Press "Enter" to skip to content

உணவும் உடல்நலமும்: சரியான நேரத்தில் உண்ணவில்லை என்றால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

ஆரோக்கியமான உணவு என்று வரும்போது, நம் தட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமா?

காலை உணவைப் பெரியளவில் உட்கொள்வது அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்கு உதவும். அதேநேரத்தில் நாளின் கடைசி உணவை சீக்கிரமே சாப்பிடுவது உடல் எடையை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

உணவு உண்ணும் நேரம், உடல் எடை, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

உணவு நேரம் மற்றும் எடை குறைப்பு

உடல் பருமன் என்பது பரவலாக அதிகரிக்கும் நிலையில், நம்முடைய உணவு நேரத்தை மாற்றுவது உடல் எடையைப் பராமரிக்கச் சிறந்த வழியாக இருக்க முடியுமா?

ஆம், என்கிறது அறிவியல். உணவு உண்ணும் நேரம் ஒரு நபரின் எடையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயும் பல ஆய்வுகள் உள்ளன. உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும்போது உடல் எடை பராமரிக்கப்படுவதாகத் தெரியவந்திருக்கிறது.

இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டோன் இந்த இரண்டுக்குமான தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவருடைய இதுவரையிலான ஆய்வு, விரைவாகச் சாப்பிடும்போது நம் உடல் ஊட்டச்சத்துகளை வேகமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்துள்ளது.

எடை

பட மூலாதாரம், Getty Images

அதுகுறித்து ஜான்ஸ்டோன், “சமீபத்திய ஆய்வுகள் மாலை நேரத்தில் சாப்பிடும் உணவைவிட, காலையில் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரிகள் மிகவும் திறம்படப் பயன்படுத்தப்படுவதோடு, இது உடல் எடையைப் பரமாரிப்பதிலும் பங்கு வகிப்பதாகக் கூறுகின்றன,” என்கிறார்.

மேலும், “க்ரோனோநியூட்ரிஷன் என்பது அறிவியல் துறையில் வளர்ந்து வரக்கூடிய ஒரு பிரிவு. நம்முடைய பழங்கால உயிரியல் அமைப்புக்கும் நவீன வாழ்க்கை முறைக்குமான முரண்பாட்டைக் காட்டுகிறது. நாம் சாப்பிடும் நேரம் ஏன் நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால், நாம் ஒன்றிரண்டு வேளை உணவுக்காக மட்டுமின்றி மொத்த உணவுப் பழகத்திலுமே கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேளை உணவில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது பெரிய சிக்கலை உண்டாக்காது. ஆனால், அதையே வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்தால், நிச்சயம் பாதிக்கும்,” என்கிறார்.

அதுமட்டுமின்றி, நாளின் முதல் உணவை நேரமாகச் சாப்பிடுவதற்கும் குறைவான இறப்பு விகிதத்திற்கும் தொடர்பு இருப்பதாக நியூ யார்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் (CUNY) ஓர் ஆய்வு கூறுகிறது.

அந்த ஆய்வில் 34,000 அமெரிக்கர்களின் கடந்த 30 ஆண்டுக்கால உணவு நேர விவரங்களைப் பகுப்பாய்வு செய்தார்கள். அவர்கள் உணவு உண்ணும் நேரத்திற்கும் இறப்பு விகிதத்திற்குமான இணைப்பு குறித்து இதில் ஆராயப்பட்டது. அந்த இணைப்பிற்கு ஏதேனும் காரணங்களைக் கண்டறியவும் அவர்கள் முயன்றனர்.

அதுகுறித்துப் பேசிய குயின்ஸ் கல்லூரியிலுள்ள குடும்பம், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி அறிவியல் துறையின் தலைவர், பேரா.அஷிமா கேன்ட், “நாம் உணவு உண்ணும் நேரத்திற்கும் அதில் கிடைக்கும் ஆற்றலின் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டிற்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதில் ஒன்று, ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் உடலின் செயல்பாடுகள் எப்போது அதில் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தும் நேரத்திற்கும் இடையிலான முரண்பாடு.

எடை

பட மூலாதாரம், Getty Images

உடல் எடை கூடுதல், கொழுப்பு, ரத்தத்திலுள்ள இன்சுலின் அளவு என்று பலவும் இதனால் மாறுபடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதாக அவருடைய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் அவர், “இந்த ஆய்வின் படி, ஆண்கள் காலை 7 மணிக்கும் பெண்கள் 7:15 மணிக்கும் நாளின் முதல் உணவை எடுத்துக் கொள்வது, குறைந்த வயதில் இறப்பதற்கான வாய்ப்பு விகிதத்தைக் குறைக்கிறது,” என்கிறார்.

இருப்பினும், இதற்கான காரணத்தை அவர் இன்னும் முடிவாக உறுதிபடுத்தவில்லை. உணவிலிருந்து ஊட்டச்சத்துகளைப் பிரித்து எடுக்கும் ஹார்மோன்கள் வெளியேறும் நேரத்தோடு இதற்குத் தொடர்பு இருக்கலாம். அதை இன்னும் விரிவான ஆய்வில் உறுதி செய்ய வேண்டியுள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

நாளின் கடைசி உணவை எப்போது உட்கொள்வது?

“இருக்கக்கூடிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில், மாலை நேர உணவை விரைவாக எடுத்துக்கொள்வது சிறந்தது. நாளின் கடைசி ஆற்றல் சேகரிப்பை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் க்ரோனோபயாலஜி மற்றும் இன்டக்ரேடிவ் ஃபிசியாலஜி துறை பேராசிரியர் ஜோனாதன் ஜான்ஸ்டன்.

மேலும், “அதற்குக் காரணம், நாள் முடிய முடிய நம் இன்சுலினுடைய திறன் குறையத் தொடங்கும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர் மக்கள் ‘மதிய நீரிழிவு’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார்கள். ஏனெனில், மதியத்திற்கு மேல், சர்க்கரைக்கான தாங்குதிறன் காலையில் இருந்ததைவிடக் குறையும். ஆகவே, இரவு உணவைத் தாமதாகச் சாப்பிட்டால் சர்க்கரை, கொழுப்பு போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும். அப்படி, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்றவை அதிகரித்தால் அது இதயக் கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்குத் தெரியும்,” என்கிறார்.

உணவு

பட மூலாதாரம், Getty Images

இறுதியாக, “நாம் தேர்ந்தெடுக்கும் உணவு மற்றும் அவற்றின் அளவு நம் ஆரோக்கியத்தில் நிச்சயமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரமும் இதில் பங்கு வகிக்கிறது என்பது உறுதியானால், நாம் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கும்போது, என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதோடு, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் சேர்த்து துல்லியமான ஆலோசனைகளை வழங்க முடியும்.

“அடிப்படையில் இரவு 10 முதல் 6 மணிக்குள் தூங்கி எழ வேண்டும். காலை உணவை 8 மணி முதல் 8.30-க்குள் சாப்பிட வேண்டும். மதிய உணவை ஒரு மணி முதல் 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவு உணவைப் பொறுத்தவரை, வீட்டில் இருப்போர் இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. யாராக இருந்தாலும் 8.30 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுவது சிறந்தது” என்கிறார் உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »