Press "Enter" to skip to content

தமிழ்நாட்டில் “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் இல்லாமல் நெல் விற்க முடியாது” – விவசாயிகள் புகார்

  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், TNCSC

தமிழ்நாட்டில் ”நேரடி நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் தராமல் பெரும்பாலான நேரங்களில் நெல் விற்க முடியாது என்பதே நிலை என்கிறார்கள் விவசாயிகள்.

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்(டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.

கொள்முதல் நிலையம் சுமார் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின் (பதர் தூற்றும் இயந்திரம்), மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பத மானி, ஆகியவற்றோடு செயல்படும். மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி-மார்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் கட்டாய வசூல் குற்றச்சாட்டு

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

பட மூலாதாரம், Ayyakkannu

மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. இதன்படி, 17 சதவீதத்துக்கு மிகாமல் ஈரப்பதம் உள்ள சன்ன ரக நெல், ஒரு குவிண்டால் (100 கிலோ) 2, 060 ரூபாய் விலையில் வாங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.100 அடக்கம். பொது ரக நெல் குவிண்டால் 2,015 ரூபாய் விலையில் வாங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ. 75 ஊக்கத் தொகையும் அடக்கம்.

ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு 75 – 100 ரூபாய் வரை விவசாயிகளிடம் கட்டாயமாக லஞ்சம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது. இதை நிறுத்தக் கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அண்மையில் நேரில் மனு அளித்தனர்.

தேக்கமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்

வழக்குரைஞர் ஜீவக்குமார்

பட மூலாதாரம், Jeevakumar

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜீவக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு 30-40 ரூபாய் வரை விவசாயிகளில் கட்டாய வசூல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விவசாயிகளும் பணம் கொடுத்தால்தான் விளைந்த நெல்லை விற்க முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.” என்கிறார்.

மேலும், ”குறைந்த எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் இருப்பதால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைகிறது. இதனால், அறுவடை செய்த நெல்லை, கையிருப்பில் வைத்திருக்க முடியாமல், உடனே விற்று விட வேண்டும் என்கிற தவிப்பில், நம்முடைய நெல்லை விற்றால் போதும் என்று சத்தமில்லாமல், கேட்பதைக் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

இனி, கட்டாய வசூல் இருக்காது என்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறது. அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும். விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லை, தேக்கமின்றி அன்றைய தினமே கொள்முதல் செய்ய, வருவாய் கிராம் தோறும் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்,”என்கிறார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மூட்டைக்கு ரூ. 3.25 இருந்த நிலையில், அண்மையில் மூட்டைக்கு ரூ. 10 என்று உயர்த்தப்பட்டது. இது தொழிலாளர்கள் மத்தியில வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், போதிய கிடங்கு வசதியின்மை, கொள்முதல் செய்த பிறகு ஏற்படும் இழப்பு, பார வண்டி ஓட்டுநர்களுக்கான செலவு உள்ளிட்ட நடைமுறைச் செலவுகளைச் சமாளிக்க விவசாயிகளிடம் வசூல் செய்யும் நிலை தொடர்கிறது என்று கொள்முதல் நிலைய பணியாளர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

வசூல் செய்யக்கூடாது என்பதில் உறுதி

ஏஐடியுசி சந்திரகுமார்

பட மூலாதாரம், Chandrakumar

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சந்திரகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது தொழிற்சங்கக் கூட்டத்திலும் இதைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். ஆனால், நடைமுறையில், மேலதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.” என்கிறார்.

குறிப்பாக, ”கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர்(பி.சி), உதவியாளர், இரவுக்காவலர் ஆகியோருக்கு உரிய ஊதியம் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யும் நடைமுறையை முற்றிலும் நிறுத்த, முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதற்கு முழு முயற்சி எடுக்கிறோம். இதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். பார வண்டி வாடகை, இழப்பீடு உள்ளிட்டவற்றிற்கு ஊழியர்களிடம் ரெக்கவரி விதிக்கும் போக்கை நிறுத்த வேண்டும். இதனால்தான் விவசாயிகளிடம் வசூல் செய்யும் நிலை ஏற்படுகிறது” என்கிறார் சந்திரகுமார்.

ஊழியர்களுக்கு ஊதியம் குறைவு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் இளவரி பிபிசி தமிழிடம் கூறுகையில், “கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கூலியை உயர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். அரசுக்கு நன்றி சொல்கிறோம். அதேநேரத்தில் அங்கு பணியாற்றும் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர்களுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். குறைந்த ஊதியம் என்பதற்காக விவசாயிகளிடம் வசூல் செய்வதையும் ஏற்க முடியாது. ஆகையால், நடைமுறைப் பிரச்னைகளையும் களைய அரசு கவனம் செலுத்த வேண்டுகிறோம்.” என்கிறார் இளவரி.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்

உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி

பட மூலாதாரம், R.Sakkarapani

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில்”விவசாயிகளின் நலன் காக்கும் அரணாக அரசு செயல்படுகிறது. நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உயர்வு, நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற அறிவிப்புகள் உழவர் நலனில் முதலமைச்சர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாகும்.

எனவே, நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதேனும் இருந்தால் 18005993540 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

உதவிக்கு தொலைபேசி எண்கள்

கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வது குறைந்துள்ளது என்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் வசூல் செய்வதில்லை என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நெல் விற்பனை தொடர்பாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் குறித்து ஆலோசனை பெறவும் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கவும் உழவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது போல், தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கல் கழக, தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 094451 90660 மற்றும் 09445195840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »