Press "Enter" to skip to content

யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யா மீது விதிக்கப்டும் தடைகள் என்ன?

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

தங்களைத் தாங்களே ‘குடியரசுகள்’ என்று அறிவித்துக் கொண்ட, கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்கு யுக்ரேன் பகுதிகளை, தனி நாடுகளாக, செவ்வாயன்று ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ”அமைதியை காப்பதற்காக” என்று கூறி அப்பகுதிகளுக்குத் தமது படைகளை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன.

தடைகள் என்றால் என்ன?

ஒரு நாடு, சர்வதேச அளவில் உள்ள சட்டத்தை மீறும்போதோ, பயங்கரவாத செயலில் ஈடுபடும்போதோ அந்நாட்டுக்கு எதிராகப் பல தடைகள் (sanctions) விதிக்கப்படும். பரவலாகக் கருதப்படுவது போல இவை பொருளாதாரம் ரீதியான தடைகள் மட்டுமல்ல.

இந்தத் தடைகள் மூலம், தடை விதிக்கப்பட்ட நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் அந்த நாட்டில் உள்ள தனி மனித அல்லது பிரபலமான ஓர் அரசியல் தலைவரின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தத் தடையில் பயணத் தடைகள் மற்றும் அந்த நாட்டுக்கு ஆயுதம் விற்பனை செய்வதற்கான தடைகள் ஆகியவையும் உள்ளடக்கம்.

பொதுவாக இந்தத் தடைகள் போர் பதற்றம் ஏற்படும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும்.

இதுவரையில் ரஷ்யா மீது போடப்பட்ட தடைகள் என்னென்ன ?

ஐரோப்பிய ஒன்றியம் இதுவரையில் ரஷ்யாவில் உள்ள 27 தனி நபர்கள், வங்கிகள் மற்றும் சில நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்டு வரக்கூடிய வங்கிகளில் அவர்கள் பரிவர்த்தனை செய்யவோ, நிதி உதவி பெறவோ முடியாது.

ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்துள்ள, கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள யுக்ரேனின் இரண்டு கிழக்குப் பிராந்தியங்களும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்திலும் ஈடுபடமுடியாது.ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டூமாவின் 351 உறுப்பினர்கள் மீதும் தடைகள் விதிப்பதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாயன்று அமெரிக்காவும் ரஷ்யா மீது தடைகளை விதித்தது. இந்தத் தடைகள் ரஷ்யா தனது ராணுவத்திற்கு நிதியுதவி செய்யும் மிக முக்கியமான இரண்டு வங்கிகள் மீது விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தடையால் அவை, இனி வருங்காலங்களில் அமெரிக்காவுடன் தொழில் செய்யவோ, அமெரிக்க நிதி கட்டமைப்பில் பரிவர்த்தனைகளில் ஈடுபடவோ முடியாது.

ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர் வசமுள்ள பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருப்போருடன் அமெரிக்கர்கள் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்குத் தங்கள் ராணுவத்தினரை அனுப்ப அமெரிக்கா உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் அனுப்பப்படவில்லை என்று கூறுகிறது.

அமெரிக்காவில் தடை விதித்திருந்தாலும், அமெரிக்கா சார்ந்த சில நிறுவனங்கள் அந்த பகுதிகளில் இன்னும் செயல்பட்டு வருகின்றன. யுக்ரேன் மீது படை எடுத்தால் அமெரிக்கா மீண்டும் பல தடைகளை ரஷ்யா மீது பிறப்பிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனும் ரஷ்யாவுக்கு எதிராக சில தடைகளை விதித்துள்ளது. “ரஷ்யா மீது முதல் பகுதி தடைகளாக பொருளாதாரத் தடைகளை ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று ரஷ்ய தொழிலதிபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. நிலைமை மோசமாகும் பட்சத்தில் தடைகள் கடுமையாக்கப்படும்”, என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இருந்த போதிலும் பிரிட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

எரிவாயு

பட மூலாதாரம், Getty Images

இதன் ஒரு பகுதியாக நார்டு ஸ்ட்ரீம் -2 எனும் முக்கிய எரிவாயு குழாய்க்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி ஆட்சித்துறை தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் நிறுத்தி வைத்துள்ளார் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடலோரப் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1200 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த எரிவாயு குழாய் அமைந்துள்ளது.

ரஷ்ய அரசு மற்றும் மேற்கத்திய எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றால் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயுக் குழாய் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை சுமந்து செல்ல அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான பணிகள் முழுமையடைந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படுவது தொடங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.

இனி வருங்காலங்களில் ரஷ்யா எந்தவிதமான தடைகளை எதிர்கொள்ளும்?

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மேற்கத்திய நாடுகள் மிரட்டி வருகின்றன. அவை என்னென்ன?

ஸ்விஃப்டில் இருந்து ரஷ்யா நீக்கப்படலாம்

ஸ்விஃப்ட் (Swift) என்பது உலகளாவிய நிதி செய்தி சேவையாகும். இதன் மூலம் உலக அளவில் பல்வேறு வங்கி பரிவர்த்தனையில் ஈடுபடமுடியும். இதில் இருந்து ரஷ்யா நீக்கப்படும்பட்சத்தில், ரஷ்ய வங்கிகள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பரிவர்த்தனை செய்வதில் சர்வதேச அளவில் பிரச்னை ஏற்படும்.

இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டால் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவும் இதனால் பாதிக்கக்கூடும். அதற்கு காரணம் ரஷ்யாவுடன் சில ஜெர்மனி மற்றும் அமெரிக்க வங்கிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இதனால் போர் வந்தால், ஸ்விஃப்டில் இருந்து ரஷ்யாவை நீக்கும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வாய்ப்பில்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

பெரும்பாலும்

பட மூலாதாரம், TASS VIA GETTY IMAGES

அமெரிக்க டாலர்களை ரஷ்யா பயன்படுத்த தடை வருமா?

அமெரிக்க டாலர்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான தடை விதிக்கப்படும்பட்சத்தில், மேற்கத்திய நாடுகளுடன், டாலர்களை பயன்படுத்தி ரஷ்யா பரிவர்த்தனை செய்ய முடியாது. அப்படி பரிவர்த்தனை செய்தால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

இதனால் ரஷ்ய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் டாலர்களை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. அதனால் அந்தத் துறை கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் மறுபுறத்தில், இது நடந்தால் ஐரோப்பிய நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படும்.

வங்கிகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டால் என்ன ஆகும் ?

அமெரிக்கா ரஷ்ய வங்கிகளுக்கு தடைகளை விதித்தால், ரஷ்யாவால் சர்வதேச பரிவர்த்தனை எதையும் மேற்கொள்ள முடியாது. இதை ஈடுகட்டும் விதமாக ரஷ்யா வங்கிகளுக்கு நிதியுதவி செய்ய நேரிடும். பணவீக்கம், வருவாய் குறைவு உள்ளிட்ட பல்வேறு நிதி சுமைகளை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

மறுபுறத்தில், வங்கிகள் மீது தடை விதிக்கப்பட்டால், ரஷ்ய வங்கிகளில் முதலீடு செய்து உள்ள மேற்கத்திய நாடுகளும் இதனால் பாதிக்கப்படும். ஆனால் ரஷ்யா தற்போது மத்திய வங்கியில் 63000 கோடி அமெரிக்க டாலர் நிதி வைத்துள்ளதால், வங்கிகள் மீது தடை விதிக்கப்பட்டால் அது பெரிய அளவில் ரஷ்யாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

உயர் தொழில்நுட்பம் மீதான தடை

மேற்கத்திய நாடுகள் உயர் தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதி மீதான தடையை வீதிக்கலாம்

உதாரணமாக, அமெரிக்கா, தேர் மற்றும் செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் செமி-கண்டக்டர் மைக்ரோசிப்களை ரஷ்யாவிற்கு விற்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கலாம். இது ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் வான்தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதை விற்கக் கூடியது மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களும் இதனால் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகும்.

ஆற்றல் வர்த்தகத்தில் தடை ஏற்பட்டால் என்ன ஆகும்?

ரஷ்யப் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆற்றல் உற்பத்தி மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மிக முக்கியமான எண்ணெய்மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு உள்ளிட்டவற்றை பிற நாடுகள் வாங்குவதற்கான தடையை ஏற்படுத்தலாம்.

ஆனால் , இதனின் விளைவை ஐரோப்பிய நாடுகளும் சந்திக்கும். குறிப்பாக ஜெர்மனியின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆற்றலுக்கான தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளின் தற்போதைய நிலை என்ன?

மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யா மீது என்ன மாதிரியான தடைகளை விதிக்கலாம் என்பதில் தெளிவாக உள்ளன. ஆனால் போடப்படும் தடைகள் பெரிய அளவில் இல்லை என்றால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்ற கேள்வி எழுகிறது.

மேற்கத்திய நாடுகள் ஒற்றுமையாக இல்லை எனவும், அந்நாடுகளுக்கு இத்தகைய சூழல்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை என்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஹங்கேரி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு ரஷ்யா மீது பெரிய தடைகளை விதிக்க விரும்பாமல் போகலாம்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »