Press "Enter" to skip to content

யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவுடன் போரைத் தடுப்பதற்கான 5 சாத்தியமான வழிகள் என்னென்ன?

  • ஜேம்ஸ் லாண்டேல்
  • வெளியுறவு விவகாரங்கள் செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனில் ஒரு மிகப்பெரிய போர் ஏற்படுவதை சிந்திப்பதே அச்சமூட்டும் ஒன்றாக உள்ளது. அங்கு ரஷ்யா படையெடுத்தால், ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும். மேலும் பலர் தப்பிச் செல்லலாம்.

இதற்கான பொருளாதார செலவு கடுமையாக இருக்கும். மனிதாபமான அவலங்கள் பேரழிவை உண்டாக்குபவையாக இருக்கும்.

இந்த நீண்டகால பிரச்னைக்கு, அமைதியான வெளியுறவு ரீதியான தீர்வை காண முடியுமா?

போருக்கான பாதையில் இருந்து வெளியேற முடியும் ஒரு வழி குறித்து அனைத்து தரப்பில் உள்ள வெளியுறவு அதிகாரிகள் விவாதிக்கின்றனர். ஆனால், அத்தகைய பாதையை கண்டுபிடிப்பது எளிதானது அல்ல.

எந்த சமரசத்திற்கு ஒரு விலை உண்டு. இருப்பினும், ராணுவத்தை ஈடுபடுத்தாமலும், ரத்தம் சிந்தாமலும் சில சாத்தியமான வழிகள் இங்கே உள்ளன.

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய அதிபர் புதினை பின்வாங்கும்படி வற்புறுத்தலாம்

இந்த சூழ்நிலையில், எந்தவொரு படையெடுப்பு மூலம் விழையும் நன்மைகளை விட இழப்புகளே அதிகமாக இருக்கும் என்று மேற்கத்திய நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஒப்புக்கொள்ளவைக்கலாம்.

மனித உயிரிழப்புகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராஜரீக பின்னடைவு ஆகியவை மிகவும் பெரியதாக இருக்கும் என்றும், அவர் போர்க்களத்தில் ராணுவப் பலம் பெற்று இருந்தாலும், அவர் இத்தகைய காரணங்களால் மோசமான நிலைக்கே தள்ளப்படுவார் என்று எடுத்துரைக்கலாம்.

யுக்ரேனில் ஒரு ராணுவக் கிளர்ச்சியை மேற்கு நாடுகள் ஆதரிக்கக்கூடும் என்று அவர் அஞ்ச வேண்டியிருக்கும். இதனால் அவர் அதிகம் செலவை ஏற்படுத்தும் பல ஆண்டுகள் நடக்கவிருக்கும் போரில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கலாம்.

இந்த செலவுகள் அவரது உள்நாட்டு ஆதரவைக் குறைத்து, அவரது தலைமை பொறுப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று புதின் நம்ப வேண்டும்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், புதின் ராஜரீக வெற்றியைப் பெற மேற்கத்திய நாடுகள் அனுமதிக்க வேண்டும்.

இதன் மூலம், நேட்டோ தூண்டுதலுக்கு ராணுவ ரீதியாக பதிலளிக்க விரும்பாத அமைதியான தலைவராக தன்னை அவர் சித்தரித்துக்கொள்ளலாம்.

Territorial defence reservists across Ukraine have been preparing for a possible Russian invasion

பட மூலாதாரம், Reuters

இறுதியாக மேற்கத்திய நாடுகளின் கவனத்தைத் தான் ஈர்த்ததாக புதின் கூறலாம். அவரது “சட்டப்பூர்வமான பாதுகாப்புக் கவலைகள்” என்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அழைக்கும் விஷயங்களை அவர்கள் சிந்திக்கின்றனர் என்று அவர் கூறலாம்.

ரஷ்யா தான் ஒரு பெரிய சக்தி என்பதை உலகிற்கு நினைவூட்டி, பெலாரூஸ் பகுதியில் தனது இருப்பை நிலைநாட்டலாம்.

புதின் தோல்வியடைந்தார் என்று வாதிடுவது எளிதாக இருக்கும் என்பதே இந்த தீர்வில் உள்ள பிரச்னை. அவரது நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளை ஒன்றிணைத்திருக்கலாம்; ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் படைகளை நகர்த்துவதற்கு நேட்டோ வழிவகுத்திருக்கலாம்; நேட்டோவில் இணைவதற்கு ஸ்வீடனும் ஃபின்லாந்தும் பரிசீலிக்க ஊக்குவித்திருக்கலாம்.

ஆனால், பிரச்னை என்னவென்றால், புதின் யுக்ரேனை கட்டுப்படுத்தவும், நேட்டோவின் மதிப்பை குறைக்கவும் விரும்பினால், அவர் இப்போது பின்வாங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன.

நேட்டோவும் ரஷ்யாவும் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்

யுக்ரேனின் இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடு போன்ற அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதிலும், நேட்டோவின் உறுப்பினராகவதற்கான உரிமை; அதில் சேர விரும்பும் எந்த நாட்டிற்கும் ஒரு பொதுவெளியை அமைக்கும் நிலைப்பாடு குறித்தும் மேற்கு நாடுகள் தெளிவாக உள்ளன.

இருப்பினும், பரந்த ஐரோப்பிய பாதுகாப்புப் பிரச்னைகளில் பொதுவான தீர்வை காணலாம் என்பதை அமெரிக்காவும் நேட்டோவும் ஏற்றுக்கொண்டன.

இரு தரப்பிலும் உள்ள ஏவுகணைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், காலம் கடந்த ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களின் புதுப்பிப்பதும் இதில் அடங்கும்; ரஷ்ய மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையே நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல்; ராணுவப் பயிற்சிகள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பிடம் ஆகியவற்றில் அதிக வெளிப்படைத்தன்மை; செயற்கைக்கோள் ஆயுத சோதனை எதிர்ப்பில் ஒத்துழைப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.

யுக்ரேன் நேட்டோவில் சேர அனுமதிப்பது, ரஷ்ய பாதுகாப்பிற்கு பெரும் விலையைத் தருவதாக இருக்கும் என்ற அதன் முக்கிய கவலையைப் போக்க, இந்த பிரச்சினைகள் போதுமானதாக இருக்காது என்பதை ரஷ்யா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், நேட்டோ ஏவுகணை அணிவகுப்பை கணிசமாகக் குறைக்கப்பட்டால், அது குறைந்தபட்சம் ரஷ்யாவின் சில கவலைகளைத் தீர்க்க முடியும்.

சில வழிகளில், புதின் ஏற்கனவே இங்கு ஆதாயங்களைப் பெற்றுள்ளார்: ரஷ்யாவின் நிபந்தனைகளில், பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா புதிதாக ஈடுபட்டுள்ளது.

யுக்ரேனும் ரஷ்யாவும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை புதுப்பிக்க இயலும்

இது 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில், பெலாரஷ்ய தலைநகரான மின்ஸ்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஒப்பந்தங்களின் தொகுப்பாகும். இது கிழக்கு யுக்ரேன் அரசு படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர உருவாக்கப்பட்டது.

இது வெளிப்படையாக தோல்வியடைந்தது – சண்டை தொடர்கிறது. ஆனால் அது குறைந்த பட்சம் ஒரு போர்நிறுத்ததையும், கூட்டாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நோக்கிய பாதையை அமைத்தது.

கூட்டு ராணுவப் பயிற்சிக்காக ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் பெலாரூஸ் வந்தடைந்துள்ளன.

மின்ஸ்க் ஒப்பந்தங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வு காணலாம் என்று மேற்கத்திய தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மின்ஸ்க்தான் “அமைதியை கட்டியெழுப்புவதற்கான ஒரே பாதை” என்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் கூறுகிறார்.

மின்ஸ்க் ஒப்பந்ததை மீட்டெடுப்பது இந்த “பிரச்னையின் தீவிரத்தை குறைக்க ஒரு வலுவான வழி” என்று பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் பிபிசி டுடே நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் விதிகள் சுருங்கி, சர்ச்சைக்குரியவையாக இருப்பதே இதிலுள்ள பிரச்னை.

ரஷ்ய சார்பு தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்க யுக்ரேன் உள்ளூர் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ரஷ்ய அரசு கோருகிறது. ரஷ்ய அரசு முதலில் ரஷ்ய படைவீரர்களை ஆயுதங்களற்றவர்களாவும், அவர்களை தங்கள் பகுதிகளிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் யுக்ரேன் அரசு விரும்புகிறது.

யுக்ரேனின் டான்பாஸிலிருந்து பிரிந்து சென்ற பகுதிகளுக்கு மின்ஸ்க் ஒப்பந்தம் எத்தகைய சுயாட்சி அளிக்கும் என்பது மிகப்பெரிய சர்ச்சையாகும்.

அது கட்டுப்பட்ட அரசாக இருக்கும் என்று யுக்ரேன் அரசு கூறுகிறது. இதனை ரஷ்ய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. யுக்ரேனின் வெளியுறவுக் கொள்கை குறித்து டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) பகுதிகள் கருத்து கூற வேண்டும் என்று ரஷ்ய அரசு கூறுகிறது. இதனால் நேட்டோ உறுப்பினர் ஆக ரஷ்யா தடுத்து நிறுத்த உரிமையைக் கொண்டிருக்கும்.

அதுதான் யுக்ரேன் அரசுக்கு உள்ள பெரும் அச்சம். மின்ஸ்க் ஒப்பந்ததை புதுப்பிப்பது என்பது நேட்டோ உறுப்பினர்கள் வெளிப்படையாகக் கூறாமல், யுக்ரேன் நேட்டோவில் சேருவதை நிராகரிப்பதற்கு சமம். இதனால், இதற்கு யுக்ரேனின் மக்களில் ஆதரவும், உடன்பாடும் சாத்தியமற்றது.

பின்லாந்து நாடு போல் யுக்ரேன் நடுநிலை வகிக்கலாம்

ஒருவித நடுநிலைமையை ஏற்றுக்கொள்ள யுக்ரேனை வற்புறுத்த முடியுமா?

யுக்ரேன் பின்லாந்தை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம் என்று பிரெஞ்சு அதிகாரிகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகின. பின்னர் அவை மறுக்கப்பட்டன.

பனிப்போரின் போது, பின்லாந்து முறையான நடுநிலைத்தன்மையை ஏற்றுக்கொண்டது. இது ஒரு சுதந்திர, இறையாண்மை மற்றும் ஜனநாயக அரசாக இருந்தது. அது நேட்டோவிற்கு வெளியே அப்படியே இருந்தது. இப்போதும் அவ்வாறே உள்ளது.

இது யுக்ரேன் அரசை ஈர்க்குமா? இது ஒரு ராணுவ விளைவைத் தவிர்க்கும். கோட்பாட்டளவில், யுக்ரேன் ஒருபோதும் நேட்டோவில் சேரக்கூடாது என்ற புதினின் விருப்பத்தை இது நிறைவேற்றக்கூடும்.

Russia - Ukraine 1

கூட்டணி நாடுகள் அதன் “பொது வெளி” (Open door policy) கொள்கையில், சமரசம் செய்ய வேண்டியதில்லை: யுக்ரேன் அதன் இறையாண்மை தேர்வாக, நேட்டோவில் சேராமல் இருக்கலாம்.

ஆனால், யுக்ரேன் இதை ஆதரிக்குமா? பெரும்பாலும் அப்படி செய்யமுடியாது. ஏனென்றால், ரஷ்யா யுக்ரேன் மீது ஆதிக்கம் செலுத்த இந்த நடுநிலைத்தன்மை வழிவகுக்கும்.

நடுநிலைத்தன்மையை அமல்படுத்துவது கடினமாக இருக்கும். ரஷ்யா அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்படுமா? நடுநிலைத்தன்மை என்பது யுக்ரேன் அரசுக்கு பெரும் சமரசமாக இருக்கும். இதனால், அந்நாடு நடுநிலைத்தன்மைகாக அதன் யூரோ-அட்லாண்டிக் விருப்பங்களை கைவிட வேண்டிய இருக்கும்.

நடுநிலைத்தன்மை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களை இன்னும் தூரப்படுத்துகிறது.

தற்போதைய நிலைப்பாடு நிலையாக மாறலாம்

தற்போதைய பிரச்னை நீடிப்பது சாத்தியமாக இருந்தாலும், ஆனால், அது காலப்போக்கில் அதன் தீவிரம் குறையுமா?

ரஷ்யா தனது துருப்புகளை மெதுவாக மீண்டும் முகாம்களுக்கு அழைத்து, அவர்களின் பயிற்சிகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் பல ராணுவ உபகரணங்களை விட்டுச்செல்லலாம்.

ரஷ்ய அரசு டான்பாஸ் பகுதியில் கிளர்ச்சிப் படைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம். அனைத்து சந்தர்ப்பங்களிலும், ரஷ்யாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால் யுக்ரேனின் அரசியலும் பொருளாதாரமும் தொடர்ந்து சீர்குலைந்து போகும்.

அதற்கு பதிலாக, கிழக்கு ஐரோப்பாவில் தனது பலப்படுத்தப்பட்ட நேட்டோ இருப்பை மேற்கு நாடுகள் நிலைநாட்டும். அதன் அரசியல் தலைவர்களும் ராஜரீக அதிகாரிகளும் தொடர்ந்து ரஷ்ய அதிகாரிகளுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபாடுவார்கள். அங்கு பேச்சுவார்த்தைகள் தொடரும். ஆனால் சிறிய அளவிலான முன்னேற்றமே ஏற்படும்.

யுக்ரேன் போராடும். ஆனால், குறைந்த பட்சம் முழு வீச்சில் போர் நடக்காது.

மேலும், தலைப்புச் செய்திகளில் இருந்து இந்த பிரச்னை மறையும். பொது வெளியில் ஏற்படும் கவனத்தில் இருந்து மறைந்து, காலம் கடந்து நிலவும் பிரச்னைகளின் நீண்ட பட்டியலில் இதுவும் மீண்டும் சேரும்.

இந்த விருப்பத் தேர்வுகளில் எதுவும் எளிதானவையோ சாத்தியமானதோ அல்ல. அவை அனைத்தும் சமரசத்தை உள்ளடக்கியது.

யுக்ரேன் நாடே அதிகம் சமரசம் செய்ய வேண்டிய நாடாக இருக்கலாம் என்பது அந்நாட்டின் அரசுக்கு உள்ள அச்சம். இருப்பினும், பேரழிவை உண்டாக்கும் போரின் அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது அப்படியானால், அதைத் தவிர்க்க என்ன செய்ய முடியும் என்பதுதான் இதனை மதிப்பீடும் அளவுகோலாக இருக்கும்.

பலளிக்காமல் இருந்தாலும், அனைத்து தரப்புகளும் இன்னும் பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவதே இப்போதுள்ள ஒரே நம்பிக்கை. மேலும் மக்கள் எவ்வளவு காலம் பேசிக் கொண்டே இருப்பார்களோ, அவ்வளவு தூரம் ஒரு ராஜரீக தீர்விற்கான கதவுகள் திறந்தே இருக்கும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »