Press "Enter" to skip to content

கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதலின் வரலாறு

  • டோனி பெரோடட்
  • பிபிசி ட்ராவல்

பட மூலாதாரம், Getty Images

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 30வது கட்டுரை இது.)

நியூயார்க் நகரத்தின் 82வது தெருவில் உள்ள வீடு எண் 155, மன்ஹாட்டனின் அப்பர் வெஸ்டில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளைப் போலவே உள்ளது. பழுப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் விக்டோரியன் பாணி சிற்பங்கள் உள்ளன. அவை இங்கு பொதுவாக காணப்படுபவைதான்.

ஆயினும்கூட, இந்தக்கட்டடம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 1948 இல், 22 வயதான இளம் சட்ட பட்டதாரி ஃபிடல் காஸ்ட்ரோ இங்கு தேனிலவு கொண்டாடினார்.

காஸ்ட்ரோ ஹவானாவில் மாணவர் தலைவராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தனது நாட்டில் விரைவில் ஒரு புரட்சியை நடத்துவார் என்றும் 20ஆம் நூற்றாண்டின் பிரபலமான ஒரு நபராகி, கியூபாவை அமெரிக்காவுடன் பனிப்போருக்கு இட்டுச் செல்வார் என்றும் 1948இல் யாரும் கற்பனைகூடச்செய்யவில்லை.

காஸ்ட்ரோ 1948இல் முதல் முறையாக அமெரிக்காவிற்கு சென்றார். அவருக்கு நியூயார்க் மீது உடனே காதல் பிறந்தது. சுரங்கப்பாதைகள், வானளாவிய கட்டடங்கள் மற்றும் மாட்டிறைச்சியின் அளவு ஆகியவற்றைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.

அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்புச் சூழல் இருந்தபோதிலும், நியூயார்க்கில் உள்ள எந்த புத்தகக் கடையிலிருந்தும் கார்ல் மார்க்ஸின் “தஸ் கேபிடல்”(Dus Kapital) புத்தகத்தை வாங்க முடியும்.

காஸ்ட்ரோ மற்றும் அவரது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த அவரது முதல் மனைவி மிர்டா டயஸ்-பாலார்ட் இந்த அழகான நியூயார்க் வீட்டில் மூன்று மாதங்கள் வாழ்ந்தனர்.

இந்த கட்டடம் இன்றளவும் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திற்கு முன்னால் உள்ளது. ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக வாடகையைத் தவிர இங்கு எதுவும் மாறவில்லை.

நியூயார்கிற்கு காஸ்ட்ரோ மேற்கொண்ட பல பயணங்களிலிருந்து விட்டுப்போன இணைப்புகளை நான் தேட நினைத்தேன். ஆகவே முதல் படியாக இந்த காதல் இல்லத்திற்கு சென்றேன். 1960இல், அமெரிக்கா அவரை பகைவனாக்கத் தொடங்கியது.

அவரது கம்யூனிச சீர்திருத்தங்கள் விரைவில் அவரை சோவியத் யூனியன் பக்கம் இட்டுச் சென்றன. இந்தக் கூட்டணி 1962 அக்டோபரில் கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு வழிவகுத்தது. உலகம் அணுசக்தி பேரழிவுக்கு மிக அருகில் சென்றது அப்போதுதான்.

புரட்சி அலுவலகம்

Fidel Castro

பட மூலாதாரம், RACHEL MISHAEL

நியூயார்க்கிற்கு காஸ்ட்ரோவின் வருகை பற்றிய விவரங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஆம்ஸ்டர்டாம் அவென்யூவில் அவரது புரட்சி அலுவலகத்தை நான் கண்டேன்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1955இல், ஃபிடல் காஸ்ட்ரோ இரண்டாவது முறையாக மன்ஹாட்டனுக்கு வந்தார். கியூப சர்வாதிகாரி ஃபுல்கென்சியோ பாடிஸ்டாவுக்கு எதிரான தோல்வியடைந்த கிளர்ச்சிக்குப் பிறகு, கியூபாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களிடையே அவர் பிரபலமானார்.

அவருக்கு அப்போது வயது 29. டயஸ்-பாலார்ட்டிடமிருந்து அவர் விவாகரத்து பெற்றார்.(ஆயுதமேந்திய கிளர்ச்சி மற்றும் சாண்டியாகோவில் ஒரு படைத் தாக்குதலுக்குப் பிறகு காஸ்ட்ரோ சிறையில் இருந்தபோது அங்கிருந்து மற்றொரு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதங்களை டயஸ் பார்த்துவிட்டார்).

நியூயார்க்கில் வசிக்கும் கியூபா சமுதாய மக்களிடம் இருந்து காஸ்ட்ரோ புரட்சிக்காக நிதி சேகரிக்க வந்திருந்தார். நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்துடன், அவர் தனது M-26-7 புரட்சி அமைப்புக்காக மன்ஹாட்டனில் ஓர் அலுவலகத்தைத் திறந்தார்.

மன்ஹாட்டனின் மேல் மேற்குப் பகுதியானது இன்று போல் பணக்கார தாராளவாதிகளின் தளமாக அல்லாமல் முற்போக்காளர்களின் கோட்டையாக அப்போது கருதப்பட்டது..

அமைப்பின் உறுப்பினர்கள் மேல் ஜன்னலில் கருப்பு மற்றும் சிவப்பு புரட்சிக் கொடியைத் தொங்கவிட்டு, அமெரிக்க ஆதரவாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

காஸ்ட்ரோ, மருத்துவர் சே குவேரா உட்பட அவரது ஆயுதமேந்திய கொரில்லாக்களும்,1956ஆம் ஆண்டு க்யூபாவில் அதிரடியாக நுழைந்ததை தொடர்ந்து அவரது அனுதாபிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இந்த அலுவலகத்தின் முகவரியை பழைய துண்டு பிரசுரத்தில் நான் கண்டேன். ஆம்ஸ்டர்டாம் அவென்யூவின் 74வது மற்றும் 75வது தெருவிற்கு இடையே உள்ள 305ம் எண் கட்டடத்தில் இப்போது சீன மசாஜ் பார்லர் உள்ளது. மாடிப்படிகளில் ஏறி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த உதவியாளர் என்னை நோக்கி புன்னகைத்தார். ஒரு காலத்தில் காஸ்ட்ரோவின் புரட்சி அலுவலகம் இங்கு இருந்தது தெரியுமா என்று நான் அவரிடம் கேட்டேன்.

அமெரிக்க சட்டத்தின் கீழ், கியூபா புரட்சியாளர்களுக்கு நன்கொடை பெற்றுக்கொள்ள உரிமை இருந்தது. ஆனால் அவர்களால் வீரர்களை பணியமர்த்த முடியாது.

இருந்த போதிலும், கோடை விடுமுறையின் போது பல கொலம்பிய மாணவர்கள் கொரில்லாக்களாக சேவை செய்ய தயாராக இருந்தனர்.

Fidel Castro

பட மூலாதாரம், Getty Images

சீன மசாஜ் பார்லர்

என் கேள்விக்கு பதிலாக அட்ஒப்பந்தம் சிரித்துவிட்டு, எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று மெதுவாகச் சொன்னார். ஒரு சீன முதியவர் வெளியே வந்தார்.

அமைதியாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். “நீங்கள் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கிறீர்கள். உங்களுக்கு மசாஜ் வேண்டுமா என்ன?”என்று அவர் வினவினார்.

புகழ்பெற்ற வரலாற்று அல்லது இலக்கிய நபர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பயணத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. நான் ஹவாயில்’ ஜார்ஜியா ஓ’கீஃப்’, சுவிட்சர்லாந்தில் பைரன் பிரபு, மெக்சிகோ நகரில் லியோன் ட்ரொட்ஸ்கியின் கால்தடங்களைத் தேடியுள்ளேன். இத்தகைய தேடல்கள் என்னை புகழ்பெற்ற சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச்சென்றால் வரலாற்றுக் கதை அதன் அழகைக் கூட்டும். பல சமயங்களில் இதுவரை கேள்விப்பட்டிராத இடங்களுக்கும் இவை என்னை அழைத்துச் செல்லும்.

“கியூபன் லிபர்: சே, பிடல் மற்றும் உலக வரலாற்றை மாற்றியமைத்த புரட்சி” என்ற புத்தகத்திற்காக நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது நியூயார்க்கில் காஸ்ட்ரோவின் கால்தடங்களைக் கண்டுபிடிக்கும் எண்ணம் தோன்றியது.

இரண்டு வருடங்கள் நான் ஹவானாவுக்குப் பயணம் செய்து, தொண்ணூறு வயதுடைய கொரில்லாக்களைப் பேட்டி கண்டு வரலாற்றுச் சான்றுகளைப் பார்த்தேன்.

20ஆம் நூற்றாண்டின் மிகவும் அசாதாரணமான மற்றும் கவர்ச்சியான நபர்களில் ஒருவரான ஃபிடல் காஸ்ட்ரோவைப் புரிந்து கொள்ள வந்தபோது, மிக முக்கியமான இடங்கள் நியூயார்க்கில் உள்ள எனது வீட்டிற்கு அருகே நடந்து செல்லும் தூரத்தில் இருப்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன்.

கியூபாவைப் பற்றி எழுத வேண்டும் என்ற வெறியில் தொலைந்து போய், என் வீட்டிற்கு அருகில் உள்ள 10 கிலோமிட்டர் சுற்றுப்பகுதியில் மட்டுமே நான் என் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியிருந்தேன். ஆனால் இப்போது மீண்டும் எனது நகரத்தை கண்டறிய எனக்கு போதுமான காரணம் இருந்தது.

ஒரு சீன மசாஜ் பார்லருக்கு வெளியே நின்றுகொண்டு பனிப்போர் மூள்வதற்கு முன்பான ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி நினைத்துப்பார்த்தேன்.

Fidel Castro

பட மூலாதாரம், Getty Images

மெல்லிய மீசையுடன், இளமையான, உயரமான, விளையாட்டு வீரர் போன்ற உடலமைப்பு கொண்ட காஸ்ட்ரோ என் கண்முன்னே வந்தார்.

நியூயார்க்கின் கதாநாயகன்

அவர் ஆற்றல் நிறைந்தவர் மற்றும் இடைவிடாமல் பேசி மற்றவர்களை திகைக்க வைத்தார். 1948 மற்றும் 1955இல் அவரது வருகைகள் நகரத்தின் மீதான அவரது அன்பின் தொடக்கமாக இருந்தன.

கியூபாவில், 1959ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கொரில்லாக்களின் ஆச்சரியகரமான வெற்றி காஸ்ட்ரோவின் வாழ்க்கையையே மாற்றியது. பாடிஸ்டாவும் அவரது கூட்டாளிகளும் இரவில் திருடர்களைப் போல ஹவானாவிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்,

ஒரு வாரம் கழித்து காஸ்ட்ரோ வெற்றியாளராக ஹவானாவுக்கு வந்தார், அங்கு அவரை உற்சாகமான கூட்டத்தினர் அன்புடன் வரவேற்றனர். கூட்டம் ‘பாரிஸ் விடுதலையை’ நினைவூட்டியது. நாட்டிற்கு ஜனநாயக எதிர்காலம் வந்தவுடன் பதவி விலகுவதாக காஸ்ட்ரோ உறுதியளித்தார்.

அவர் ஒரு சர்வதேச பிரபலமாக ஆனார். அவரும் அவரது கிளர்ச்சியாளர்களும் – “தாடி வைத்தவர்கள்” என்று குறிப்பிடப்பட்டார்கள். அமெரிக்கர்களால் ‘இளமையான,கவர்ச்சியான விடுதலையாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு காஸ்ட்ரோ நியூயார்க்கிற்குச் சென்றார். 1959 ஏப்ரலில் தான் மேற்கொண்ட 5 நாட்கள் பயணத்தின்போது “எல் கமாண்டன்ட்” காஸ்ட்ரோ வெற்றி வீரராக வரவேற்கப்பட்டார்.

காஸ்ட்ரோ இப்போது எல்விஸைப் போலவே பிரபலமாகிவிட்டார். அவர் பென் ஸ்டேஷனில் இறங்கியது முதல், நியூயார்க் மக்கள் அவரைச் சூழ்ந்தனர். செய்தித்தாள்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுடன் ஒப்பிட்டன. பெண்கள் அவரைப்பார்த்து மயங்கினார்கள்.

அவரது காக்கி உடை, சிப்பாய் தொப்பி மற்றும் சுருட்டு ஆகியவை அவரது அடையாளங்களாக இருந்தன. 32 வயதான கதாநாயகனை எட்டாவது அவென்யூ வழியாக 100 அடி தொலைவில் உள்ள அவரது ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல நியூயார்க் காவல்துறைக்கு 20 நிமிடங்கள் எடுத்தது.

அவர் காவல்துறையின் தடைகளை தாண்டி மீண்டும் மீண்டும் கூட்டத்தினரிடம் சென்று கைகுலுக்கி, “நான் என் மக்களை வாழ்த்த வேண்டும்” என்று கூறுவார்.

காஸ்ட்ரோ வந்திறங்கிய நியூயார்க்கின் பழைய பென் நிலையம் 1960களில் இடிக்கப்பட்டது, ஆனால் அவர் தங்கியிருந்த ஹோட்டல் பென்சில்வேனியா இன்றும் உள்ளது.

எழுபது ஆண்டுகளுக்கு முன் காஸ்ட்ரோ ஒரு சுற்றுலா பயணியாக எம்பயர் ஸ்டேட் பில்டிங்கிற்கு சென்றதால் நானும் அங்கு சென்றேன். கூட்டத்தை தவிர்க்க இரவு 11 மணிக்கு அங்கு சென்றேன்.

சென்ட்ரல் பார்க்கில் உள்ள திறந்த ஆம்பிதியேட்டருக்கும் சென்றேன். அங்கு காஸ்ட்ரோ சுமார் 16,000 பேரிடையே உரையாற்றியுள்ளார்.

நியூயார்க்கின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் காஸ்ட்ரோவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. அவர் புத்தகப் பிரியர். ஆனால் காட்சிக் கலைகளில் ஆர்வம் காட்டவில்லை.

நவீன கலை அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் ஆலோசனையை நிராகரித்து, அவர் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலைக்குச் சென்றார். அங்கு அவர் புலிக்கூண்டிற்குள் கையை விட்டு செய்தியாளர்களை மகிழ்வித்தார்.

அங்கு அவர் ஒரு ஹாட் டாக் சாப்பிட்டார். “நியூயார்க்கில் உள்ள மிகச்சிறந்த விஷயம் இந்த மிருகக்காட்சிசாலை,” என்று அவர் கூறினார்.

நானும் அங்கு சென்றேன். புலிகள் இப்போது பரந்த நிலப்பரப்பில் வாழ்கின்றன. அதனால் காஸ்ட்ரோவைப் போல என்னால் அவற்றை அடைய முடியவில்லை. ஆனால் அங்கு கிடைக்கும் ஹாட் டாக் இப்போதும் சுவையாகவே இருக்கிறது.

நியூயார்க் மீதான காஸ்ட்ரோவின் காதல் வெகுகாலம் நீடிக்கவில்லை . வெள்ளையர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் காஸ்ட்ரோவை விரும்பவில்லை.

நியூயார்க் பகைவன்

1960 செப்டம்பரில் காஸ்ட்ரோ ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்த நேரத்தில், அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமாக இருந்தன.

இதற்கு காஸ்ட்ரோவின் பொருளாதாரக் கொள்கைகளே முக்கியக் காரணம். அவர் அடிப்படைவாதியாக ஆனார். அமெரிக்கா பழிவாங்கத்துடித்தது.

அடுத்த மாதமே அமெரிக்க அதிபர் டுவைட் ஐசனோவர் கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். அவர் காஸ்ட்ரோவை படுகொலை செய்யவும் அவரது அரசை கவிழ்க்கவும் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-க்கு அதிகாரம் அளித்தார். அதைத் தொடர்ந்து அந்த அமைப்பு மேற்கொண்ட நூற்றுக்கணக்கான படுகொலை முயற்சிகள் தோல்வியுற்றன.

காஸ்ட்ரோ ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்தவுடன், நியூயார்க் பத்திரிகைகள் அவரை எல் பியர்டோ(தாடி வைத்தவர்) என்று கேலி செய்தன. ஒரு வருடத்திற்கு முன்பு மன்ஹாட்டனில் ரசிகர்களால் சூழப்பட்ட அவர் இந்த முறை எதிர்ப்பாளர்களின் கேலிகிண்டலுக்கும் ஏசலுக்கும் உள்ளானார்.

முர்ரே ஹில்லில் உள்ள ஷெல்பர்ன் ஹோட்டலில் ஊழியர்களுடன் சண்டையிட்ட பிறகு, காஸ்ட்ரோ சென்ட்ரல் பார்க்கில் முகாமிடப்போவதாக அச்சுறுத்தினார். பின்னர் கறுப்பின அமெரிக்கர்களின் தலைநகராக கருதப்படும் ஹார்லெமுக்கு தனது முழு குழுவினருடனும் சென்றார்.

இந்தப்பகுதியில் தங்கிய முதல் வெளிநாட்டுத் தலைவர் இவரே. ஆட்சிக்கு வந்தவுடன் கியூபாவில் இனப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வந்த காஸ்ட்ரோவை, பல ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மனதார வரவேற்றார்கள்.

ஷெல்பர்ன் ஹோட்டல் இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு அருகில் உள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பழைய வெளிப்புறம் லெக்சிங்டன் அவென்யூவில் உள்ளது. அங்கு நான் சென்றேன். மாலை 5 மணியளவில், வரவேற்பாளர் எனக்கு கதவைத் திறந்து சொன்னார் – “நேரத்தில் வந்துள்ளீர்கள்”.அது ஏன் என்று எனக்குப்புரியவில்லை.அப்போது ஒரு குமாஸ்தா எனக்கு இலவச ‘ஹாப்பி ஹவர் ‘ஒயின் கொடுத்தபோது அவர் சொன்னது எனக்குப்புரிந்தது.

நான் ஹோட்டலின் விருந்தாளி இல்லை என்பதை அவர் பொருட்படுத்தவே இல்லை. இந்த ஹோட்டலில் காஸ்ட்ரோ சண்டையிட்டது உங்களுக்குத்தெரியுமா என்று ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கு குடிபெயர்ந்துள்ள வரவேற்பாளர் பார வண்டியிடம் கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே, “தெரியும். கியூபர்கள் உயிருள்ள கோழிகளை அறைகளில் வைத்திருந்தார்கள்.”என்றார்.

ஒரு காஸ்ட்ரோ, பல கதைகள்

தான் 15 ஆண்டுகளாக இந்த ஓட்டலில் பணிபுரிந்து வருதாகவும், 1960ல் நடந்த கதைகளை அப்போது பணியில் இருந்த பழைய வரவேற்பாளர் மூலம் சொல்லி கேட்டுள்ளதாகவும் பார வண்டி கூறினார்.

“காஸ்ட்ரோ அவற்றை (கோழிகளை) அறையில் சமைத்து, ஜன்னலுக்கு வெளியே எலும்புகளை வீசினார். அவை மக்களின் தலைகளில் விழுந்தன. அது மிகவும் அபத்தமாக இருந்தது.”

சாத்தியமான சேதங்களை ஈடுகட்ட, ஹோட்டலின் மேலாளர் 20,000 டாலர்களை (இன்றைய மதிப்பு சுமார் 165,000 டாலர்கள்) வைப்புத் தொகையாகக் கோரினார்.

காஸ்ட்ரோ தனது 60 பேர் கொண்ட குழுவினருடன் இங்கிருந்து வெளியேறி ஹார்லெமில் 125வது தெருவில் அப்பல்லோ தியேட்டருக்கு அருகில் உள்ள ஹோட்டல் தெரசாவில் தங்கினார்.

Fidel Castro

பட மூலாதாரம், Getty Images

இது அமெரிக்க நிர்வாகத்திற்கு மூக்குடைப்பாக இருந்தது. சிவில் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான காஸ்ட்ரோவின் ஆதரவை இது வெளிப்படுத்தியது. “ஹார்லெமின் ஏழை எளிய மக்கள்” மத்தியில் தான் வசதியாக உணர்வதாக காஸ்ட்ரோ கூறினார்.

ஐசனோவரின் எரிச்சல்

எல் கமாண்டன்ட் காஸ்ட்ரோ, மால்கம் எக்ஸ்-ஐ (அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்) சந்தித்து மக்களை கவர்ந்தார். அப்போது ஹோட்டலுக்கு வெளியே தெருக்களில் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த 2,000 பேர் திரண்டிருந்தனர்.

காஸ்ட்ரோவுக்காக திரண்டிருந்த கூட்டம் தினசரி நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக ஆனது. ஐசனோவரின் எரிச்சல் பெருகியது.

ஆலன் கின்ஸ்பெர்க் மற்றும் புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸ்ஸன் ஆகியோர் அடங்கிய கலைஞர்களுக்கு கியூபக் குழு விருந்து அளித்தது.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கான மதிய விருந்துக்கு காஸ்ட்ரோவை ஐசனஹோவர் அழைக்காத நிலையில் காஸ்ட்ரோ தாமாக ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் தெரசா ஹோட்டலின் “பாட்டாளி வர்க்க” ஆப்பிரிக்க அமெரிக்க பணியாளர்கள் விருந்தினராக கலந்துகொண்டனர்.

இந்த விருந்தின் படங்களில், ஹோட்டலின் பெல்பாய் மற்றும் குமாஸ்தாக்கள் சீருடையில் காஸ்ட்ரோவுக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

தெரசாவின் 13 மாடி கட்டடம் இன்று தேசிய வரலாற்று இடங்களின் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

நான் ஏழாவது அவென்யூவை அடைந்தபோது, கட்டடத்தின் வெளிப்புறம் எப்போதும் போல் பிரமாதமாக இருப்பதைக் கண்டேன். ஆனால் ஹோட்டலின் உட்புறம் அப்படி இல்லை.

1960களில் இங்கு கடைகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டு அதன் பெயர் தெரசா டவர் என மாற்றப்பட்டது.

ஹோட்டலின் பழைய விசாலமான பால்ரூம் மற்றும் சாப்பாட்டு அறை இடிக்கப்பட்டுள்ளதாக ஒரு வரவேற்பாளர் என்னிடம் கூறினார். “இப்போது அங்கு பார்க்க எதுவும் இல்லை.”

இரவு உணவு மற்றும் பானம்

காஸ்ட்ரோவும் அவரைப் பின்பற்றுபவர்களும்-ராணுவத் தலைவர் ஜுவான் அல்மேடா உட்பட பல இளம் ஆப்பிரிக்க-கியூபர்கள் இரவில் மலிவான மற்றும் சுவையான பர்கர்களுக்காக வெளியே சென்றனர்.

பணிப்பெண்கள் அவர்களுடன் சிரித்து பேசும் படங்கள் உள்ளன. ஒரு புகைப்படத்தில், கியூபா வெளியுறவு அமைச்சர் ரால் ரோவா, ஹாட் டாக் சாப்பிடுவதைக் காணலாம்.

1960ல் ஐக்கிய நாடுகள் சபையில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை இன்றும் சாதனையாக உள்ளது. 4 மணிநேரம் 29 நிமிடங்கள் நீடித்த உரையில் காஸ்ட்ரோ ஏகாதிபத்தியத்தை நிராகரித்தார்.

அன்றிலிருந்து அமெரிக்காவுடனான கியூபாவின் உறவுகள் மோசமடைந்து வருகின்றன.’ Bay of Pigs’ ஊடுருவலை சி.ஐ.ஏ ஊக்குவித்து, உறவுகளை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

காஸ்ட்ரோ சோவியத் யூனியனுடனும் சோசலிச மாதிரியுடனும் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவர் 1979,1995 மற்றும் 2000இல் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று முறை நியூயார்க்கிற்கு வந்தார். ஆகவே அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க வேண்டியிருந்தது.

1960களின் அந்த பரபரப்பான நாட்களை காஸ்ட்ரோ மறக்கவே இல்லை. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு 2000ஆம் ஆண்டில், தெரசா ஹோட்டலுக்கு அருகிலுள்ள ரிவர்சைடு தேவாலயத்தில் 3,000 பேர் முன்னிலையில், “ஹார்லெம் எனது சிறந்த நண்பர்கள் வசிக்கும் இடம்” என்று கூறினார்.

1960ல் காஸ்ட்ரோவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் சென்ற கடைகள் (லெனாக்ஸ் லவுஞ்ச் போன்றவை) இப்போது மூடப்பட்டுவிட்டன.

ஹார்லெமின் சில்வியா உணவகம், காஸ்ட்ரோவின் வருகைக்குப் பிறகு 1962இல் திறக்கப்பட்டது.

அங்கு செல்லாமல், ரெட் ரூஸ்டர் உணவகத்தில் மது அருந்துவதற்காக நின்றேன். தெரசாவிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இது புதிய ஹார்லெமின் சின்னமாக உள்ளது. புகழ்பெற்ற ‘ஸ்பீக்ஈசி’ பகுதியில் இருந்து இந்தப்பெயர் அதற்கு கிடைத்துள்ளது. ஹார்லெமில் பிறந்த புகழ்பெற்ற நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் ஆர்வலர் ஜேம்ஸ் பால்ட்வின் ஒரு காலத்தில் இங்கு வருவார். அதன் டைனிங் ஹால் ஸ்வீடிஷ்-எத்தியோப்பியன் பிரபல சமையல்காரர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

நியூயார்க்கில் காஸ்ட்ரோவின் பாதையைத் தேடியது அந்த நகரத்தின் மீதான எனது அன்பை மீண்டும் தூண்டியது. அந்த இடங்கள் இன்னும் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.

நான் இதுவரை நினைத்துப் பார்க்காத நகரத்தின் மூலைகளைப் பார்த்தேன். நான் ஒருபோதும் சந்திக்காதவர்களுடன் பேசினேன். எந்தப் பயணத்திற்கும் இதுவே மூலம்.

நியூயார்க்கின் அதிக வாடகை மற்றும் ஏராளமாக பணம் வைத்திருப்பவர்கள் அதிகமாக அங்கு வசிக்கத் தொடங்கியிருப்பதாலும் நகரத்தின் கவர்ச்சி குறைந்துவிட்டதாக நிறையவே எழுதப்படுகிறது.

ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக இருப்பது நிம்மதியான விஷயம். நகரம் நாம் எதிர்பார்ப்பது போல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அங்கு எப்போதும்போல மாற்றங்களுக்கு குறைவில்லை.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »