Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்: ஸ்விஃப்ட் சேவையில் இருந்து ரஷ்ய வங்கிகள் நீக்கம் – அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், EPA

சர்வதேச அளவில் முக்கியமான நிதி தகவல் சேவையான ஸ்விஃப்டில் இருந்து ரஷ்யாவின் சில வங்கிகளை நீக்க, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் சம்மதித்துள்ளன.

ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களும் இதன்மூலம் முடக்கப்படும். இது, ரஷ்யாவின் வெளிநாட்டு கையிருப்புகளை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும்.

“சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம்” என, இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா ஸ்விஃப்ட் சேவையையே அதிகம் சார்ந்திருக்கிறது.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக இன்றுவரை விதிக்கப்பட்ட நடவடிக்கைகளில், இது மிகக் கடுமையானதாகும்.

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புக்கான சமூகம் எனப்படும் ஸ்விஃப்ட், பாதுகாப்பான முறையில், விரைவாக, எல்லை கடந்த பண பரிவர்த்தனைகள், சர்வதேச வணிகத்தை அனுமதிக்கிறது.

பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் இந்த ஸ்விஃப்ட் சேவை, உலகம் முழுவதிலும் 11,000க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் ஸ்விஃப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தடை முடிவுகளை மேற்கொள்ள அதற்கு எவ்வித அதிகாரம் இல்லை.

“இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படும் வங்கிகள் அனைத்தும் ஏற்கனவே சர்வதேச சமூகத்தால் தடைவிதிக்கப்பட்டவை” என, ஜெர்மன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஸ்விஃப்ட் சேவையை பயன்படுத்துவதால், அந்த சேவையிலிருந்து வங்கிகளை நீக்குவது, கடுமையான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ரஷ்ய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்

பகுப்பாய்வு – கேட்டி பிரெஸ்காட், வணிக செய்தியாளர்

டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பண பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் சேவையிலிருந்து ரஷ்ய வங்கிகளை நீக்குவது, பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். வெள்ளை மாளிகையின் வார்த்தைகளில் சொல்லப்போனால், ரஷ்யா பணப்பரிவர்த்தனைக்கு “டெலிபோன் அல்லது ஃபேக்ஸ் இயந்திரத்தை” சார்ந்திருக்க வேண்டிவரும்.

இதுவொரு சிறிய மிகைப்படுத்தல் மட்டுமே. ஸ்விஃப்ட் சேவைக்கு மாற்றாக பல தீர்வுகள் உள்ளன. ஆனால், அவை எதுவும் திறன்வாய்ந்தவை அல்ல.

கடந்த காலத்தில் ஒரேயொரு நாடு மட்டுமே இந்த சேவையிலிருந்து நீக்கப்பட்டது. அது இரான். இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் 30 சதவிகிதத்தை இழந்தது.

யுக்ரேன் நெருக்கடி

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

குறிப்பிட்ட சில ரஷ்ய வங்கிகளை தேர்ந்தெடுப்பது, பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்யும். அதேசமயம், ஐரோப்பாவில் அதிக தாக்கத்தை ஏற்படுவதைத் தடுக்கும். ஐரோப்பிய வணிக நிறுவனங்கள், செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்கவும், ரஷ்யாவிலிருந்து எரிசக்தியை வாங்கவும் முடியும்.

ரஷ்யா மீதான மற்ற தடை நடவடிக்கைகளும் இதே அளவு வலுவானது. ரஷ்ய மத்திய வங்கி மீதான தடைகள், பொருளாதாரத் தடைகள் மீதான தாக்கத்தைக் கட்டுப்படுத்த ரஷ்ய பணத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தும்.

ரஷ்யா தனது வங்கிகளைப் பாதுகாக்க வெளிநாட்டு பண இருப்பைப் பெருக்கி வந்த நிலையில், இந்த புதிய தடைகள் அதன் இருப்பை கணிசமாக குறைக்கும்.

இந்த தடைகள் மீதான தாக்கம் தெரிவதற்கு சில காலம் ஆகும். ஆனால், மேற்கத்திய நாடுகளின் உடனடி நோக்கத்தை இந்த தடைகள் வெளிப்படுத்தும்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வான் டேர் லேயன் கூறுகையில், இந்த முடிவு, ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை “போருக்காக பயன்படுத்துவதிலிருந்து” ரஷ்ய அதிபர் மாளிகையை தடுத்து நிறுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் வங்கி பரிவர்த்தனைகளை முடக்கவும் பணப்புழக்கத்தைத் தடுக்கவும் சம்மதித்துள்ளன.

“ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய பணக்கார ரஷ்யர்கள் எங்கள் நாடுகளின் குடிமக்களாகி, எங்களது நிதி அமைப்புகளை அணுகும் வகையிலான, “கோல்டன் கடவுச்சீட்டுகள்” என்று அழைக்கப்படுபவற்றின் மீதும் தடை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ” பிரிட்டன் தீர்மானமான நடவடிக்கையை” எடுத்துள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்: “புதின் தனது கோபத்துக்கு விலை கொடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பதிலளித்த யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், பொருளாதாரத் தடைகளுக்கு தனது பாராட்டுக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “இந்த இருண்ட நேரத்தில் உண்மையான உதவி” என அத்தடைகள் குறித்து தெரிவித்தார்.

யுக்ரேனுக்கு உறுப்பு நாடுகளின் ராணுவ உதவிகளை ஒருங்கிணைக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளனர். மேலும், யுக்ரேனுக்கும் மோதலில் இருந்து தப்பியோடியவர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »