Press "Enter" to skip to content

”உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை” – இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும்

பட மூலாதாரம், ALI SABRY FB

”உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?” என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ முகாம்களில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூற வேண்டியது உங்களின் கடமையல்லா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பாதுகாப்பு படைகளிலேயே நான்காயிரத்திற்கு அதிகமான பேர் காணாமல் போயுள்ளனர் என்றால், அதனை விடவும் அதிகமான நபர்கள் விடுதலைப் புலிகள் பக்கத்திலும் காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மை என அலி சப்ரி கூறுகின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட பலர் உள்ளமையினால், அவர்கள் யுத்த காலத்தில் உயிரிழந்திருக்கக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை என்பதை, உறவினர்களின் முகங்களை பார்த்து எவ்வாறு கூறுவது என குறிப்பிட்ட அவர், ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த விடயங்கள் வரும் வரை மௌனமாகவே இருக்க வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றார்.

அத்துடன், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 4000திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதைவிடவும் அதிகமான அளவு விடுதலை புலி அமைப்பிலிருந்த பலர் காணாமல் போயிருக்கலாம்.

விடுதலைப் புலிகளுடன் அதிகளவிலான பொதுமக்கள் பயணித்துள்ளமையினால், அவ்வாறானவர்களே அதிகளவில் காணாமல் போயுள்ளனர்;.

காணாமல் போனதாக கூறப்படும் முறைப்பாடுகளில் 99.9 வீத முறைப்பாடுகள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரே பதிவாகியுள்ளன. 2009ஆம் ஆண்டின் பின்னர் மிகக் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்து தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஆயுதத்தின் பக்கம் தள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இராணுவத்தை போர் குற்றவாளிகள் என கூறுவதை சிங்கள தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எம்மை பொறுத்தவரை இந்த காயத்தை சுகப்படுத்த வேண்டும். ஏற்பட்ட காயத்தை மேலும் மேலும் பெரிதாக்க வேண்டாம் என நினைக்கின்றோம்” என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி.

யுத்த காலப் பகுதியில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறிய அவர், அவர்களின் உயிரை மீண்டும் தாருங்கள் என கேட்டால், எவ்வாறு கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிடுகின்றார்.

”காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களா, அல்லது பொதுமக்களா, எங்கே காணாமல் போனார்கள், இப்போது வேறு நாடுகளில் உள்ளார்களா அல்லது நீங்கள் கூறுவதை போன்று சரணடைந்த நபர்களை இராணுவம் வேறு எங்கேனும் கடத்தி சென்றதா என்ற சகல விடயங்களையும் ஆராய்வோம். இதில் தவறுகள் இடம்பெற்றுள்ளது என்றால், அது அரச தரப்பில் இருந்து இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு எதிராகவும் உள்ளக பொறிமுறையில் விசாரணைகளை நடத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்” என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறுகின்றார்.

ஜெனீவா மனித உரிமை அமர்வு?

நீதி அமைச்சர் அலி சப்ரி

பட மூலாதாரம், ALI SABRY FB

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் தேதி ஜெனீவாவிற்கு ஆரம்பமாகவுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாகின்ற நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து, மனித உரிமை பேரவையில் பல்வேறு அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் முன்னேற்றத்தை இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் அதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்து வருவதாக அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக சுமார் 43 வருடங்களின் பின்னர், இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் கால எல்லையை குறைத்தல் உள்ளிட்ட மேலும் சில விடயங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

‘குற்றம் இழைத்தவர்கள் சர்வதேச சட்டங்களின் படி தண்டிக்கப்பட வேண்டும்”

யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போன மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றால், அவர்களின் உயிர் எவ்வாறு பறிக்கப்பட்டது என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

எஸ்.கஜேந்திரன்

பட மூலாதாரம், SELVARAJAH KAJENDREN

நீதி அமைச்சர் அலி சப்ரியின் கருத்து தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

”இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், இறுதிக் கட்ட போரின் போது, இராணுவத்திடம் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவ துணைக்குழுக்களினால் கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்று சொன்னால், அவர்களின் உயிர் எவ்வாறு பறிக்கப்பட்டது. அவ்வாறு உயிர்கள் பறிக்கப்பட்டமைக்கான காரணமானவர்கள் யார்? என்பன கண்டறியப்பட்டு, அவர்கள் சர்வதேச சட்டங்களின் படி தண்டிக்கப்பட வேண்டும்” என எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோரின் உறவுகளின் பதில்

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் காணாமல் போனோரையே தாம் தேடி வருவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவிக்கின்றது.

அந்த சங்கத்தின் செயலாளர் லீலா தேவி ஆனந்தன் நடராஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பக்கத்தில் உயிரிழந்த அனைவருக்கும் மாவீரர்கள் என்ற கௌரவத்தை வழங்கி, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு அது குறித்து அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

”யுத்தம் நடந்த காலக் கட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் மூலம் இராணுவத்தினரின் உடல்களை கொடுக்கும் போது, அவர்கள் அதனை பாரமெடுக்க மறுத்து, சந்திரன் பூங்காவில் 800 சடலங்கள் காணப்பட்டன. இதை எங்கடை ஆட்கள் அவர்களுக்குரிய மரியாதையோடு சடலங்களை அழித்து அவர்களை அடக்கம் செய்தவர். அதேபோன்று, வவுனியாவிலும் அப்படியாக சம்பவங்கள் நடந்தது. அது தான் அவர் சொன்ன அந்த காணாமல் போன ஆட்கள். விடுதலைப் புலிகளில் உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு, அவர்கள் மாவீரர் பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டார்கள். இராணுவத்தினர் காணாமல் போகயில்ல. அவர்கள் இறந்து விட்டார்கள். யுத்தத்தில இறந்த ஆட்களை நாங்கள் கேட்கயில்ல. யுத்தம் முடிவடைந்த பிற்பாடு, இவர்கள் தந்த வாக்குறுதியை நம்பி கொண்டு போய் கையளித்த ஆட்களை தான் நாங்கள் கேட்கின்றோம்” என அவர் குறிப்பிடுகின்றார்;.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

எஸ்.ஸ்ரீதரன்

பட மூலாதாரம், SHIRIDARAN

‘தீ கோழி, யாரையும் கண்டால், தனது தலையை மட்டும் மண்ணுக்குள் ஒழிக்குமாம். உடம்பை வெளியில் காட்டி நிற்குமாம்” இது போன்றே, நீதி அமைச்சரின் கருத்து காணப்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

தீ கோழியை போன்று தலையை மட்டும் மறைக்க நீதி அமைச்சர் முயற்சிக்கின்றார் என அவர் கூறுகின்றார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டமைக்கான நேரடி சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக கூறிய அவர், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதனை வெளிகொணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்றால், சரணடைந்தவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதை கூற வேண்டும் என அவர் கூறுகின்றார்.

”அரசாங்கம் வெளிப்படையாக சொல்ல வேண்டும், எங்கள்கிட்ட இத்தனை பேர் சரணடைந்தவர்கள். அவ்வளவு பேரையும் நாங்கள் கொலை செய்து போட்டோம். கொலை செய்தால் அதற்கு என்ன நியாயம்?. அப்படியென்றால், இது ஒரு பெரிய இனப்படுகொலை தானே?. உங்களிடம் சரணடைந்தவர்களை நீங்கள் கொலை செய்திருந்தால், இராணுவம் கொண்டு போய் கொலை செய்திருந்தால், அதுவொரு பாரிய இனப்படுகொலை. அந்த இனப்படுகொலைக்கான நியாயம் என்ன?. அதை உள்நாட்டில் தீர்க்க இயலுமா? சாத்தியமா?” என எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்புகின்றார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார். ”உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »