Press "Enter" to skip to content

அமெரிக்க வரலாறு: மால்கம் எக்ஸ் படுகொலை – ‘கொல்லப்படுவோம் என்பது அவருக்கு முன்பே தெரியும்’

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா கறுப்பினத்தவரை மட்டும் கொண்ட நாடாக மாற வேண்டும் என்று கூறிய மால்கம் எக்ஸ் 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

நியூயார்க்கில் உள்ள ஹார்லெம் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஆடுபோன் அரங்கில் சுமார் 400 பேர் முன்னிலையில் அவர் உரையைத் தொடங்கியபோது பல முறை அவரது உடலில் குண்டுகள் பாய்ந்தன.

அப்போது 39 வயதாகியிருந்த மால்கம் எக்ஸ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் இருவர் அரங்குக்கு வெளியே மால்கம் எக்ஸின் ஆதரவாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு அவர்களை காவல்துறையினர் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தாமஸ் ஹகன், காலில் குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த இருவரும் நேஷன் ஆஃப் இஸ்லாம் (NoI) என்ற கறுப்பின முஸ்லிம் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.

கொலை செய்யப்பட்டது ஏன்?

நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பின் முதிர்ந்த தலைவராக இருந்த எலிஜா முஹம்மதுவிடம் இருந்து அந்த பொறுப்பை மால்கம் எக்ஸ் பெற்றுக் கொள்வார் என்று நீண்ட காலமாகவே கருதப்பட்டது வந்தது.

ஆனால் அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து பிரிந்து தனது சொந்த அமைப்பை நிறுவினார்.

இருப்பினும், மெக்கா பயணத்திற்குப் பிறகு அவர் வெள்ளையர்களிடம் மிகவும் இணக்கமான அணுகுமுறையை மேற்கொள்வதாகக் கருதப்பட்டது.

மால்கம்

பட மூலாதாரம், Getty Images

மால்கம் எக்ஸின் கொலைக்கு இரு குழுக்களுக்கு இடையேயான பகைமை காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறினர்.

படுகொலைக்கு ஒரு வாரம் முன்புதான் மால்கம் எக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் உயிர் தப்பினர்.

“தாம் கொல்லப்படுவோம் என்பதை மால்கம் எக்ஸ் அறிந்திருந்தார்” என்று அவரது வழக்கறிஞர் பெர்சி சுட்டன் அப்போது கூறினார்.

மால்கம் எக்ஸ் யார்?

1925 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் மால்கம் ஸ்டூவர்ட் லிட்டில் பிறந்தார். அவர் குடும்பத்தின் எட்டு குழந்தைகளில் நான்காவது குழந்தை.

அவர் இளமையாக இருந்தபோது, ​​மால்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் கு க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan) என்ற குழுவிடமிருந்து இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்கள். இந்த இனவெறி, வன்முறைக் குழுவிடம் இருந்து தப்புவதற்கு அவர்களது குடும்பம் பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது.

அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது அவரது தந்தை ஒரு குழுவால் கொல்லப்பட்டார். அதை இனவெறித் தாக்குதல் என்று இன்றும் பலர் நம்புகின்றனர்.

இத்தகைய குழந்தை பருவ அனுபவங்கள் அவரை சிவில் உரிமைகள் இயக்கத்தில் சேர தூண்டியது.

மால்கம்

பட மூலாதாரம், Getty Images

சிவில் உரிமை என்பது அடிப்படையான மனித உரிமைதான். சுதந்திரத்திற்கான உரிமை, கல்வி பெறும் உரிமை, பெரியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை போன்றவை இதில் அடங்கும். இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் கறுப்பினத்தவருக்கு மறுக்கப்பட்டு வந்தன.

அவர்கள் அடிமைகளாக இருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். விலங்குகளைப் போல பணத்திற்காக வாங்கப்பட்டு விற்கப்பட்டனர். பெரும்பாலான அடிமைகள் வெள்ளை இன உரிமையாளர்களால் கொடூரமாக நடத்தப்பட்டனர்.

1833 இல் இங்கிலாந்திலும், 1865 இல் அமெரிக்காவிலும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் வெள்ளையினத்தவரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். மோசமாக நடத்தப்பட்டனர். வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், போக்குவரத்து மற்றும் பணியிடங்கள் போன்ற அனைத்திலும் ஒருவரின் தோலின் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டது.

உதாரணமாக, கறுப்பினக் குழந்தைகள் வெள்ளைக் குழந்தைகளைப் போலவே பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பேருந்துகளில் கறுப்பின மக்கள் தனித்தனியாக அமர வேண்டியிருந்தது.

இந்தப் பாகுபாட்டை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதிர்க்கத் தொடங்கியபோது சிவில் உரிமைகள் இயக்கம் தோன்றியது. வெள்ளையர்களைப் போலவே கறுப்பினத்தவரும் நடத்தப்பட வேண்டும் என்று அந்த இயக்கங்களில் பங்கேற்றவர்கள் விரும்பினர்.அந்த நேரத்தில் பிரபலமான சிவில் உரிமைகள் தலைவர்களில் ஒருவராக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இருந்தார்.

மால்கம் எக்ஸ் இந்த இயக்கத்துக்குள் எப்படி வந்தார்?

மால்கம் எக்ஸும் அவரது குடும்பத்தினரும் அனுபவித்த இனவெறி துஷ்பிரயோகம் காரணமாக கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராட மால்கம் எக்ஸ் விரும்பினார். பேரணிகள், பெரிய கூட்டங்கள், நிகழ்வுகளில் அவர் பேச்சை ஏராளமான மக்கள் கேட்டனர்.

மால்கம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அவரது பாதை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் பாதையில் இருந்து வேறுபட்டது. அகிம்சை போராட்டங்களை ஊக்குவித்த மார்ட்டின் லூதர் கிங் போலல்லாமல், கறுப்பின மக்கள் “எந்த வகையிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று மால்கம் எக்ஸ் கூறினார்.

கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் சேர்ந்து வாழும் அமெரிக்க தேசம் வேண்டும் என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் கனவை மால்கம் எக்ஸ் விரும்பவில்லை. கறுப்பின மக்களுக்காக ஒரு தனி தேசம் வேண்டும் என்று விரும்பினார்.

மால்கம் எக்ஸ் என்ற பெயர் எப்படி வந்தது?

மால்கம் எக்ஸின் குழந்தைப் பருவம் மிகவும் மோசமாக இருந்தது. அவர் இளமையாக இருந்தபோது அவரது தந்தை கொல்லப்பட்டதால் மனம் உடைந்திருந்தார். மால்கமின் குடும்பத்திடம் போதுமான பணம் இல்லை. அதற்காக குற்றங்கள் புரியத் தொடங்கினார். திருடப்பட்ட பொருட்களுடன் பிடிபட்டதற்காக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவர் சிறையில் இருந்தபோது, ​​​​அவரது சகோதரர் அவருக்கு நேஷன் ஆஃப் இஸ்லாம் என்ற குழுவைப் பற்றி ஒரு கடிதம் அனுப்பினார். மால்கமும் அதில் சேர முடிவு செய்தார். இந்த மாற்றத்தைக் குறிக்க தனது பெயரை மால்கம் எக்ஸ் என மாற்றினார். லிட்டில் என்ற பெயர் அடிமைகளுக்கானது என்ற கருத்தால் அதை தன் பெயரில் இருந்து நீக்கினார்.

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு எலியா முகமது என்பவரால் நடத்தப்பட்டது. கறுப்பின மக்கள் வெள்ளையர்களை விட உயர்ந்தவர்கள் என்று நேஷன் ஆஃப் இஸ்லாம் உறுப்பினர்கள் நம்பினர். கறுப்பின மக்களின் உண்மையான மதம் இஸ்லாம் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.

மால்கம் எக்ஸ்க்கு என்ன ஆனது?

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இருந்தவர்களுடன் மால்கம் எக்ஸுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் நேஷன் ஆஃப் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார், இருப்பினும் தொடர்ந்து முஸ்லிமாகவே இருந்தார்.

அவர் இஸ்லாத்தின் புனித நகரமான மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார். திரும்பி வந்தபோது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற பிற சிவில் உரிமைத் தலைவர்களுடன் சம உரிமைகளை அமைதியான முறையில் அடைவதற்கான வழிகளில் பணியாற்றத் தொடங்கினார். அதனால் நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பில் அவருக்கு எதிரிகள் உருவாகினர். பிப்ரவரி 14, 1965 அன்று அவரது வீடு தாக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

மால்கம்

பட மூலாதாரம், SOPA Images

சில நாட்களுக்குப் பிறகு, அவர் நியூயார்க் நகரில் ஒரு உரையைத் தொடங்குகையில், சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபல அமெரிக்க நடிகரான டென்சல் வாஷிங்டன், மால்கம் எக்ஸாக அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு படத்தில் நடித்தார்

“நான் எப்போதும் மால்கம் மீது ஆழ்ந்த பாசம் கொண்டிருந்தேன். பிரச்னையின் ஆணை வேரைத் தொடும் திறன் கொண்டவர் அவர். ஒரு இனமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மால்கம் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது” என்று அவரைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் கூறியுள்ளார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »