Press "Enter" to skip to content

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோ அவசரநிலை பிரகடனம்

பட மூலாதாரம், DAVE CHAN / GETTY

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் தீவிரமடைந்துள்ள போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்த நடவடிக்கைகள் “தற்காலிகமானது” எனவும், “நியாயமான” மற்றும் “சரியான நடவடிக்கை” எனவும் தெரிவித்துள்ள ட்ரூடோ, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூழலில் ராணுவம் களமிறக்கப்படாது என கூறியுள்ளார்.

இதன்மூலம், நீதிமன்ற உத்தரவுகள் இன்றி, போராட்டங்களில் தொடர்புடையோரின் வங்கிக் கணக்குகளை வங்கிகளே முடக்க முடியும்.

கனடாவின் தலைநகரத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்னும் உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடா-அமெரிக்காவை இணைக்கும் முக்கியமான வணிகப் பாதையான விண்ட்சரில் உள்ள தி அம்பாசிடர் பாலத்தில், ஒரு வாரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

போராட்டம் ஏன்?

கனடா எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் டிரக் ஓட்டுநர்களும் அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் டிரக் ஒட்டுநர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்ற கனடிய அரசின் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக தொடங்கியதே இப்போராட்டம். இந்த புதிய விதிமுறை ஏற்கெனவே உள்ள கொரோனா விதிமுறைகளுடன் மேலதிக சவாலாக இருக்கும் என்பது போராட்டக்காரர்களின் கருத்தாக உள்ளது.

“இது கனடா மக்கள் மற்றும் அவர்களின் வேலைகளை பாதுகாக்கத்தான்” என ட்ரூடோ திங்கள்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமானது எனவும், இது துல்லியமான நடவடிக்கை எனவும் செய்தியாளர்களிடம் ட்ரூடோ தெரிவித்தார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் முக்கிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, 2021ல் ஓராண்டுக்கும் மேல் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு கனடா பிரதமர், “அமைதியான போராட்டத்திற்கான உரிமைக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும்” என கூறி ஆதரவு தெரிவித்ததை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனடாவில் தீவிரமடைந்து வரும் போராட்டம், அதன் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளதால், ட்ரூடோ அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

துணை பிரதமர் கிரிஸ்டியா ப்ரீலேண்ட் திங்கள்கிழமை நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுக்கு தேவையின்றி, போராட்டங்களுடன் தொடர்புடையோரின் வங்கிக்கணக்குகளை வங்கிகளே முடக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோரின் வாகன காப்பீடும் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, கிரிப்டோகரன்சி மற்றும் நிதி திரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில், “தீவிரவாத செயல்களுக்கான நிதியுதவி” தடுப்பு விதிகளை விரிவுபடுத்துவதாகவும் ப்ரீலேண்ட் கூறினார்.

“இவை அனைத்தும் பணம் குறித்தது,” என அவர் தெரிவித்தார்.

டிரக் ஓட்டுநர்களுக்காக GiveSendGo எனும் நிதி திரட்டல் தளம் மூலம் 8.4 மில்லியன் டாலர்கள் (6.2 மில்லியன் பவுண்ட்) மதிப்பிலான 93,000 நன்கொடைகள் வரப்பெற்றதாக மின்ஊடுருவாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில் ப்ரீலேண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடாவில் 1988ல் நிறைவேற்றப்பட்ட அவசரநிலை சட்டத்தை அமல்படுத்த கடினமான சட்ட தடைகளை கடக்க வேண்டும். இச்சட்டம், “கனடா மக்களின் வாழ்க்கை, உடல்நலன் அல்லது பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கடும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான “அவசர மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில்” மட்டுமே பயன்படுத்த முடியும். சட்ட ரீதியான போராட்டங்கள் அவசரநிலையை அமல்படுத்த தகுதி பெறாது.

கனடாவின் நீதி அமைச்சர் டேவிட் லாமெட்டி திங்கள்கிழமை பேசுகையில், அவசரநிலையை பிரகடனப்படுத்துவதற்கான நிபந்தனைகள் இச்சூழலில் பூர்த்தியடைவதாக வாதிட்டார்.

அவசரநிலை பிரகடனம் – ஆதரவும் எதிர்ப்பும்

ஆனால், கனடாவின் சிவில் உரிமைகள் சங்கம் இதனை மறுத்துள்ளது. கனடா அரசின் இந்த நடவடிக்கை, “நாட்டின் ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளை அச்சுறுத்துவதாக” எச்சரித்துள்ளது.

ஒட்டாவா போராட்ட தலைவர் டமாரா லிச், ட்ரூடோவின் நடவடிக்கையை நிராகரித்துள்ளார். அவர் ஏபி நியூஸிடம் கூறுகையில், “எவ்வித எச்சரிக்கைகளும் எங்களை அச்சப்படுத்தாது. நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என தெரிவித்தார்.

கனடா மாகணமான ஒண்டாரியோ ஆட்சித்தலைவரும் கன்மேலாய்வுட்டிவ் கட்சியை சார்ந்தவருமான டக் போர்ட், கனடா அரசை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், கியூபெட், மனிட்டோபா, ஆல்பெர்டா மற்றும் சஸ்கட்சேவன் ஆகிய மாகாணங்களின் ஆட்சித்தலைவர்கள், தங்கள் பிராந்தியங்களில் அவசரநிலை அவசியமற்றது என தெரிவித்துள்ளனர்.

கனடா போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

ட்ரூடோவின் அறிவிப்புக்கு முன்னதாக, கியூபெட் ஆட்சித்தலைவர் பிரான்கோயிஸ் லெகால்ட், அவசரநிலையை பிரகடனப்படுத்துவது “எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும்” என தெரிவித்தார்.

ட்ரூடோ வெற்றியடைவாரா?

பிபிசி நியூஸ், டொரண்டோ, ஜெசிக்கா மர்பியின் பகுப்பாய்வு

இடையூறுகளை ஏற்படுத்திவரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில், வெள்ளை மாளிகை தரப்பிலிருந்தோ அல்லது விரக்தியடைந்துள்ள கனடா மக்களின் தரப்பிலிருந்தோ அதிகரிக்கும் அழுத்தம் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் பயன்படுத்தாத, தேசியளவிலான அவசர சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் அந்நாட்டின் அதிகாரம்மிக்க அவசரநிலை சட்டம் 1988-ஐ பிரகடனப்படுத்தியுள்ளார்.

ட்ரூடோவால் அறிவிக்கப்பட்ட அதிகாரங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. ஆனால், அதுகுறித்து நாடாளுமன்ற அவை மற்றும் செனெட் அவையில் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு இந்த உத்தரவுக்கு ஒப்புதல் பெற வேண்டும், இல்லையென்றால் அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்படும்.

கனடாவின் பெடரல் அரசியல் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும், விநியோகச் சங்கிலிகள், தேசத்தின் பொருளாதாரம் மற்றும் அமெரிக்காவுடனான கனடாவின் உறவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் முடிவுக்கு வருவதற்கான நேரம் இது என்று கூறியுள்ளனர்.

ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையிலான ட்ரூடோவின் நடவடிக்கையுடன் அவர்கள் ஒத்துப்போகவில்லை.

கன்மேலாய்வுட்டிவ் தலைவர் கேன்டிஸ் பெர்கென், அவசரநிலை பிரகடனம், தற்போதைய சூழ்நிலையை தீவிரப்படுத்தும் என, கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங்கின் ஆதரவு, நாடாளுமன்ற அவையில் இதனை நிறைவேற்ற போதுமான வாக்குகளை வழங்கலாம். எனினும், செனெட் அவையில் இதனை நிறைவேற்றுவது தடையாக இருக்கும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இன்னும் நடைபெற்று வருகின்றன. கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில், கடந்த 18 தினங்களாக 400 முதல் 500 வரையிலான டிரக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கவுட்ஸ், ஆல்பெர்ட்டா, எமெர்சன், மனிட்டோபா ஆகிய இடங்களிலும் எல்லையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

திங்கள்கிழமை 11 பேரை கைது செய்துள்ள காவல்துறை, அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் மற்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தது.

டொரன்டோ மற்றும் வின்னிபெக் உள்ளிட்ட நகரங்களிலும் வார இறுதியில் போராட்டங்கள் நடைபெற்றன.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »