Press "Enter" to skip to content

அடுத்து மற்ற நாடுகளையும் ரஷ்யா தாக்குமா? – யுக்ரேன் படையெடுப்பில் அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Reuters

யுக்ரேன் ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்தச் சூழலில் அடுத்து என்ன நடக்கும்?

ரஷ்யாவிற்கான மிகப்பெரிய பரிசு யுக்ரேன் தலைநகர் கீயவும் செலன்ஸ்கியின் அரசாங்கமும்தான். தலைநகரில் ஏற்கனவே சண்டை நடைபெற்று வருகிறது.

மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தனது அண்டை நாட்டைக் கைபற்றி அதை மீண்டும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகக் கொண்டு வருவதற்கான தனது பாதுகாப்புக் குழு தலைவர்களின் திட்டங்களை அதிபர் புதின் தெளிவாக பல மாதங்கள் தனிமையில், ஆய்வு செய்தார்.

பரந்த அளவில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் இருந்து, சேணேவிகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைப் பயன்படுத்தி, காலாட்படையும் டேங்கர்களும் நுழையும் முன்னரே எதிர்ப்பைக் குறைப்பதற்கான, மும்முனைத் தாக்குதலைக் கொண்ட படையெடுப்பு திட்டம் இது. ஸெலன்ஸ்கி அரசு விரைவில் உடன்பட்டு, சரணடைய வேண்டுமெனவும் அதற்குப் பதிலாக ரஷ்யாவின் பொம்மை அரசாங்கம் வர வேண்டுமென்றும் புதின் விரும்புவார்.

தேசிய அளவிலான எதிர்ப்பின் நீட்சியாக, நகர்ப்புற பிரசாரம் வேகம் எடுப்பதற்கான தூண்டுதல் உருவாவதைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.

சர்வதேச கேந்திரிய ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பிரிக் பென் பேரி, “குறுகிய காலத்தில், கீயவை வெற்றிகரமாகக் கைப்பற்றுவது, ரஷ்யாவுக்கு கேந்திரிய தாக்கத்துடன் கூடிய ராணுவ மற்றும் அரசியல் வெற்றியாக இருக்கும்.

ஆனால், ஒருவேளை நாட்டின் மேற்குப் பகுதியில் ஒரு புதிய அரசாங்க தலைமையகத்தை அமைப்பதற்கான திட்டங்களை யுக்ரேன் செய்திருந்தால், அது யுக்ரேனிய அரசாங்கத்தை அழிக்காமல் இருக்கலாம்,” என்று கூறினார்

ரஷ்யாவின் படையெடுப்பு முழுமையாக திட்டமிடப்பட்டவாறு நடக்கவில்லை என்று பிரிட்டன் பாதுகாப்பு உளவுத் துறை கூறுகிறது. மேலும், நூற்றுக்கணக்கான ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் தரப்பிலிருந்து எதிர்ப்பு கடுமையாக இருப்பதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு உளவுத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. ரஷ்யாவின் படைகள் யுக்ரேனை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. மேலும், யுக்ரேனின் ராணுவத் தலைமை குறித்தும் யுக்ரேன் படைகள் எத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது குறித்த கேள்விகளும் எழுகின்றன.

யுக்ரேனின் எதிர்ப்பு

சீருடை அணிந்த ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளில் சேர, கூடுதலாக நாடு தழுவிய அளவில் போரில் ஈடுபடும் வயதிலுள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, 18,000 தானியங்கி துப்பாக்கிகளை கீயவ் குடிமக்களுக்கு வழங்கியதன் மூலம் ஏற்கெனவே எதிர்ப்பைத் தொடங்கிவிட்டது யுக்ரேன்.

புதினின் அடுத்த இலக்காக தாங்கள் இருக்கலாம் என்று அஞ்சும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தங்கள் எல்லைகளுக்கு அருகிலுள்ள ரஷ்ய படைகளின் நடவடிக்கைகளைப் பதற்றத்தோடு கவனித்து வருகின்றன. எஸ்தோனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளரான கஸ்தி சால்ம், யுக்ரேனுக்கு அதிக ராணுவ உதவிகளை வழங்க முயல்பவர்களில் ஒருவர்.

அவர், “நாம் அவர்களுக்கு ஜாவ்லின் டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகள், போர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற ஆயுதங்களை வழங்க வேண்டும். ஒவ்வொரு நேட்டோ நாடும் அவர்களுக்கு உதவ வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

40 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த தேசத்தை அடி பணிய வைக்க ரஷ்யா எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறதோ, அவ்வளவு அதிகமான பிரச்னைகளை அது சந்திக்க நேரிடும்.

ஆனால், தனது சொந்த நாட்டில் எதிர்ப்புகளை நசுக்கிய அதிபர் புதின், பெலாரஸில் உள்ள அவருடைய எதேச்சதிகார அண்டை நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு நடந்த போராட்டங்களை எப்படி திறம்பட நசுக்கியது என்பதைக் கவனத்தில் எடுத்திருப்பார். போராட்டக்காரர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து சிறையில் அடைத்தனர். பலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர், காவலில் பலர் மோசமாக நடத்தப்பட்டனர். இது மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தடுத்தது.

“ஷின்ஜியாங்கில் சீனா பயன்படுத்திய கண்காணிப்பு கருவியின் ரஷ்ய பதிப்பைப் பயன்படுத்தி ரஷ்யா மிகவும் கடுமையான அடக்குமுறையை முன்னெடுக்கும். கிளர்ச்சிக்கு உதவும் நாட்டிற்கு பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தல்கள் இருக்கும்,” என்று பிரிக் பேரி கூறுகிறார்.

நேட்டோ எங்கே?

நேட்டோ வேண்டுமென்றே யுக்ரேனுக்குப் படைகளை அனுப்பாமல் இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்று கீயவில் இருந்து ஆற்றொணா வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், யுக்ரேனுக்கு படைகளை அனுப்புவதை நேட்டோ திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

யுக்ரேன் அந்தக் கூட்டணியில் உறுப்பினராக இல்லாததால், நேட்டோ அப்பட்டமாக, ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல விரும்பவில்லை அதற்குக் காரணம்.

நேட்டோ படைகள்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் படையெடுப்பு யுக்ரேனில் நீண்டகால ஆக்கிரமிப்பாக மாறினால், 1980-களில் அமெரிக்கா, ஆப்கன் முஹாஜிதீன்களை ஆதரித்ததைப் போல், மேற்கத்திய நாடுகள் யுக்ரேனிய கிளர்ச்சிக்கு ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். புதின் ஏதாவது ஒரு வடிவத்தில் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதால், இதில் ஆபத்து இல்லாமல் இல்லை.

இதற்கிடையில், நேட்டோ தனது கிழக்கு எல்லைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. இங்குள்ள முரண் என்னவெனில் நேட்டோவின் படைகளை மேலும் மேற்கு நோக்கி நகர்த்த வேண்டும் என்று ரஷ்யா கோரி வரும் சூழலில், யுக்ரேன் மீதான புதினின் படையெடுப்பு அதற்கு நேர்மாறாகச் செய்துள்ளது.

“இது ஐரோப்பா விழித்துக் கொள்வதற்கான மிகப்பெரிய அழைப்பு,” என்கிறார் அமைச்சரும் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழு தலைவருமான டொபையாஸ் எல்வுட். மேலும், “30 ஆண்டுக் கால அமைதி என்பது துரதிர்ஷ்டவசமாக ஒரு விதியாக இல்லை. ஒரு கொடுங்கோலனைக் கையாள்வதில் நாம் நம்முடைய திட்டமிடலை வேகப்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.

நிலைமை இதைவிட மோசமாக முடியுமா?

யுக்ரேனியர்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே மிகவும் மோசமடைந்துவிட்டது.

8 ஆண்டுகளாக தங்கள் நாட்டின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுடன் பிரிந்து செல்லும் கிளர்ச்சியை எதிர்த்துப் போராடிய பின்னர், அணு ஆயுதம் ஏந்திய அந்த மாபெரும் அண்டை நாடு, வெடிகுண்டுகளையும் ராக்கெட்டுகளையும் வீசுவதை அவர்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

1991-ல் தங்கள் சொந்த அணு ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு, ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு பெருமளவில் வாக்களித்த யுக்ரேன், தற்போது ரஷ்யா முழு நாட்டையும் அடிபணியச் செய்துவிட்டால் காலச் சக்கரத்தில் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் ஏற்படும்.

இப்போது, பரவலாக உலகத் தலைவர்களைத் தொந்தரவு செய்யும் ஒரு கேள்வியாக, “யுக்ரேனுக்குப் பிறகு அடுத்து என்ன செய்ய அதிபர் புதின் நினைத்துக் கொண்டிருக்கிறார்?” என்பதுதான் உள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நேட்டோ பாதுகாப்பு தலைவர்கள், ஜூலை 2021-ல் அவருடைய நீண்ட உரையை மறுபரிசீலனை செய்து, போலந்து, லித்துவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியா போன்ற நாடுகள் மீதும் இதேபோன்ற நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து சிந்திக்காமல் இருக்க, நேட்டோவின் கிழக்கு எல்லைகளை அவசரமாக வலுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.

புதின் அதைச் செய்வாரா?

“துணை-தொடக்கநிலை போரின் ஒரு பகுதியாக பிரச்னையைத் தூண்டுவதற்கு சீருடை அணியாத படைகளை அனுப்புவது குறித்து புதினுக்கு ஒரு திட்டம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அது பால்கனில் கிளம்பிவிடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்,” என்று டொபையாஸ் எல்வுட் கூறுகிறார்.

நேட்டோ நிச்சயமாக அதற்கு வாய்ப்புள்ளதா என்பதைக் காத்திருந்து பார்க்கத் தயாராக இல்லை. அதோடு 100 போர் விமானங்களை முழு எச்சரிக்கையுடன் வைத்துள்ளது.

“பிரிட்டன் தலைமையிலான படை (எஸ்தோனியாவில்) உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த அணுசக்தி நாட்டைத் தடுக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட நேட்டோவின் அனைத்து வலிமையான நாடுகளயும் தூண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

நேட்டோ நாட்டிற்குள் ரஷ்ய ராணுவ ஊடுருவல், நேட்டோவும் ரஷ்யாவும் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடும் சமீப காலம் வரை நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. மேற்கத்திய தலைவர்கள் இப்போது ஒருங்கிணைந்து கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு தெளிவான செய்தியைக் கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »