Press "Enter" to skip to content

யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக யுக்ரேனைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டினர் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையால், பிற நாடுகளும் யுக்ரேனில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள், தங்கள் குடிமக்கள் விரைவில் யுக்ரேனில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.

ரஷ்யாவும் அமெரிக்காவும் யுக்ரேன் தலைநகர் கீவில் இருந்து தங்கள் தூதரக ஊழியர்களை அழைத்து கொள்கின்றன.

அமெரிக்க தூதரக ஊழியர்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள நாட்டின் மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்வார்கள் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி, ரஷ்ய தூதரக அதிகாரிகள் யுக்ரேனில் உள்ள தங்கள் தூதரகத்தை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கிறது.

ஆனால் இந்த செய்தி குறித்து இரு நாடுகளும் உறுதிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், யுக்ரேனுக்கான பிரிட்டன் தூதர் மெலிண்டா சிம்மன்ஸ், தானும், ஒரு முக்கிய குழுவும் கீவில் தங்கியிருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

யுக்ரேன் எல்லைப் பகுதிகளில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஒருவேளை யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் அங்குள்ள அமெரிக்கர்களை மீட்க தாயக படைகளை அனுப்ப இயலாது என்று பைடன் கூறியிருக்கிறார். அந்த பிராந்தியத்தில் “நிலைமை விரைவாக மோசமாகக் கூடும்” என்றும் அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

எல்லைக்கு அருகே ஒரு லட்சம் படையினரை குவித்துள்ள போதிலும், யுக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் தன்னிடம் இல்லை என்று ரஷ்யா திரும்பத்திரும்ப மறுத்து வருகிறது. ஆனால் தமது அண்டை நாடான பெலாரஸுடன் மிகப்பெரிய அளவிலான ராணுவ பயிற்சியை தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில், உலக தலைவர்கள் பலரும் யுக்ரேன் மீதான தற்போதைய நெருக்கடியைத் தணிக்க தங்களுடைய ராஜீய முயற்சிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு யுக்ரேனில் பிரிவினைவாத மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தலைவர்களுடன் நடந்த ஒன்பது மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை என்று ரஷ்யாவும் யுக்ரேனும் கடந்த வியாழன் தாமதமாக அறிவித்தன.

தற்போது ரஷ்யாவின் கடற்படை, போர் ஒத்திகைக்கு தயாராகி வரும் நிலையில், தமது படையினர் கடலுக்கு செல்வதை ரஷ்யா தடுத்து வருவதாக யுக்ரேன் குற்றம்சாட்டியது.

இது குறித்து யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், “அசோஃப் கடல் முற்றிலும் முடக்கப்பட்டு விட்டது. கருங்கடல் பாதையை ரஷ்ய படையினர் கிட்டத்தட்ட முழுமையாக துண்டித்து விட்டனர்“ என்று கூறினார்.

யுக்ரேனின் தெற்கே உள்ள கருங்கடல், அசோஃப் கடல் ஆகிய இரு கடல்களில் அடுத்த வாரம் ரஷ்யாவின் கடற்படை போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அசோஃப் கடலை முடக்கும் முடிவை ரஷ்யா திரும்பப் பெற்றுக் கொண்டதாக யுக்ரேனிய ஊடக தகவல்கள் கூறுகின்றன. அதே சமயம், கருங்கடலின் இரண்டு பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிரைமியாவில் ரஷ்ய கடற்படை கப்பல்கள் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கி விட்டன. யுக்ரேனின் வடக்கே பெலாரூஸிலும் 10 நாட்களுக்கான ராணுவ பயிற்சிகள் தொடர்ந்தன.

சிப்பாய்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்பை முயற்சித்தால், தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படையினரை விரைவாக யுக்ரேன் தலைநகரான கீஃபுக்கு அனுப்பி வைத்து அந்நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்யா எளிதாக்கும் என்ற அச்சம் உள்ளது.

ஆனால், எல்லையில் நடக்கும் போர் ஒத்திகை முடிந்த பிறகு அந்த படையினர் நிரந்தர தளங்களுக்குத் திரும்பும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தங்களுடன் ஆழ்ந்த சமூக மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட முன்னாள் சோவியத் குடியரசான யுக்ரேன், ஒரு நாள் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவில் இணையலாம் என்பதை ரஷ்யா ஏற்கவில்லை. அத்தகைய யோசனையை கூட நிராகரிக்க வேண்டும் என்கிறது ரஷ்யா.

2014ஆம் ஆண்டு முதல் யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. அப்போது முதல் எல்லையில் நடந்த மோதல்களில் 14,000 பேர் இறந்தனர். அதில் பலரும் பொதுமக்கள்.

கிழக்கு யுக்ரேனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் உடன்படிக்கை மீது புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட்டால், அது நெருக்கடியைத் தணிக்க ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தப்படலாம் என்று சில கருத்துக்கள் உள்ளன.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »