Press "Enter" to skip to content

உலகத் தாய்மொழிகள் தினம்: தாய்மொழி வழிக் கல்வியின் தேவை என்ன?

  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், ”அனைத்து தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் தாய்மொழி தவிர பிற மொழிகளில் கற்பிக்கப்படுகிறார்கள்.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாசாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. இன்றைய கணினி மயமான உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும்” என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம்

மொழிப்போராட்டம்

பட மூலாதாரம், DMK

இதைப்படிக்கின்ற போது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால், இது ஏன் உலக அளவில் கவனம் பெறவில்லை என்கிற கேள்வி எழும். வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது உள்நாட்டில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வங்கதேசம் தனி நாடாகவும் உருவாவனது. அந்நாட்டின் பிரதிநிதி உலக தாய்மொழிகள் தின, தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை, யுனெஸ்கோவும் அங்கீகரித்தது. ஆனால், தமிழ் மொழி காக்கும் போராட்டம் கவனத்தை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மொழிப்போரில் பங்கேற்றவர்கள்.

தாய்ப்பாலும் தாய்மொழியும் உயிர்ப்பானவை

கவிஞர் அறிவுமதி

பட மூலாதாரம், Arivumathi

கவிஞர் அறிவுமதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ”வங்கதேசத்தில் நடைபெற்றதை விட பன் மடங்கு வீரியமான போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால், வழக்கமான நம்முடைய பெருந்தன்மையால், மொழிப் போராட்ட வரலாறு யுனெஸ்கோ வரை செல்லவில்லை. பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஈகம் பெரும் வணக்கத்திற்குரியது. ஈடு, இணையற்றது. உலகத்தில் உள்ள மொழிகளைக் காக்க வேண்டும் என்று யுனெஸ்கோ உலக தாய்மொழி தினத்தை அறிவித்துள்ளது.

ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழி. எனவே, தாய்ப்பாலை போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது. உணர்வோடு கலந்தது. தாய்மொழி என்பதும் ஏதே ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய 3 ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது. கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றம் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கபட வேண்டியது கட்டாயம். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை தொடரச் செய்யும். அதுதான் மொழிப்போர் ஈகிகளுக்கு செய்யும் வீர வணக்கம்.” என்கிறார்.

பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு

பொன்னவைக்கோ

பட மூலாதாரம், Prof. Ponnavaiko

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ பிபிசி தமிழிடம் கூறுகையில், ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும். இதற்கான பரிந்துரையை கடந்த 2006ம் ஆண்டு எனது தலைமையிலான, கல்வியாளர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றால், எந்த சாதனையையும் படைக்க முடியாது. சாதனையாளராக வளர தாய்மொழி வழிக் கல்வி மிக அவசியமானது. அடிப்படையானது. குறிப்பாக, ஜப்பான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியை வழங்கி பல கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி வருவதைக் காணலாம். மாறாக வேற்றுமொழியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி எதிர்மறை விளைவுகளைத்தான் தரும். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மூலம் இணைய வழியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல், உலகம் முழுவதும் இருந்தும் படிக்க வாய்ப்புள்ளது” என்கிறார்.

தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்குமா?

சிவ காளிதாசன்

பட மூலாதாரம், Siva Kalidasan

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, கடந்த 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவரும் அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான சிவ.காளிதாசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ”அடிப்படை மொழி அறிவு அனைவருக்கும் முக்கியம். கருவில் இருக்கும் போதே 10 ஆயிரம் கலைச்சொற்களை உள்வாங்கி வைத்துள்ளது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தாய்மொழியில் அடிப்படை வலுவாக அமையும் போது, எத்தனை மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது. இதை தாய்மொழி வழிக் கல்வியின் மூலமே இந்த அடிப்படை வலுவாகும். ஆனால், குழந்தையின் பெற்றோர் பேசும், குழந்தை கேட்கும் வார்த்தைகளை வேறு மொழியில் பள்ளியில் கற்பிக்கும் போது குழந்தை குழப்பமடைகிறது. குறிப்பாக, அம்மா, அப்பா, பூனை என்று சொல்லி, கேட்டதை பள்ளியில் மம்மி, டாடி, கேட் என்று படிக்கும் போது குழந்தை குழப்பமடையும்.

தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியை 1993ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 21 தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஆனால், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று கூறி, 2006ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 23, 968 அரசுப் பள்ளிகள் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளன. இது பெரும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 45, 000 மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று வருவது ஆறுதலாக இருக்கிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தனியாரால் நடத்தப்படும் தாய்த் தமிழ் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக்க வேண்டும். இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்.”என்கிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »