Press "Enter" to skip to content

அமெரிக்காவில் அணுசக்தி ரகசியங்களை விற்க முயன்ற தம்பதிக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

  • தாரா மெக்கெல்வி
  • பிபிசி செய்திகள், வாஷிங்டன்

பட மூலாதாரம், CBS

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றிய ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற கணவருக்கு உதவியதாக அமெரிக்க கடற்படை பொறியாளரின் மனைவி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆசிரியையான அவர், ஃபெடரல் வழக்கறிஞர்களுடனான தனது ஒப்பந்தத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறுவார்.

42 வயதான அவருடைய கணவர் ஜோனாதன் டோபே, இந்த வாரத் தொடக்கத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஃபெடரல் வழக்கறிஞர்களுடனான அவருடைய ஒப்பந்தத்தின் கீழ், அவருக்கு 12 முதல் 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

தம்பதியான இவர்கள் இருவருமே மேற்கு விர்ஜீனியாவிலுள்ள மார்டின்ஸ்பர்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் ரகசியமான தகவலை வெளியே கொடுக்க சதி செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

ஜோனாதன் டோபே, நீர்மூழ்கிக் கப்பல்களில் அணுசக்தி உந்து அமைப்புகளில் நிபுணராக இருந்தார். இது நாட்டின் மிகவும் பாதுகாக்கப்படும் ரகசியங்களில் ஒன்றாகும்.

நீதித்துறையின்படி, அவர் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு இந்தத் தகவல்களை விற்க முயன்றார். ஒரு வெளிநாட்டு அதிகாரி என்று அவர் நம்பும் ஒருவரோடு இதுகுறித்த செய்திகளை அனுப்பினார். உண்மையில் அவரோடு தொடர்பில் இருந்த அந்த நபர் ஒரு ரகசிய எஃப்.பி.ஐ முகவர்.

அக்டோபரில் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு, டோபே தம்பதி, இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்க கடற்படை அகாடமியின் இல்லமான மேரிலாந்தில் உள்ள ஆன்னாபோலிஸில் வசித்து வந்தார்கள்.

டயானா டோபே ஒரு தனியார் பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் கற்பித்து வந்தார். அவர், அட்லான்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முனைவர் பெற்றவர்.

ஜோனாதன் டோபே ராணுவ முன்பதிவு உறுப்பினராவதற்கு முன்பு கடற்படையில் பணியாற்றினார். அவர் விர்ஜீனியாவிலுள்ள ஆர்லிங்டனில் கடற்படை நடவடிக்கைகளின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றினார்.

மேரிலாந்தின் அன்னாபோலிஸில் உள்ள டோபே தம்பதியின் இல்லம்

அமெரிக்காவில் இருந்து விரைவாக தப்பிச் செல்வது குறித்து டோபே தம்பதிக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தை மேற்கோள் காட்டி, அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் ஆபத்து இருப்பதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

டயானா டோபேவின் வழக்கறிஞர்கள், அந்த தகவல் பரிமாற்றம் அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது அவருக்கு இருந்த வெறுப்பின் காரணமாக நடந்தது, அதற்கும் ரகசிய தகவல்களை வெளிநாட்டிற்கு விற்கும் சதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று கூறினர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ஜோனாதன் டோபே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தார். பாதுகாப்பிற்கான சோதனை சாவடிகளைக் கடந்து செல்வதற்காக, சில சில பக்கங்களாக பல கட்ட முயற்சியில் பணியிடத்திலிருந்து ஆவணங்களைக் கடத்தினார்.

“என் திட்டத்தை யாரும் சந்தேகிக்காமல் இருப்பதற்காக, வேலையின் போது, என் கைகளுக்கு வரக்கூடிய கோப்புகளை நிதானமாகவும் இயல்பாகவும் சேகரிப்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன்,” என்று டோபே, வெளிநாட்டு அரசாங்கத்தின் அதிகாரி என்று அவர் நம்பிய எஃப்.பி.ஐ புலனாய்வாளருக்கு எழுதினார்.

டோபே, தான் எஃப்.பி.ஐ-ன் வலையில் விழுந்ததை அறியாமல், அவரை நம்பினார்.

ஒரு குறிப்பில், டோபே அவர்களுடைய நட்பைப் பற்றியும் எதிர்காலத்திற்கான தனது நம்பிக்கையைப் பற்றியும், “ஒரு நாள், பாதுகாப்பான சூழல் இருக்கும்போது, இரண்டு பழைய நண்பர்கள் ஒரு உணவகத்தில் சந்தித்து, ஒரு பாட்டில் மதுவைப் பகிர்ந்து கொண்டு, அவர்கள் பகிர்ந்துகொண்ட சுரண்டல்களின் கதைகளைப் பேசிச் சிரிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்,” என்று எழுதியுள்ளார்.

டோபே தம்பதி அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய ரகசியங்களை விற்க முயன்றனர்

பட மூலாதாரம், US NAVY/THIEP VAN NGUYEN II

இந்த மாதிரியான வழக்கில் ஃபெடரல் வழக்கறிஞர்களோடு ஒப்பந்தம் போடுவது வழக்கத்திற்கு மாறானது. ஆனால், அது சாத்தியமற்றது இல்லை. ஃபெடரல் புலனாய்வாளர்கள் இந்த வழக்குகளை மிகுந்த தீவிரத்தோடு அணுகுவதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவர்களிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு ஈடாக பிரதிவாதிகளுக்கு குறைந்த தண்டனை வழங்குவதை அவர்கள் ஆதரிக்கலாம்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா சட்டப் பேராசிரியரான டேனியல் ரிச்மன், “சில நேரங்களில், பிரதிவாதிக்கான அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தரவே வழக்கறிஞர்கள் முயல்கின்றனர். அதன் மூலம், புலனாய்வில் அவர்களுக்கு உதவக்கூடிய தகவல்களை பிரதிவாதிகள் சொல்வார்கள்,” என்கிறார்.

இந்த வழக்கில், புலனாய்வாளர்கள் நிச்சயமாக பிரதிவாதிகளிடமிருந்து மேலும் கூடுதல் தகவல்களைக் கண்டுபிடிக்க விரும்பினார்கள். ஃபெடரல் புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் படி, அணுசக்தி ரகசியங்களுக்கு ஈடாக, க்ரிப்டோ பணம்யக 100,000 டாலர்கள் வேண்டும் என்று ஜோனாதன் டோபே கேட்டுள்ளார்.

அவர்களுடைய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஃபெடரல் விசாரணையின்போது டோபே தம்பதியைக் கைது செய்ய வழிவகுப்பதற்காக அவர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த க்ரிப்டோகரன்சியை மீட்டெடுக்க எஃப்.பி.ஐ-க்கு உதவுவதாகக் கூறியுள்ளார்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »