Press "Enter" to skip to content

யுக்ரேன் போரில் மக்கள் மனநிலை என்ன? “ஒரு தாயாக அது என்னை மிகவும் அச்சுறுத்தியது”

  • சாரா ரெயின்ஸ்ஃபோர்ட்
  • பிபிசி கிழக்கு ஐரோப்பா செய்தியாளர்

பட மூலாதாரம், SARAH RAINSFORD

பூமிக்கு அடியில் பல மாடிகளுக்குக் கீழே வெடிகுண்டுகளிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரு தங்குமிடத்தில், மக்கள் கூட்டம், நான்கு நாய்கள் மற்றும் ஒரு வளர்ப்பு முயல் உடன் இருந்துகொண்டு நான் இதை எழுதுகிறேன்.

உணவக ஊழியர் ஒருவர் நள்ளிரவுக்குப் பிறகு, நாங்கள் படிக்கட்டுகளில் கீழே இறங்குவதற்கு முன்னர், கதவுகளை பலமாகத் தட்டிவிட்டு வேகமாக ஓடினார்.

ரஷ்ய பாராசூட் படை வீரர்கள் தரையிறங்குவது பற்றிய வதந்திக்கு அவர்கள் மிகுதியாக எதிர்வினையாற்றியதைப் போல் தெரிந்தது. ஆனால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அனைவரும் இங்கு அச்சத்தோடு இருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக மாலையில், சாலையின் குறுக்கே உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நாங்கள் ஹன்னா சிவாவையும் அவருடைய குடும்பத்தினரையும் சந்தித்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபோது, மொத்த குடும்பத்தையும் முகப்பு அறையில் சோஃபாவிற்குப் பின்னால் தூங்க வைத்தனர்.

ஹன்னா சிவாவுடைய கணவர் துப்பாக்கியை வெளியே எடுத்தார். அது தற்போது அவர்களுடைய ஜன்னல் ஓரத்தில் பொம்மைக்கு அருகில் உள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாய், அவருடைய அனைத்து தயாரிப்புகளையும் விவரித்தார். அவர் உற்சாகத்தை இழக்காமல் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால், அவர் தன் குழந்தைகளிடையே கவலை வந்துவிடக் கூடாது என்பதற்காக புன்னகையைத் தக்க வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.

“அவர்கள் நேற்று அழுதார்கள், மிகவும் பதற்றமாக இருக்கிறார்கள். அதனால், நான் பயப்பட முடியாது,” என்று ஹன்னா கூறினார்.

அவருடைய இரண்டு குழந்தைகளும் ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியிருந்த அவசரக்கால வளையங்களை அணிந்துள்ளனர். அதில் அவர்களுடைய பெயர், கைபேசி எண் மற்றும் அவர்களுடைய ரத்த வகை ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன.

“அவர்களின் ரத்த வகையை மருத்துவ உதவிப் பணியாளர்களுக்காக நான் அதில் குறிப்பிட்டபோது, எனக்கு அது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. ஒரு தாயாக, அது என்னை மிகவும் அச்சுறுத்தியது,” என்று அவர் கூறுகிறார்.

இதுவரை, நீப்ரோவுக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், ரஷ்ய தாக்குதல் தொடங்கிய சில மணிநேரங்களில் நடந்தது; அதிலிருந்து நகரம் அமைதியாக உள்ளது. ஆனால், ரஷ்ய படைகள் இங்கு தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் போரிடுகின்றன.

எனவே ஹன்னா யதார்த்தமான விஷயங்களில் தன்னை திசை திருப்பிக் கொள்கிறார்.

ஹன்னா சிவா அவருடைய குடும்பத்துடன்

பட மூலாதாரம், SARAH RAINSFORD

அவரும் அவருடைய அண்டை வீட்டாரும் அவர்களுடைய அடித்தளத்தை சுத்தம் செய்து, தேவையான பொருட்களைச் சேகரித்து வைத்தனர். அதன்மூலம், ஷெல் குண்டுகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து அவர்கள் அங்கு தஞ்சம் அடையலாம். அதோடு, உடைகள், உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அடங்கிய பை ஒன்றையும் தயாராக முன் வாசலில் வைத்துள்ளார்.

அடித்தளம் மிகவும் சிறியது. அது அனைவருக்கும் போதாது. ஆனால், சிலர் ஏற்கெனவே பாதுகாப்பு தேடி மேற்கு நோக்கிச் சென்றுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக டான்பாசில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

யுக்ரேனிய படைகள் 2014-ஆம் ஆண்டு முதல் கிழக்கு டான்பாசில் ரஷ்ய ஆதரவுப் படைகளுடன் போரிட்டு வருகின்றன. ஆனால், வியாழன் முதல் ரஷ்ய ராணுவம் வெளிப்படையாகச் சண்டையிடத் தொடங்கியது.

இங்கு தங்கியிருக்கு உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையோடு இருப்பதாகவும் அதேநேரம் யுக்ரேனியர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

நான் லிசாவை ஒரு ரத்ததான முகாமிற்கு வெளியே நீண்ட வரிசையில் சந்தித்தேன். செவிலிய மாணவரான அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மோதல் தொடங்கிய நேரத்தில் நீப்ரோவுக்குச் சென்றார்.

இப்போது மீண்டும் இடம் பெயர வேண்டும் என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதல் முறை வந்தபோது வீடு தேடி குடியேறப் போராடியதை அவர் நினைவு கூர்கிறார்.

யுக்ரேன் மக்களின் மனநிலை என்ன

பட மூலாதாரம், SARAH RAINSFORD

ஆனால், அவர் யுக்ரேனின் வீரர்களுக்கு உதவ விரும்புகிறார். அதனால் அவர் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய வந்துள்ளார்.

குளிருக்கும் மழைக்கும் நடுவே அதற்கான வரிசை 90 நிமிடங்கள் காத்திருக்கும் அளவுக்கு நீளமாக இருந்தது.

20 வயதாகும் வ்ளாட், ரஷ்யா நில அபகரிப்பில் இருப்பதாகவும் விளாதிமிர் புதின் தனது அதிபராவதை அவர் விரும்பவில்லை என்பதாலும் தான் படைகளுக்கு ஆதரவளிக்க வந்ததாகக் கூறுகிறார்.

“இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. குறைந்தபட்சம் எனது உள்ளூர் மாவட்டங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதத்தை கைகளில் எடுக்க நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

அவரது தொப்பியின் அடியில் இருந்து ஒரு சிவப்பு முடி வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது.

ரத்த தானம் செய்ய மக்கள் வரிசையில் நிற்கின்றனர்

பட மூலாதாரம், SARAH RAINSFORD

இவற்றுக்கு நடுவே வரிசையில் சிலர் விரக்தியான மனநிலையோடும் உள்ளனர்.

“தடைகள் விதித்தது சரி, அவை உதவும். ஆனால், இது போதாது. எங்களுக்கு இன்னும் உதவி தேவை. இதைத் தடுக்க நாங்கள் ஐரோப்பாவை நம்பியுள்ளோம்,” என்று ஹன்னா வலியுறுத்தினார்.

ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் சில விரைவாகவும் வரவில்லை கடுமையானதாகவும் இல்லை என்று கோபத்துடன் கூறுவதற்காக ஒரு மாணவர் என்னைத் தேடினார். அவர் யுக்ரேன் கைவிடப்பட்டதாக உணர்கிறார். எனவே, நீண்ட வரிசையில் நிற்கும் மற்றவர்களைப் போலவே, அவர் தனது பங்களிப்பைச் செய்தார்.

“காயமடைந்தவர்களுக்கு உதவுவது முக்கியம். அதன்மூலம், அவர்கள் தனியாக இல்லை என்பதை உணருவார்கள். நாங்கள் உதவத் தயாராக உள்ளதால், அதைச் செய்கிறோம்.”

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »