிமலை மிக வேகமாக உருகி வருகிறது’ – ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Images

எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிமலை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது.

இது பனியாக மாறிய நேரத்தை காட்டிலும் 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது.

இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

1990ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2000 வருடங்களாக உருவான பனிமலைகள் உருக தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பனிப்பாறையின் அடர்த்தியான பகுதி அழிந்து அடியில் உள்ள கருத்த பனிப் பகுதி மீது சூரியன் படர்வதால் பனிப்பாறை வேகமாக உருகி வருகிறது.

இந்த பகுதியின் காலநிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆனால் வெப்பநிலை நிலையாக அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகுகிறது என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியை சேர்ந்த பருவநிலை விஞ்ஞானி டாம் மாத்யூ கூறுகிறார்.

பனிமலைகள் உருகுவது குறித்து இதுவரை பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தாலும், பருவநிலை மாற்றத்தால் இத்தனை வேகமாக உருவது குறித்து இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

10 விஞ்ஞானிகள் கொண்ட குழு உலகின் உயரமான வானிலை கண்காணிப்பு நிலையத்தை அந்த பனிமலையில் நிர்மாணித்தனர். மேலும் அங்கிருந்து சில பனிக்கட்டி மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர்.

இந்த ஆய்வு இதுவரை இல்லாத பல படிப்பினைகளை தங்களுக்கு தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவரெஸ்ட் கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

இமாலய மலைத்தொடர்களை நம்பி சுமார் ஒரு பில்லியன் மக்கள் உள்ளனர். இவர்கள் குடிநீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருக தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும்.

இந்த ஆய்வில் கண்டறிந்த தகவலை கொண்டு உலகின் பிற பனிப்பாறைகள் குறித்த ஆய்வை விரிவுப் படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் , உலகின் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »