Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?

பட மூலாதாரம், Reuters

யுக்ரேன் மீது படையெடுப்பைத் தொடங்கிய ரஷ்யா மீது கடுமையான தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன.

ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதற்கும், அதிபர் விளாதிமிர் புதினை ராணுவ நடவடிக்கையை நிறுத்தச்செய்வதற்கும் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தடைகள் என்றால் என்ன?

‘தடைகள்’ என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது விதிக்கும் தண்டனையாகும். பெரும்பாலும் இது ஆக்ரோஷமாக செயல்படுவதை அல்லது சர்வதேச சட்டத்தை மீறுவதை நிறுத்துவதற்காக செய்யப்படுகிறது.

தடைகள் பெரும்பாலும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மீது அல்லது முன்னணி அரசியல்வாதிகள் போன்ற தனிப்பட்ட குடிமக்களின் நிதி நிலைமை மீது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுபவை. பயணத் தடைகள் மற்றும் ஆயுதத் தடைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

அதாவது, போர் தொடுப்பதற்கு ஒரு படி கீழே, ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது பயன்படுத்தக்கூடிய கடுமையான நடவடிக்கை இது.

மேற்கத்திய நாடுகள் என்ன தடைகளை விதிக்கின்றன?

ரஷ்யா மீது பல தொடர்ச்சியான தடைகளை விதிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அவர் விதிப்பதாக கூறிய தடைகள் எவை எவை?

• எல்லா முக்கிய ரஷ்ய வங்கிகளின் சொத்துக்களும் முடக்கப்படும். அவை பிரிட்டனின் நிதி அமைப்பில் இருந்து விலக்கப்படும். VTB வங்கியின் முழுமையான, உடனடி முடக்கம் இதில் அடங்கும்

• முக்கிய ரஷ்ய நிறுவனங்களும், ரஷ்ய அரசும் பிரிட்டன் சந்தைகளில் நிதி திரட்டுவதை அல்லது கடன் வாங்குவதை நிறுத்துவதற்கான சட்டங்கள் பிறப்பிக்கப்படும்.

• 100 புதிய தனி நபர்களின் நிறுவனங்களின் சொத்து முடக்கம்

• ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இங்கிலாந்தில் தடை செய்யப்படும்

• ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய இரட்டை உபயோகப் பொருட்களுக்கான ஏற்றுமதி உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்.

*உயர் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்களின் ஏற்றுமதி நிறுத்தம்.

• பிரிட்டன் வங்கிக் கணக்குகளில் ரஷ்யர்கள் செய்யக்கூடிய வைப்புத்தொகைக்கு வரம்பு விதிக்கப்படுதல்.

ஆகியவற்றுடன், லண்டனில் உள்ள ரஷ்ய செல்வந்தர்கள் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது” என்றும் “யுக்ரேன் மீதான தாக்குதலில் அளித்த உதவிக்காக பெலாரூஸ் மீதும் இதேபோன்ற பொருளாதாரத்தடைகள் விரிவுபடுத்தப்படும் என்றும்” அவர் கூறினார்.

அமெரிக்கா விதித்த தடைகள்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டார். ரஷ்யா இந்தப் போரைத் தேர்வு செய்தால் அதன் விளைவுகளை அது சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா விதித்த தடைகளின் பட்டியல்:

• நான்கு பெரிய ரஷ்ய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்படும். அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகளிலிருந்து துண்டிக்கப்படும்

• ரஷ்ய அதிபர் மாளிகையுடன் தொடர்புள்ள கூடுதல் உயரடுக்குத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மீதும் தடைகள் விதிக்கப்படுகின்றன

• அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் உயர் தொழில்நுட்ப இறக்குமதியை பாதியாக குறைக்கும். நாட்டின் ராணுவத்தை நவீனமயமாக்குவதையும், கப்பல்கள் மற்றும் விமானங்களை உருவாக்குவதையும், விண்வெளியில் முன்னேறுவதையும் அது தடுக்கும்.

இதற்கிடையில், “பெரிய, கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தும் பொருளாதாரத் தடைகளை ரஷ்யாவிற்கு எதிராக விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டது.

“இந்தத் தடைகள், நிதித் துறை, எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகள், இரட்டை பயன்பாட்டு பொருட்கள் , ஏற்றுமதி கட்டுப்பாடுகள் , ஏற்றுமதி நிதி, விசா கொள்கை, ரஷ்ய தனி நபர்களின் கூடுதல் பட்டியல்கள் மற்றும் புதிய பட்டியல் அளவுகோல்களை உள்ளடக்கியது” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து வரும் Nord Stream 2 பைப்லைன் செயல்பாட்டுக்கு வருவதை ஜெர்மனி தடுத்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

கிழக்கு யுக்ரேனின் இரண்டு பகுதிகளின் விடுதலையை ரஷ்யா அங்கீகரித்த பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள் ஏற்கனவே அதன்மீது ஓரளவுக்கு தடைகளை விதித்திருந்தன.

இந்தத்தடைகள் ரஷ்ய வங்கிகள் மற்றும் தனி நபர்களைக் குறிவைத்து, நிதிச் சந்தைகளில் இருந்து ரஷ்யாவை துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தன.

ரஷ்யா வேறு என்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

மேற்கத்திய நாடுகள் கடுமையான தடைகளை வரிசைப்படுத்துகின்றன. பின்வரும் தடைகள் விதிக்கப்படக்கூடும்:

ஸ்விஃப்ட் சேவையில் இருந்து ரஷ்யாவை விலக்குவது.

நிதி தகவல் சேவையான ஸ்விஃப்டில் இருந்து ரஷ்யாவை விலக்குவது ஒரு தடை நடவடிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என யுக்ரேன் வலியுறுத்தியுள்ளது.

ஸ்விஃப்ட் விரைவான பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த ஸ்விஃப்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது.

ரஷ்யாவை அதிலிருந்து தடை செய்வதால் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவது தாமதமாகும்.

அமெரிக்காவின் நெருக்குதலின் கீழ் 2012ல் இரான் ஸ்விஃப்ட் சேவையில் இருந்து தடை செய்யப்பட்டபோது, இரான் தனது எண்ணெய் ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட பாதியையும், வெளிநாட்டு வர்த்தகத்தில் 30 சதவிகிதத்தையும் இழந்தது.

ரஷ்யா ஸ்விஃப்ட்டில் இருந்து தடுக்கப்பட்டால், ஐரோப்பாவுக்கு இனி எண்ணெய் மற்றும் எரிவாயுவை அது அனுப்பாது என்று ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா மற்ற வாடிக்கையாளர்களின் மீது கவனம் செலுத்தலாம். பிற அமைப்புகள் மூலம் பணம் பெறலாம். உதாரணமாக சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையிலான கட்டண முறையை அது பயன்படுத்தலாம்.

ரஷ்யாவை ஸ்விஃப்ட் சேவையில் இருந்து வெளியேற்றும் சாத்தியக்கூறு இருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறுகிறார்.

இருப்பினும், இது “இப்போது” முன்மொழியப்படவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எடுக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகிறார்.

ரஷ்ய எரிவாயு, எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்பது

ரஷ்யாவின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கும், ஏற்றுமதி வருவாயில் பாதியும் எண்ணெய், எரிவாயு மூலம் கிடைக்கிறது.

எனவே அதன் எண்ணெய் – எரிவாயுவை வாங்க மறுப்பது மிகவும் கடுமையான தடையாக இருக்கும்.

இருப்பினும் அதை நம்பியிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கச்சா எண்ணெய் தேவையில் 26 சதவிகிதத்தையும், எரிவாயு தேவையில் 38 சதவிகிதத்தையும் ரஷ்யா வழங்குகிறது. எரிவாயு விநியோகத்தில் குறுகியகால நிறுத்தம் கூட எரிபொருட்களின் விலைகளை அங்கே அதிகரிக்கும்.

பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்ட ஐந்து வங்கிகளில் ரோசியா வங்கியும் ஒன்று

பட மூலாதாரம், TASS via Getty Images

ரஷ்யாவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்துவது

டாலர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் இருந்து ரஷ்யாவை அமெரிக்கா தடை செய்யக்கூடும். அவ்வாறு செய்ய அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். ரஷ்ய நிறுவனங்கள் பவுண்டு பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகவும் பிரிட்டன் மிரட்டியுள்ளது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு அரைக்கடத்தி நுண்சில்லு (செமிகண்டக்டர் மைக்ரோசிப்கள்) போன்ற உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதையும் தடை செய்யக்கூடும்.

இது ரஷ்யாவின் பாதுகாப்பு , விண்வெளித் துறை மற்றும் தேர் உற்பத்தி போன்ற தொழில்களை பாதிக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகியவை ஏற்கனவே சில ரஷ்ய வங்கிகளை தடை செய்துள்ளன.

இது போல மேலும் பல வங்கிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டால், ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு சரியும். அந்த நாடு தீவிர நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

ரஷ்ய அரசு பெருமளவு நிதியளித்து வங்கி அமைப்பை காப்பாற்ற வேண்டியிருக்கும். இருப்பினும், பொருளாதார அதிர்ச்சிகளை சமாளிக்க 630 பில்லியன் டாலர்கள் (464 பில்லியன் பவுண்டுகள்) கையிருப்பை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

லண்டன் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள ரஷ்ய பணத்திற்கு எதிராக பிரிடிஷ் அரசு மேலும் நடவடிக்கை எடுக்கலாம். மக்கள் தங்கள் பணம் எங்கிருந்து வந்தது என்ற விளக்கத்தை அளிக்கச்செய்யும் “விவரிக்கப்படாத பண வாங்குதல்களை” பயன்படுத்துவதாக அது கூறுகிறது.

ஆனால் இவற்றில் ஒரு சில வாங்குதல்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.

தடைகளுக்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கக்கூடிய விலை

ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களின் சொந்த பொருளாதாரத்தையும் பாதிக்கலாம்.

ரஷ்ய வங்கித் துறையைத் தாக்குவது ரஷ்யாவில் வணிகம் செய்யும் அல்லது அதன் வங்கிகளில் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்களை பாதிக்கும்.

உயர் தொழில்நுட்ப பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை பல மேற்கத்திய உற்பத்தியாளர்களை பாதிக்கும்.

மிக முக்கியமாக, ஐரோப்பா தனது இயற்கை எரிவாயுவில் 40 சதவிகிதத்திற்கு ரஷ்யாவை நம்பியுள்ளது.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தனது சொந்த பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் அச்சுறுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை குறைப்பது அல்லது நிறுத்துவது இதில் அடங்கும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »