Press "Enter" to skip to content

சிங்கப்பூர் காட்டுக்குள் 30 ஆண்டுகளாக வாழ்ந்த மனிதருக்கு வீடு கொடுத்த அரசு

  • பீட்டர் ஹாஸ்கின்ஸ்
  • பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர்

சிங்கப்பூர், பளபளக்கும் வானளாவிய கட்டடங்கள் மற்றும் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள் போனவற்றுக்குக் குறைவில்லாத, உலகின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆனால், ஒருவர் அந்த நாட்டிலுள்ள ஒரு காட்டிற்குள் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசையைத் தான் தன்னுடைய வீடாகவே கருதினார்.

ஓ கோ செங்கைச் சந்திக்கும்போது, முதலில் அவருடைய பளிச்சிடும் கண்கள் தான் உங்கள் கவனத்தைப் பறிக்கும்.

அவருடைய வயது 79. அவரது வயதில் பாதி இருப்பவர்களை விடவே மிகச் சிறந்த உடல் உறுதியோடு இருக்கிறார்.

இந்த மாதத் தொடக்கத்தில், சிங்கப்பூரில் ஓ கோ ஒரு காட்டில் வாழ்ந்த கதை மிகுதியாக பகிரப்பட்டது. அதற்கு நாடு முழுவதும் பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவருக்கு ஏன் அதிக உதவிகள் செய்யபடவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பினர். மேலும், ஆர்வமாக 30 ஆண்டுகளாக இந்த வாழ்க்கையை அவர்கள் எப்படி வாழ்ந்தார் என்று கேட்கின்றனர்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் வந்த சிக்கல்

இவையனைத்தும், ஒரு கிஸ்துமஸ் தினத்தன்று உரிமம் இன்றி வர்த்தகத்தில் ஓ கோ ஈடுபட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தபோது தொடங்கியது.

அவர் பயிரிட்டிருந்த காய்கறிகள், மிளகாய்களை விற்றுக் கொண்டிருந்தார். பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக சந்தைகளில் பூ விற்கும் வேலையை இழந்திருந்தார்.

அவர் தன்னுடைய பொருட்களுக்கு வசூலித்த ஒரு சிங்கப்பூர் டாலர் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர் அளித்ததாக ஓ கோ நம்புகிறார்.

அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த தன்னார்வலர் ஒருவர், இவருடைய காய்கறிகளைக் கையகப்படுத்திக் கொண்ட அதிகாரிகளிடம் ஓ கோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவருடைய நிலையைப் பார்த்து தான் ஆத்திரமடைந்ததாகக் கூறும் விவியன் பான், அவர் வெறும் கையோடு வீட்டிற்குத் திரும்புவதைத் தான் விரும்பவில்லை என்றும் கூறியவர், “ஆனால், சட்டப்படி தெருக்களில் விற்பனை செய்யக்கூடாது என்பது எனக்குப் புரிகிறது,” என்கிறார்.

விவியன் அந்தச் சம்பவத்தைப் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். அந்தக் காணொளி வேகமாக மிகுதியாக பகிரப்பட்டது. அதோடு, ஓ கோவின் நிலை நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா, ஓ கோவினுடைய பிரச்னையின் பின்னணியைத் தெரிந்துகொண்டார்.

ஓ கோ சுமார் 30 ஆண்டுகளாக, காட்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்.

காட்டிற்குள் வாழ்க்கை

ஓ கோ, சுங்கேய் டெங்கா என்ற உள்ளூர் கிராமம் ஒன்றில் தன் குடும்பத்தோடு வளர்ந்தார்.

இருப்பினும் 1980-களில், அந்தக் கிராமங்கள் புதிய வானுயர கட்டிடங்களுக்காக அகற்றப்பட்டன.

அங்கு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கம் புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தது. ஆனால், ஓ கோவால் அவருக்கென ஒரு வீட்டைப் பெற முடியவில்லை.

ஆனால், அவருடைய சகோதரர் அரசு வழங்கிய வீட்டைப் பெற்றார். ஓ கோவையும் அங்கு வாழ்வதற்கு அழைத்தார். ஆனால், காலப்போக்கில் சகோதரரின் குடும்பத்திற்குச் சுமையாக இருக்க விரும்பாத காரணத்தால் ஓ கோ அங்கிருந்து வெளியேறினார்.

30 ஆண்டுகளாக காட்டிற்குள் வாழ்ந்த மனிதர்

பிறகு அங்கிருந்து கிளம்பியவர், அவருடைய பழைய வீடு இருந்த இடத்திற்கு அருகிலிருந்த ஒரு காட்டிற்குள் சென்று, மரக்கட்டை, மூங்கில், தார்பாலின் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக குடிசையை உருவாக்கி அதில் தன் இரவுகளைக் கழிக்கத் தொடங்கினார்.

அந்தக் குடிசையை நெருங்கும்போது, அதன் வாசலில் ஓ கோ சமைக்கும் இடத்தில் சாம்பல் கிடப்பதைப் பார்க்கலாம். அந்தக் குடிசையின் நடுவே அவருடைய பொருட்களும் அதன் பின்புறத்தில் அவர் உறங்கும் இடமும் இருப்பதைப் பார்க்க முடியும்.

அவருடைய குடிசைக்கு அருகிலுள்ள தோட்டத்தில் தனக்குத் தேவையான உணவை விளைவிப்பார். மரங்களுக்கு இடையே ஆடைகளையும் தனது காய்கறியைப் பாதுகாக்க வேலியும் அமைத்துள்ளார்.

குடிசைக்கு அருகே உயர்ந்து நிற்கும் பலா மரம், போதுமான நிழலை வழங்கியதாக அவர் கூறுகிறார். மேலும், சிங்கப்பூரின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் அசௌகர்யமாக உணரவில்லை என்கிறார்.

தனிமையும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை என்பவர், நல்ல வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய சுற்றுப்புற சூழல் அவருடைய தாவரங்கள் வளர்வதை எளிதாக்கி இருந்தாலும், அவர் தன் தோட்டத்தைப் பராமரிப்பதில் தன்னை மும்முரமாக வைத்திருந்தர்.

ஓ கோவைப் பொறுத்தவரை, காட்டில் வாழ்வதில் மிக மோசமான விஷயம் எலிகள். அவை அவருடைய குடிசைக்குள் நுழைந்து, ஆடைகளில் உள்ள ஓட்டைகளை மென்று சாப்பிடுகின்றன.

அவர் அவ்வப்போது பல்வேறு வேலைகளை கிடைக்கும்போது செய்தார்.

ஓ கோ சில நேரங்களில் தான் சம்பாதித்த பணத்தை அண்டை நாடான இந்தோனேசியாவில் உள்ள சிறிய தீவான படாமிற்கு படகில் செல்வதற்குப் பயன்படுத்துவார். அங்கு தான் அவர் மேடம் டாச்சியை சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

இன்னமும் ஓ தனது காட்டுக் குடிசையிலிருந்து வார இறுதிகளில் படாமிற்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினரைப் போலவே, இப்போது 17 வயதாகும் ஓ கோவினுடைய மனைவி மற்றும் மகளும் அவர் எப்படி வாழ்ந்தார் என்பது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள்.

அவர் வாழும் இடம் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்டால், அதற்கு எப்போதும், “தோட்டத்தில் வசிக்கிறேன்,” என்றே பதிலளிப்பார் என்று ஓ கோவின் உறவினர்களில் ஒருவர் கூறுகிறார்.

பெருந்தொற்றுப் பேரிடர் தொடங்கியவுடன் படாமிற்கான பயணங்கள் நிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் அதன் எல்லைகளை பெருமளவு மூடியது. அதோடு, தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட்-19 சோதனைகளுக்குப் பணம் செலுத்தத் தயாராக உள்ளோருக்கு மட்டுமே பயணத்தை அனுமதித்தது.

இருப்பினும், அவர் தன்னுடைய குடும்பத்திற்கு மாதம் 500 முதல் 600 சிங்கப்பூர் டாலர்கள் வரை அவர்களுக்கு அனுப்பி நிதியுதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

சிங்கப்பூரில் வீடற்றவர்கள் ஒப்பீட்டளவில் அரிது. அது சராசரியாக, பூமியின் பணக்கார மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

உலக வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அதன் தனிநபர் அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 60,000 டாலர்களாக உள்ளது.

சிங்கப்பூர் ஒரு விரிவான பொது வீட்டு வசதி அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் மக்களில் 80% பேர் மானியம் வழங்கி, வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட கட்டப்பட்டு, நிர்வகிக்கப்படும் கட்டிடங்களில் வசிக்கின்றனர்.

வீடின்றி இருப்பவர்கள் அந்த நகரத்தில் பொதுவான காட்சி இல்லையென்றாலும், சுமார் 1,000 சிங்கப்பூர் மக்கள் வீடற்றவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக காட்டிற்குள் வாழ்ந்த மனிதர்

‘நான் முதல்முறையாக தொலைக்காட்சி பார்க்க முடிந்தது’

இந்த ஆண்டு பிப்ரவரியில், சந்திர புத்தாண்டின் முதல் நாளில், அவருடைய உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடைய குழுவின் உதவியோடு, ஓ கோ வசிப்பதற்காக ஒரு புதிய வீடு வழங்கப்பட்டது.

“இந்தோனேசியாவில் உள்ள அவருடைய மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் இணைவதற்கு நீண்ட கால சமூக உதவியை ஓ கோவுக்கு, குழு தொடர்ந்து செய்யும்,” என்று லியாங் கூறினார்.

அவர் இப்போது, ஒரு படுக்கையறை கொண்ட ஒரு சிறிய வீட்டில், மற்றொரு நபருடன் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

குடியிருப்பிலுள்ள சில தனிப்பட்ட உடைமைகள் போக, நலன் விரும்பிகளால் நன்கொடையாக வழங்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொதிகலன், வாட்டர் ஹீட்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

காட்டில் தனது தங்குமிடத்திற்குப் பக்கத்திலுள்ள குளத்தில் குளித்துப் பழக்கப்பட்ட அவர், குழாய் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததாகக் கருதினார். அதனால், ஓ கோ குறிப்பாக வாட்டர் ஹீட்டருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இப்போது ஒரு ட்ரைவராக வேலை செய்கிறார். வெளிநாட்டு தொழிலாளர்களை ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு ஏற்றிச் செல்கிறார். அதோடு, சில நேரங்களில் தோட்ட வேலை செய்வதாகக் கூறுகிறார்.

கடந்த முப்பது ஆண்டுகளில், அவர் புது வீட்டிற்கு வருவதும் சரி, சிங்கப்பூரில் அவருடைய குடும்பத்தோடு சந்திர புத்தாண்டைக் கொண்டாடியதும் சரி இதுவே முதல்முறை.

“நான் நிறைய சாப்பிட்டேன்! பல ஆண்டுகளாக நான் சுவைக்காத பல வகையான உணவுகள் இருந்தன!,” என்றவாறு சிரித்தார்.

“அற்புதமாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நான் முதல் முறையாக தொலைக்காட்சியைப் பார்க்க முடிந்தது. அதை மிகவும் ரசித்தேன்.”

அவர் ஒரு குடியிருப்பில் வாழ விரும்புவதாகக் கூறினாலும் அவர் காட்டில் வாழ்ந்த சுதந்திரமான வாழ்க்கையை மிஸ் செய்வது தெளிவாகத் தெரிகிறது.

“நான் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்தேன். எனவே ஆம், இயற்கையாகவே நான் அதை இழக்கிறேன்,” என்று அவர் சீன மொழியான ஹொக்கினில் கூறினார்.

“இப்போது கூட, நான் ஒவ்வொரு நாளும் காட்டிற்குத் திரும்புகிறேன். அதிகாலை 3 மணிக்கு எழுந்து, ஆடை அணிந்து, எனது வேலை நாள் தொடங்குவதற்கு முன்பு, என் காய்கறிகளைப் பார்க்க வெளியே செல்கிறேன்.”

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »