Press "Enter" to skip to content

எப்போது திரும்புவோம் என்றே தெரியாமல் எதற்கு திட்டமிடுவது? யுக்ரேனிலிருந்து ஒரு கடிதம்

  • மார்தா ஷோகலோ
  • ஆசிரியர், பிபிசி யுக்ரேனிய சேவை

நான் காலை 3 மணிக்கு எழுந்து செய்திகளை பார்த்தேன். நானும் என் மகனும் கீயவை விட்டு வெளியேற வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

வடக்கிலிருந்தும் மற்ற திசைகளிலிருந்தும் பீரங்கிகள் நகரத்தைத் தாக்கிக் கொண்டிருந்தன. ரஷ்ய ராணுவம் நகரத்தை சுற்றி வளைக்க முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. விரைவில் அது நகருக்குள் நுழைந்துவிடும்.

காலை 8 மணி வரை தாக்குதல் அபாயம் இருப்பதாக வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் எங்களிடம் தெரிவித்திருந்தன. செய்திகளை சரிபார்த்த 30 நிமிடங்களுக்குப் பிறகு நான் தொலைதூரத்தில் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டேன்.

வியாழனன்று பலர் கீயவ்வில் இருந்து மேற்கு நகரமான லீவ் மற்றும் போலந்து எல்லையை நோக்கி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

தற்போது வீட்டை விட்டு வெளியே இருக்கும் என் கணவரை அழைத்துப்பேசினேன். யுக்ரேனின் கிழக்கே தொலைதூரப்பகுதியில் உள்ள அவரது பெற்றோரின் கிராமத்திற்கு நான் வாகனத்தை ஓட்டிச்செல்வது என்ற திட்டத்தை வகுத்தோம். வியாழக்கிழமை முழுவதும் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த எங்கள் 10 வயது மகனுக்காக இந்த முடிவை எடுத்தோம்.

நான் கிளம்புவதற்கு பொருட்களை எடுத்துவைக்க ஆரம்பித்தேன். ஆனால், நீங்கள் எப்போது திரும்புவீர்கள் என்று தெரியாதபோது எவ்வளவு பொருட்களை எடுத்துக்கொள்வீர்கள்? ஒரு வேளை கோடையிலும் நாங்கள் கிராமத்தில் இருக்கக்கூடும் என்பதால் நான் அதற்கேற்ற உடைகளை பேக் செய்தேன். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட உடனேயே, 07:30 மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். கீயவ் வழியாக கிழக்கு நோக்கி நாங்கள் பயணித்தோம்.

நான் பயணித்த திசையில் சாலைகள் காலியாக இருந்தன. நகரத்திற்கு வெளியே நாங்கள் எதிர்திசையில் கீயவ் நோக்கிச்சென்று கொண்டிருந்த யுக்ரேனிய பீரங்கிகளை பார்த்தோம்.

நான் ரஷ்யப் படைகளை சந்திப்பேனா, அல்லது சாலைத் தடுப்பில் சிக்கிக் கொள்வேனா என்றெல்லாம் தெரியவில்லை. “நாங்கள் அங்கு சென்று சேர வேண்டும், நாங்கள் அங்கு சென்று சேர வேண்டும்” என்று மட்டுமே எனக்குள் நினைத்துக் கொண்டு நான் சாலை மீது ஆழ்ந்த கவனம் செலுத்தினேன்.

காலி வீடுகள்

நான் அவ்வப்போது வண்டியை நிறுத்தி என் கைபேசியை பார்ப்பேன். கீயவ்வின் வடக்குப் புறநகர்ப் பகுதியான ஒபொலோனில் தெருக்களில் மோதல்கள் நடப்பதை அதன்மூலம் தெரிந்துகொண்டேன். அங்கு வசிக்கும் சக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்வார்கள்.

இந்த பயங்கரமான விஷயங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அது ஒரு அழகான காலை வெயில் வேளை. கிராமப்புறங்களில் வசந்த காலத்தின் முதல் அறிகுறிகளுடன் முற்றிலும் கனவுபோல இருந்தது.

இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் கிராமத்தை அடைந்தோம். கடந்த கோடையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக பழங்களை சேகரித்து கொண்டிருந்த மல்பெரி மரத்தை நான் கடந்தேன். இன்று நான் மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் முற்றிலும் மாறுபட்ட முறையில். அதாவது, கீயவ்வில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சி. உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சி. என் மகனுடன் பாதுகாப்பான இடத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி.

கடந்த 24 மணிநேரத்தில் முதல் முறையாக என் கணவரின் தாய் தந்தையுடன் சேர்ந்து நான் சரியாக சாப்பிட்டேன். எந்த ஆட்கள் பிராந்திய ராணுவத்துடன் சண்டையிடச் சென்றார்கள் என்பதுதான் இங்கு பேச்சாக இருந்தது. மற்றபடி எல்லாமே மிகவும் அமைதியாக இருக்கிறது. அது அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்கு இங்கு இணைய வசதி உள்ளதால் என்னால் வேலை செய்ய முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டால், எங்களிடம் ஜெனரேட்டர் உள்ளது.

என் முக்கிய முன்னுரிமை என் பிபிசி சக ஊழியர்களின் பாதுகாப்பு ஆகும். அவர்களில் சிலர், கீயவ்விற்கு வெளியே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்குவதற்கான இடங்களைத் தேடுகிறார்கள். நான் எனது கணவரின் கிராமத்திற்கு வருமாறு அவர்களை அழைத்துள்ளேன். இங்கு வீடுகள் காலியாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

நாங்கள் பிரதான சாலையில் இருந்து தள்ளியே இருக்கிறோம். ரஷ்ய பீரங்கிகள் இங்கு வராது என்று நான் நம்புகிறேன்.

கீவ்வில் உள்ள என் வீட்டிற்கு நான் எப்போது திரும்புவேன், நான் அங்கு செல்லும்போது அது இருக்குமா என்று சொல்வது சாத்தியமே இல்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »