Press "Enter" to skip to content

யுக்ரேன் சிக்கல்: தலைநகர் கீஃப் அருகே ரஷ்யப் படைகள் கடும் யுத்தம் – முன்னாள் அணு உலை செர்னோபிள் வீழ்ந்தது

பட மூலாதாரம், Reuters

யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் அருகே முழு மூச்சுடன் தாக்குதலை நடத்தி வருகிறது. யுக்ரேன் ராணுவமும் ரஷ்யப் படைகளை விரட்டியடிக்க கடுமையாக முயன்று வருகிறது.

கீவ் புறநகர்ப் பகுதியில் உள்ள விமான தளம் ஒன்றில் கடும் போர் நடந்துவருகிறது. இந்த தளத்தை ரஷ்யா கைப்பற்றினால், தலைநகரைக் கைப்பற்றுவதற்கான முகாமாக இந்த இடம் மாறக்கூடும்.

கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து தாக்கிய பிறகு, யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல் பல முனைகளில் இருந்து தொடர்கிறது.

டஜன் கணக்கானவர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடியிருப்பதாகவும் கூறுகிறது யுக்ரேன்.

தொலைபேசியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் போர் பிரகடனம் செய்தார். இதையடுத்து, நேற்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. இதில் எந்த நாடு தலையிட்டாலும், அவர்கள் முன்னெப்போதும் கண்டிராத பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார் புதின்.

line
line

முதலில் யுக்ரேன் நகரங்கள் மீதும், ராணுவ தளங்கள் மீதும், ஏவுகனைகள், போர் விமானங்கள் அலை அலையாகத் தாக்குதல் நடத்தின. இதையடுத்து டாங்குகள் நீண்ட ரஷ்ய – யுக்ரேன் எல்லையைக் கடந்து யுக்ரேனுக்குள் நுழைந்தன.

ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து அழும் யுக்ரேன் பெண்.

பட மூலாதாரம், EPA

தொடர்ந்து போராடப்போவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி சூளுரைத்திருக்கிறார். “புதிய இரும்புத் திரை” வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், மேற்கு திசையிலேயே நாடு நீடித்திருப்பதை உறுதி செய்வதே தமது பணி என்றும் அவர் கூறினார். யுக்ரேனின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து முன்பதிவு படையினரும், கட்டாயமாக படைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சண்டைக்கு அழைக்கப்படவேண்டும் என்று ஸெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு ஆயுதத்தைத் தாங்க வலியுமையுள்ள ஒவ்வொருவரும் ரஷ்யாவை விரட்டியடிப்பதற்கான முயற்சியில் இணைந்துகொள்ளவேண்டும் என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று மாலை பொழுது சாய்ந்த நிலையில், தலைநகர் மீது ரஷ்யத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் அதிகரித்தது. நாள் முழுவதும் துப்பாக்கிச் சண்டையும், குண்டுவெடிப்புகளும் தலைநகரில் கேட்டுக்கொண்டே இருந்தது. “நாசக்காரர்கள்” கீவ் நகரில் நுழைந்துவிட்டதாக அதிபரை மேற்கோள் காட்டி யுக்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வீழ்ந்தது செர்னோபிள்

நகரை கட்டுப்பாட்டில் எடுக்க, பெரிய அளவில் படைகளை ரஷ்யா குவித்துவருவதாக மேற்கத்திய உளவு நிறுவனங்களின் அதிகாரிகள் கூறினர்.

படையெடுப்புக்குக் கடுமையான எதிர்ப்பைக் காட்டி யுக்ரேன் படைகள் போரிட்டுவருவதாகவும், ஆனால், இரண்டு தரப்பிலும் கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியேறும் மக்கள்

ஏராளமான பொதுமக்கள் மால்டோவா, ரொமானியா, போலந்து, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இது பொதுமக்கள் மீதான இந்தப் படையெடுப்பின் பாதிப்பை வெளிக்காட்டுவதாக உள்ளது.

ஒரு லட்சம் பேர் ஏற்கெனவே தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர் என்கிறது ஐ.நா. மதிப்பீடு.

“எங்களுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓர் இடத்துக்கு நாங்கள் போகிறோம். பாதுகாப்பாக வெளியேற முடியும் என்று நம்புகிறோம்,” என ஸ்வெட்லானா என்கிற பெண் பிபிசியிடம் கூறினார்.

இந்த தாக்குதலால் ஐரோப்பாவில் பெரிய அளவில் அகதிகள் சிக்கல் ஏற்படும் என்று மனித உரிமை அமைப்புகள் இந்த தாக்குதல் தொடங்கும் முன்பே தெரிவித்திருந்தன.

line
line

கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட கீவ் நகரில் எச்சரிக்கை சைரன்கள் அலறியபடியே இருக்கின்றன. நகரைவிட்டு வெளியேறும் வாகனங்கள் நீண்ட வரிசையில் செல்கின்றன.

மக்கள் இரவு பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களிலும், பாதாள தளங்களிலும், வெடிகுண்டு பாதுகாப்பு தளங்களிலும் இரவில் அடைக்கலம் புகுந்தனர்.

மேற்கு நாடுகள் எதிர்வினை

நிலம், நீர், வானம் என மூன்று முனைகளிலும் நாள் முழுதும் நடந்த முழு வீச்சிலான தாக்குதலின் வேகத்தைப் பார்த்து மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கப் போவதாகவும் ஆனால், படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோங் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். கடந்த சில நாள்களில் மேற்கத்திய நாடு ஒன்றின் தலைவரோடு புதின் பேசுவது இதுவே முதல் முறை.

உடனடியாக தாக்குதலை நிறுத்தவேண்டும் என்றும், கடும் தடைகள் விதிக்கப்படும் என்றும் மக்ரோங் கூறியதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. ஆனால், இரு தலைவர்களும் “காத்திரமான, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தை” செய்துகொண்டதாக ரஷ்ய அதிபர் மாளிகை கூறுகிறது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »