Press "Enter" to skip to content

யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?

பட மூலாதாரம், EPA

யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்த இரண்டு பகுதிகளையும் சுதந்திர தனி நாடுகளாகவும் அங்கீகரித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தால் யுக்ரேனின் ஓர் அங்கமாகவே பார்க்கப்படும் இந்தப் பிரிவினைவாதப் பகுதிகளுக்குள் ரஷ்யா தனது படைகளை அனுப்பியுள்ளதே ஒரு படையெடுப்புதான் என்று மேற்குலக நாடுகள் கருதுகின்றன.

தங்கள் நாட்டுப் படையினர் டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் என்று ரஷ்ய அரசு கூறினாலும், அதை ”அறிவற்ற” (நான்-சென்ஸ்) செயல் என அமெரிக்கா கூறுகிறது.

யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரண்டு பகுதிகளுக்கும் எதிராக பல பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அங்கு அமெரிக்க குடிமக்கள் முதலீடு செய்யவும், அங்கு இருப்பவர்களுடன வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று கூறும் பிரிட்டன் அரசு ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருளாதார நலன்களை பிரிட்டனின் தடைகள் பாதிக்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

படையெடுப்பு தொடங்கி விட்டதாக மேற்கத்திய நாடுகள் கூறும் நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ வல்லமை என்ன?

உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் ‘குளோபல் ஃபயர் பவர்’ எனும் இணையதளம் மற்றும் உலக நாடுகள் இடையிலான போர், பதற்றம், புவிசார் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து ஆராயும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் எனும் ஆய்வு நிறுவனத்தின் வருடாந்திரப் பதிப்பான ‘தி பட்டாளம் பேலன்ஸ்’ ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பிபிசி இந்த விவரங்களை உங்களுக்கு வழங்குகிறது.

  • யுக்ரேன் பாதுகாப்பு படைகளில் இருக்கும் மொத்த துருப்புகளின் எண்ணிக்கை 11 லட்சம் பேர்; ரஷ்யாவில் பாதுகாப்பு படைகளில் இருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை 29 லட்சம் பேர். இவர்கள் அனைவருமே இப்போது பணியில் இருப்போர் அல்ல.
  • யுக்ரேனில் தற்பொழுது களத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இரண்டு லட்சம் பாதுகாப்பு படையினர். ஆனால் இதே எண்ணிக்கை ரஷ்யாவில் ஒன்பது லட்சமாக உள்ளது.
  • யுக்ரேனில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சம் பேர். ரஷ்யாவில் இதே எண்ணிக்கை 20 லட்சம் பேர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளின் பாதுகாப்பு படைகளில் இருந்தும் பணி ஓய்வு பெற்றவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
யுக்ரேனில் பிரிவினைவாதப் பகுதியாக இருந்த க்ரைமியாவுக்கு 2014இல் படைகளை அனுப்பி ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
  • தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய விமானங்கள் யுக்ரேனிடம் 98 மட்டுமே உள்ளன. ரஷ்யாவிடம் 1511 விமானங்கள் உள்ளன.
  • தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய உலங்கூர்திகள் யுக்ரேனிடம் 34 உள்ளன. ஆனால் ரஷ்யாவிடம் 544 உலங்கூர்திகள் உள்ளன.
  • யுக்ரேன் ராணுவத்திடம் 2596 டாங்கிகளும், ரஷ்யாவிடம் 12,240 டாங்கிகளும் உள்ளன.
  • யுக்ரேன் பாதுகாப்புப் படைகளின் வசமிருக்கும் கவச வாகனங்களின் எண்ணிக்கை 12,303. இதுவே ரஷ்யாவின் பாதுகாப்புப் படைகள் இடமிருக்கும் கவச வாகனங்களின் எண்ணிக்கை 30,122.
  • நிலத்தில் வாகனங்கள் மூலம் கட்டி இழுத்துச் செல்லக்கூடிய சேணேவிகள் (towed artillery) யுக்ரேன் படைகளிடம் 2,040 உள்ளன; இவை ரஷ்யாவிடம் 7,571 உள்ளன.
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »