Press "Enter" to skip to content

காலநிலை மாற்றம்: கொரோனா ஊரடங்கால் சீனாவில் உண்டான மழை, வெள்ளம் – அறிவியல் ஆய்வு

  • மாட் மெக்ராத்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர்

பட மூலாதாரம், AFP

சீனாவில் 2020ஆம் ஆண்டு அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்றும் இது கொரோனா ஊரடங்கால், பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் தூசுப் படலத்தை உண்டாக்கும் நுண் துகள்கள் வெளியேறுவது குறைந்ததன் வெளிப்பாடு என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வால், கோடை காலத்தில் ஏற்பட்ட மழையால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தது மட்டுமின்றி , லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டும் இருக்கின்றனர்.

எனினும் நீண்ட காலம் இவ்வாறு பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் நுண் துகள்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதால், மீண்டும் இதுபோன்ற மழைப்பொழிவு உண்டாவது அரிது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோடை காலத்தில் ஏற்பட்ட இந்த அதீத மழைக்கு, வாயு வெளியேற்றம் குறைவாக இருந்ததே காரணம் என்று கூறிவிட முடியாது. ஆனால் இந்த மழை ஏற்பட்டதற்கான மூன்றில் ஒரு பங்கு காரணம், வாயு வெளியேற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் உள்ள யாங்சீ நதியில், 1961க்குப் பிறகு 2020ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்தான் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 41 ஆண்டுகளில் பெய்த மழைப்பொழிவின் சராசரியுடன் ஒப்பிடுகையில் 79 சதவிதம் அதிகமான மழை பெய்துள்ளது.

சீனா வெள்ளப் பெருக்கு.

பட மூலாதாரம், Getty Images

பல அறிவியல் ஆய்வுகள் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளுக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தன. அதில் சில ஆய்வுகள், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட தீவிர வானிலைதான் அதிக மழைக்கு காரணம் என்று குறிப்பிடுகின்றன.

தற்போது சர்வதேச குழு ஒன்று புதிய கோட்பாட்டை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா நோய் தொற்றின் அமலாக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் நுண் துகள்கள் வெளியான அளவு குறைந்ததாலேயே கடுமையான மழைப்பொழி ஏற்பட்டுள்ளது என்ற வாதத்தை அவர்கள் முன் வைக்கின்றனர்.

மேலும் அவர்கள், கிழக்கு மற்றும் மத்திய சீனாவில் கடந்த நான்கு தசாப்தங்களாக கோடை மழை கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதற்கு நுண் துகள்களின் வெளியேற்றத்தின் அளவு அதிகரிப்புதான் காரணம் எனவும் தங்கள் ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்பாலும் இந்த துகள்கள், நிலக்கரிகள் எரியூட்டப்படுவதால் வெளியேற்றப்படுறது என்றும், இது பெரிய அளவிலான புயல்களின் நிகழ்வைக் குறைக்கிறது; இது குறைந்த மழைக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட துகள்கள் வெளியேற்றம் குறைவால் ஏற்பட்ட மாற்றம் மற்றும் 2020இல் குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போன்றவற்றின் எதிர் விளைவாக மழைப்பொழிவு அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், கொரோனா ஊரடங்கை அதிக வெள்ளப் பெருக்குடன் தொடர்புபடுத்துவது சிக்கலானது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

“நுண் துகள்களின் வெளீயீடு குறைந்ததால் தற்போது நிலப்பரப்பில் வெப்பம் அதிகமாகிறது, ஆனால் மறுபுறம் பசுமை இல்ல வாயுக்களின் குறைவு காரணமாக கடல் பரப்பில் குளிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது கோடை காலத்தில் நிலம் மற்றும் கடல் பரப்பில் வெப்பநிலை வேறுபாட்டை தீவிரப்படுத்தியது” என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய, சீனாவில் உள்ள நாஞ்சிங் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாங் யாங் விளக்கினார்.

“இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தென் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் மீது கடல் மட்ட அழுத்தம் அதிகரித்து உள்ளது, மற்றும் கிழக்கு சீனாவின் ‌பக்கம் ஈரப்பதம் மிக்க காற்றை தீவிரப்படுத்தி, பின்னர் கடுமையான மழைப்பொழிவுக்கு வழிவகுத்திருக்கிறது”

உலகில் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் கரியமில வாயு அதிகமாக வெளியேற்றும் புதைப்படிம எரிபொருட்களின் இருந்து மாறும் நோக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இப்படி செயல்படும் போது,இந்த ஆய்வு காட்டுவதுபோல இயற்கை சீற்றங்கள் நிகழுமா என்ற கேள்வி எழுகிறது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் பேராசிரியர் யாங் , “2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா தொற்று உண்டானபோது கரியமில வாயு வெளியேற்றம் மிகவும் குறைந்த நிலைக்கு சென்றது. இந்த திடீர் குறைவுதான், காலநிலை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதிகளவில் மழை பெய்ய வைத்தது. ஆனால் கொள்கை அடிப்படையில், படிப்படியாக வாயு வெளியேற்றம் குறைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இம்மாதிரியான திடீர் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தாது” என்றார்.

இந்தப் புது ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »