Press "Enter" to skip to content

லஸ்ஸா காய்ச்சல்: பிரிட்டனில் பச்சிளம் குழந்தை பலி – இந்த நோய் பற்றிய முக்கியத் தகவல்கள்

  • மேட் ஃப்ரீசி & நிக்கி ஃபாக்ஸ்
  • பிபிசி ஈஸ்ட்

பட மூலாதாரம், Alamy

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால் இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.

இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய்த் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இந்த குழந்தையும் ஒன்று.

இதில் இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அட்டன்புரூக் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நோயாளிகளின் தொடர்பில் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் கிழக்கு இங்கிலாந்து பிரிவு இதனை ‘பெரிய வட்டார சம்பவம்’ என்று அறிவித்துள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையான ‘உக்சா’ (UKHSA) லஸ்ஸா காய்ச்சல் மரணம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், தொடர்புத் தேடல் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மூவருக்கும் ஏற்பட்ட தொற்று மேற்கு ஆப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தோடு தொடர்புடையது என்று உக்சா முதன்மை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை தனிமை நடவடிக்கை

அட்டன்புரூக் மருத்துவமனையை நடத்தும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனை என்.எச்.எஸ். உடைட் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய இது தொடர்பான மின்னஞ்சலை பிபிசி பார்த்தது.

“தொடர்பறியும் நடவடிக்கையில் அடையாளம் காணப்பட்ட நமது ஊழியர்கள் 14 நாள்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும்படி கோரப்படுகிறார்கள். நோயாளிகளோடு அவர்கள் 21 நாள்களுக்கு தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் கூறப்படுகிறது” என்று அந்த மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதிர்பார்த்தது போலவே, இது நமது ஊழியர்களின் அளவை பாதிக்கிறது. இதனால், தீவிர நோய்ப்பிரிவில் குறிப்பிடத்தகுந்த அளவினை தற்காலிகமாக மூடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்பது அரிதானது. மனிதர்களுக்கு இடையில் இது அவ்வளவு எளிதாகப் பரவுவதில்லை என்று உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம். சுகாதார ஊழியர்களுக்கும், பிற நோயாளிகளுக்கும் இதனால் இடர்பாடு ஏற்படும் சாத்தியம் மிக குறைவு,” என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் புதிதாக நோயாளிகளை சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

உணவு, வீட்டு உபயோகப் பொருள்களில் தன் சிறுநீர், மலத்தை கலப்பதன் மூலம் மனிதர்களுக்கு லஸ்ஸா வைரசை பரப்பும் சாத்தியமுள்ள ஓர் எலியுடன், சியரா லியோனில் ஒரு சுகாதாரப் பணியாளர்.

பட மூலாதாரம், Getty Images

பத்தாண்டுகளுக்கு மேலான காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இந்த லஸ்ஸா காய்ச்சல் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது.

லஸ்ஸா காய்ச்சல் ஏற்பட்ட பெரும்பாலோர் குணமடைந்துவிடுவார்கள். சிலருக்கு நோய் தீவிரமடையலாம்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறினார்.

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 3 தொற்றுகளுக்கு முன்பாக, பிரிட்டனில், 1980 முதல் 8 பேருக்கு மட்டுமே இந்த காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக இருவருக்கு 2009ல் இந்த நோய் கண்டறியப்பட்டது.

இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றிய எலிகளின் சிறுநீர், மலம் கலந்த உணவு அல்லது வீட்டு உபயோகப் பொருள்களுடன் ஏற்படும் தொடர்பு வாயிலாகவே இந்த தொற்று பொதுவில் பரவுவதாக இந்த நோய்க்கான வழிகாட்டுக் குறிப்பு கூறுகிறது.

Grey line

லஸ்ஸா காய்ச்சல் என்பது என்ன?

  • எபோலா போல லஸ்ஸா காய்ச்சலும், நோயுற்ற நபர்களின் ரத்தம், எச்சில், சிறுநீர், விந்து போன்ற உடல் திரவங்கள் வழியாகவே பரவும்.
  • நோய்த் தொற்றிய எலிகளின் சிறுநீர், மலம் ஆகியவற்றோடு ஏற்படும் தொடர்பு மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவும்.
  • இந்த நோய்த் தொற்றினால், காய்ச்சலும், ஃப்ளூ போன்ற அறிகுறிகளும் ஏற்படும். அத்துடன் மூக்கு, வாய் உள்ளிட்ட உடல் பாகங்களில் ரத்தம் கசியவும் இந்த நோய் காரணமாக இருக்கும்.
  • இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட பெரும்பாலோர் மீண்டுவிடுவார்கள். ஆனால், சிலருக்கு மரணமும் ஏற்படலாம்.
  • எபோலா வைரசின் உறவுக்கார நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்று கூறப்படும் லஸ்ஸா பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக உள்ள ஒன்று.
Grey line
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »