Press "Enter" to skip to content

ரஷ்ய படையெடுப்பிலிருந்து யுக்ரேன் தன்னை பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு கடினம்?

  • ஜொநாதன் பீல்
  • பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி ந்யூஸ்

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், யுக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்வது எவ்வளவு கடினமாக இருக்கும்? ரஷ்யாவின் ஆயுதப் படைகளில் அதிபர் புதின் செய்துள்ள குறிப்பிடத்தக்க முதலீடு மற்றும் நவீனமயமாக்கலுக்குப் பிறகு அதன் வலிமை, யுக்ரேன் படையைக்காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.

“யுக்ரேனியர்கள் மிகவும் கடினமான சூழலில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவர் ஜாக் வாட்லிங் கூறுகிறார். அவர் சமீபத்தில்தான் யுக்ரேனில் இருந்து திரும்பி வந்துள்ளார். நாட்டின் ராணுவத் தலைவர்கள் இப்போது “மிகக் கடினமான தேர்வுகளை” எதிர்கொள்வதாகக் அவர் கூறுகிறார்.

யுக்ரேனின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்து 90 ஆயிரம் துருப்புகளை நிறுத்தியுள்ளதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் . யுக்ரேனின் முழு ராணுவத்தின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 600 மட்டுமே.

ரஷ்ய படைகள் ஏற்கனவே பல திசைகளில் இருந்து எல்லையை கடந்து வருகின்றன.

வடக்கில் பெலாரூஸ் முதல் தெற்கே கிரைமியா வரை,யுக்ரேன் தனது எல்லையின் ஆயிரக்கணக்கான மைல்களை பாதுகாப்பது கடினமாக இருக்கும்.யுக்ரேனை ஒரு கடிகார முகமாக நீங்கள் கற்பனை செய்தால், ரஷ்யர்கள் 10 மணி முதல் 7 மணி வரை உள்ள இடங்களில் இருந்து தாக்குதல்களை நடத்தலாம்.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் குழல்டஜிக் ஸ்டடீஸ் (ஐஐஎஸ்எஸ்) மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவப் பிரிகேடியருமான பென் பாரி, இது ” தற்காப்பு பணியில் உள்ளவருக்கு மிகவும் கடினமான நிலை” என்கிறார்.

அதோடு யுக்ரேன் பல திசைகளில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் படைகள் “ஆங்காங்கே மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளன,” என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) யின் ஜாக் வாட்லிங் கூறுகிறார்.

வானத்தில் ரஷ்யாவின் ஆதிக்கம்

ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளுக்கு இடையிலான உண்மையான ஏற்றத்தாழ்வு வானில் தெரியும்.

யுக்ரேன் எல்லையில், ரஷ்யாவிடம் இருக்கும் 300 போர் விமானங்களுடன் ஒப்பிடும்போது யுக்ரேனிடம் 105 போர் விமானங்களே உள்ளன என்று வாட்லிங் கூறுகிறார். ரஷ்ய படையினர், “மிக விரைவில் வானில் ஆதிக்கம் செலுத்தமுடியும்” என்று அவர் கணித்துள்ளார்.

S-400 ஏவுகணைகள் போன்ற ரஷ்யாவின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளும் அதன் படைகளுக்கு கூடுதல் பலனை தருகின்றன. இதற்கு நேர்மாறாக, யுக்ரேனில் பழைய மற்றும் குறைந்த அளவிலான வான் பாதுகாப்பு அமைப்புகளே உள்ளன.

இஸ்ரேல் பல திசைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்ற உதாரணத்தை தருகிறார் வாட்லிங். ஆனால் விமானப்படையின் மேன்மை காரணமாகவே அவ்வாறு செய்ய முடிந்தது என்றும் அவர் கூறுகிறார். அது யுக்ரேனிடம் இல்லாத ஒன்று.

கார்கிவ் அருகே உள்ள சுஹுயேவ் ராணுவ விமான தளம் ரஷ்யாவால் முதலில் தாக்கப்பட்ட இலக்குகளில் ஒன்றாகும்

பட மூலாதாரம், Getty Images

ஒருங்கிணைந்த போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கவல்ல ராக்கெட் பீரங்கிகளை ஒருங்கிணைத்து “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பை” எதிராளிக்கு ஏற்படுத்தக்கூடிய செயல்முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்று பென் பாரி கூறுகிறார்.

யுக்ரேனின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், வெடிமருந்து கிடங்குகள், விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து தாக்க ரஷ்யர்களுக்கு இது உதவுகிறது.

தலைநகர் கீயவ் அருகே உள்ள இலக்குகள் மீது நிகழ்ந்த க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களுடன் அது ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

யுக்ரேனால் தாக்குப்பிடிக்க முடியாத இஸ்கேண்டர் க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் போன்ற நவீன ஆயுதங்கள் மற்றும் திறன்கள் அடங்கிய மிக முக்கியமான ஆயுதக் களஞ்சியம் ரஷ்யாவிடம் இருப்பதாக வாட்லிங் கூறுகிறார்.

யுக்ரேன் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடமிருந்து “தாக்குதல் உதவி” பொருட்களைப் பெற்றுள்ளது. ஆனால் இவை பெரும்பாலும் குறுகிய தூர, வானில் இருந்து வான் இலக்கை தாக்கவல்ல ஏவுகணைகள் மற்றும் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகும்.

சுருக்கமாகச்சொன்னால், யுக்ரேனை ஒப்பிடும்போது ரஷ்யாவிடம் உள்ள ஆயுத வலிமையும் அதிகம், தாக்கக்கூடிய தூரமும் அதிகம்.

ரஷ்யாவின் வான் மேன்மை மற்றும் நீண்ட தூர ஆயுதங்கள் காரணமாக யுக்ரேனின் படைகள் விரைவில் பின்னுக்குத் தள்ளப்படும்.

யுக்ரேனின் படைகள் வேறு எந்த திசையிலிருந்தும் ரஷ்ய முன்னேற்றத்தை எதிர்கொள்ள திட்டமிடல் மற்றும் இடமாற்றம் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் இருந்து தடுக்கப்படலாம் என்றும் வாட்லிங் நம்புகிறார்.

யுக்ரேனின் சிறந்த பயிற்சி பெற்ற மற்றும் திறன்பெற்ற ராணுவப்பிரிவுகள் நாட்டின் கிழக்கில் உள்ளன. அதாவது லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் 2014 முதல் அவை சண்டையிட்டு வருகின்றன.

ரஷ்யா அவர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்யலாம் என்ற உண்மையான கவலை உள்ளது என்று மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்தபோது இருந்ததை விட யுக்ரேனின் ஆயுதப் படைகள் தற்போது சிறந்த பயிற்சி மற்றும் ஆயுதங்களைக் கொண்டுள்ளன.

நாட்டின் கிழக்கில் ரஷ்ய ஆதரவைப் பெற்ற பிரிவினைவாதிகளுடனான சண்டை மூலம் படைப்பிரிவுகளும், வீரர்களும் பயனுள்ள போர் அனுபவத்தைப் பெற்றுள்ளதாக பாரி கூறுகிறார்.

ஆனால் அவர்கள் முக்கியமாக பதுங்கு குழிகளில் மறைந்திருந்து சண்டையிடுவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளதால், “சூழ்ச்சிப் போர்” நடைமுறைகள் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மொபைல் ராக்கெட், ஏவுகணை செலுத்து வாகனம் மற்றும் வான் பாதுகாப்பு மூலம் ரஷ்யாவின் படைகள் விரைவாக செல்ல முடிகிறது. கிரைமியா மற்றும் சிரியா மீதான படையெடுப்பு மூலம் ரஷ்யாவின் போரை தாக்குப்பிடிக்கும் வலிமை அதிகரித்துள்ளது.

நகரங்களில் சண்டை

மோதல் யுக்ரேனின் நகரங்களுக்குள் நுழைந்தால், அது யுக்ரேனின் படைகளுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்.

தயார் நிலையில் இருக்கும் ஒரு தற்காப்பாளர் நகர்புற சண்டையை எதிரிகளுக்கு கடினமாகவும் இரத்தக்களறியாகவும் மாற்ற முடியும். இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட் மற்றும் சமீபத்தில் ஈராக்கில் உள்ள மோசூலில் நடந்த சண்டை இதற்கான உதாரணங்கள்.

Caption- ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த பீரங்கித் தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் தனது சேதமடைந்த வீட்டை சுத்தம் செய்கிறார்.

பட மூலாதாரம், ANADOLU AGENCY VIA GETTY IMAGES

ரஷ்யப் படைகள் ஆரம்பத்தில் நகரங்களுக்கு செல்லாமல் இருக்க முயற்சி செய்யக்கூடும் என்று பென் பாரி நம்புகிறார். ஆனால் ரஷ்யர்கள் நகர்ப்புறப் போரை, குறிப்பாக கீவ் நகருக்குள் செல்வதை தவிர்க்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

யுக்ரேன் தனது நகரங்களை சரியாக பாதுகாக்க முடிந்தால், அவர்கள் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்கக்கூடும் என்று ஜேக் வாட்லிங் கூறுகிறார்.

பிரிட்டன் வழங்கியுள்ள இலகுரக பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (NLAW), நெருக்கமான போரில் உதவக்கூடும். யுக்ரேனியப் படைகள் கட்டடங்களை கவசமாகப் பயன்படுத்தி இந்தப்போரில் ஈடுபடலாம். கணக்கு தெரியாத எண்ணிக்கையிலான பொதுமக்களும் ஆயுதங்களை கையில் எடுக்கலாம்.

சிறுநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை கட்டுப்படுத்த ரஷ்யா வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகளை மட்டுமே நம்ப முடியாது.

“ரஷ்யாவின் முகவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஏற்கனவே அந்தப்பகுதிகளில் உள்ளனர். கீவ் நகரில் அரசை சீர்குலைக்கும் பல முயற்சிகளும், மரபுக்கு புறம்பான நடவடிக்கைகளும் இருக்கும்,” என்று வாட்லிங் கூறுகிறார். ரஷ்யா, நகரங்களைச் சுற்றி வளைத்து, நீண்ட தூர பீரங்கிகளைப் பயன்படுத்தி எதிர்ப்பு காணப்படும் இடங்களை குறிவைக்க முயற்சிக்கும். பின்னர் “சிவில் சமூகத் தலைவர்களைக் கொல்ல” சிறப்புப் படைகளையும் முகவர்களையும் பயன்படுத்த முயற்சிக்கும்.

யுக்ரேன் இப்போது தன்னை தற்காத்துக்கொள்ள போராடுகிறது.

இது கடந்த எட்டு ஆண்டுகளாக கிழக்கில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இப்போது முழு நாட்டிற்கும் அச்சுறுத்தல் உள்ளது.

“ஒரு நாடாக உயிர்வாழ்வதற்கான கடுமையான உறுதிப்பாடு அங்கு காணப்படுகிறது. ஆனால் தங்கள் நிலை அத்தனை வலிமையாக இல்லை என்றும் மிக அதிக இரத்தக்களறி இருக்கக்கூடும் என்ற என்ணமும் மக்கள் மனதில் மேலோங்கி இருக்கிறது,” என்கிறார் திரு வாட்லிங்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »