Press "Enter" to skip to content

யுக்ரேனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாதது ஏன்?

  • பார்பரா ப்லெட் உபகிர்வு
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல ராஜீய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அரசு, வரவிருக்கும் ஆக்கிரமிப்பு பற்றியும் சர்வதேச ஒழுங்கு ஆபத்தில் உள்ளது பற்றியும் எச்சரிக்கைகளை விடுத்து வந்தது உண்மையாகியுள்ளது.

ரஷ்யர்கள் போருக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கர்கள் சண்டையிடத் தயாராக இல்லை என்பதையும் பைடன் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க குடிமக்களை மீட்க யுக்ரேனுக்குள் படைகளை அனுப்புவதற்கும் அவர் மறுத்துவிட்டார். மேலும், அந்நாட்டில் ராணுவ ஆலோசகர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்றிவந்த படையினரையும்கூட திரும்ப அழைத்துக்கொண்டார்.

அவரது பதவிக் காலத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெளியுறவுக் கொள்கைச் சிக்கலில் அவர் ஏன் இவ்வாறு செயல்பட்டார் என்பது வியப்பளிக்கலாம்.

தேசியப் பாதுகாப்பு குறித்த கவலையில்லை

முதலாவதாக, யுக்ரேன் அமெரிக்காவின் அண்டை நாடு அல்ல. அமெரிக்காவின் எல்லையிலும் அது அமைந்திருக்கவில்லை. யுக்ரேனில் அமெரிக்க ராணுவத் தளமும் இல்லை. இங்கு முக்கிய எண்ணெய் வளங்களும் இல்லை. யுக்ரேன் அமெரிக்காவின் முக்கிய வணிகக் கூட்டாளியும் அல்ல.

ஆனால், தேசிய முக்கியத்துவமில்லாத நிலையிலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், கடந்த காலங்களில் மற்ற நாடுகளுக்காக, தங்களது ராணுவத்தை அனுப்பவும் பணம் செலவழிக்கவும் தயங்கியதில்லை.

1995 இல் யுகோஸ்லாவியாவின் சரிவைத் தொடர்ந்து நடந்த போரில் பில் கிளிண்டனும் 2011-ல் , லிபிய உள்நாட்டுப் போரில் பராக் ஒபாமாவும் ராணுவ ரீதியாகத் தலையிடத் தவறவில்லை. இவை அனைத்தும் பெரும்பாலும், மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் தான் அமைந்தன.

1990ல் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ், குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கான தனது சர்வதேசக் கூட்டணியை நிலைமையின் கட்டாயம் என நியாயப்படுத்தினார். சர்வதேச அமைதி, பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ரஷ்யாவின் அச்சுறுத்தலை விவரிக்கும் பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இதே வாதத்தைத்தான் முன்வைக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த எதிர்ப்பை ராணுவ ரீதியாக அல்லாமல், பொருளாதாரத் தடைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவின் ராணுவத் தலையீடு இல்லை

இது அதிபர் பைடனின் தலையிடாத உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த உணர்வுகள், காலப்போக்கில் உருவாயின என்பது குறிப்பிடத்தக்கது. 1990 களில் பால்கனில் இன மோதல்களை எதிர்கொள்ள, அமெரிக்க ராணுவ நடவடிக்கையை அவர் ஆதரித்தார். 2003ல் இராக் மீதான அமெரிக்காவின் துரதிர்ஷ்டவசமான ஆக்கிரமிப்புக்கு ஆதரவளித்தார். ஆனால் அதன் பின்னர் அவர் அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாகிவிட்டார்.

ஒபாமா காலத்தில் லிபியாவில் அமெரிக்காவின் தலையீட்டையும், ஆப்கானிஸ்தானில் படைகளின் குவிப்பையும் பைடன் எதிர்த்தார். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான தனது உத்தரவை, அதனால் ஏற்பட்ட குழப்ப நிலையையும் மனித உரிமை மீறலையும் பொருட்படுத்தாமல், அவர் உறுதியுடன் செயல்படுத்தினார்.

மேலும் அவரது குரலாகக் கருதப்படும், உயர்மட்ட ராஜதந்திரி ஆண்டனி பிளிங்கன், அதிபரின் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் 20 ஆண்டுகளாக அருகில் இருந்து பணியாற்றி வருகிறார் – தேசியப் பாதுகாப்பு என்பது, ராணுவத் தலையீடுகளைக் காட்டிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உலகளாவிய நோய்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் சீனாவுடனான போட்டியை எதிர்கொள்வது இவற்றில் தான் உள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

போரை விரும்பாத அமெரிக்கர்கள்

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சமீபத்திய AP-NORC கருத்துக் கணிப்பில் 72 சதவீத மக்கள் ரஷ்யா-யுக்ரைன் மோதலில் அமெரிக்கா பெரும்பங்கு எதுவும் ஆற்றக்கூடாது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள், எதிர்வரும் இடைக்காலத் தேர்தலை மனதில் கொண்டு, பணவீக்க அதிகரிப்பு போன்ற உள்நாட்டுச் சிக்கல்களில் பைடன் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தச் சிக்கலில், தற்போது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் பொருளதாரத் தடைகளைத்தான் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் குடியரசுக் கட்சியின் செனட்டர் டெட் குரூஸ் போன்றவர்கள்கூட, பைடன், அமெரிக்கப் படைகளை யுக்ரேனுக்குள் அனுப்புவதையும் “புதினுடன் போரைத் தொடங்குவதையும்” விரும்பவில்லை.

உலகின் இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளிடையே போர் என்பது யாருக்கும் நலன் பயக்காது என்று வெளியுறவுக் கொள்கை வல்லுநரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினருமான மார்க்கோ ருபியோ கூறுகிறார்.

வல்லரசுகள் மோதும் அபாயம்

புதினின் அணு ஆயுதக் குவிப்பு தான் இந்தச் சூழலின் அடி நாதமாக இருக்கிறது.

யுக்ரேனில் அமெரிக்க – ரஷ்ய துருப்புக்களுக்கு இடையே நேரடி மோதலை ஏற்படுத்துவதன் மூலம் “உலகப் போர்” உருவாவதை தான் விரும்பவில்லை என்பதை பைடன் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்.

“ஒரு பயங்கரவாத அமைப்பைக் கையாள்வது போல் இல்லை இது. உலகின் மிகப் பெரிய படைகளில் ஒன்றை நாங்கள் எதிர்கொள்கிறோம். இது மிகவும் கடினமான சூழ்நிலை. நிலைமை விரைவில், மேலும் சிக்கலடையலாம்.” என்று என்று சமீபத்திய பேட்டியில் அதிபர் கூறியிருந்தார்.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஒப்பந்தப்படி, பொறுப்புகள் இல்லை

இந்த அபாயகரமான நடவடிக்கையை எடுக்க, அமெரிக்காவை வற்புறுத்தகூடிய எந்த அம்சமும் ஒப்பந்தத்திலும் இல்லை. எந்தவொரு நேட்டோ நாட்டிற்கும் எதிரான தாக்குதல் என்பது அனைவருக்கும் எதிரான தாக்குதலாகும் – இதைத் தான் அனைத்து உறுப்பினர்களையும் ஒருவரையொருவர் பாதுகாக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையான பிரிவு 5 தெரிவிக்கிறது.

ஆனால் யுக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக இல்லை என்ற வாதம்தான் அமெரிக்கர்கள் தாங்கள் மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் விழுமியங்களுக்காக ஏன் இந்தப் போரில் ஈடுபட மாட்டார்கள் என்பதை விளக்க பிளிங்கனால் மேற்கோள் காட்டப்பட்டது.

அமெரிக்கா

யுக்ரேன் ஒருபோதும் ராணுவக் கூட்டணியில் சேர அனுமதிக்கப்படக் கூடாது என்பதற்காக புதின் கோரிய உத்தரவாதமும் அதை நேட்டோ வழங்க மறுத்ததும்தான் இந்த மோதலின் தொடக்கப் புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்வர்ட் பேராசிரியரும் வெளியுறவுக் கொள்கை வல்லுநருமான ஸ்டீபன் வால்ட் அமெரிக்காவும், பிற நேட்டோ நாடுகளும் இப்போது ராணுவ உதவி அளிக்காத நிலையில், இந்தச் சமரசத்தை நிராகரிப்பது நடைமுறை அர்த்தமற்றது என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

நிலைமை மாறுமா?

யுக்ரேன்-ரஷ்ய எல்லையில் இருக்கும் நேட்டோ கூட்டாளிகளை வலுப்படுத்த, அதிபர் பைடன், ஐரோப்பாவுக்கு துருப்புக்களை அனுப்பியும், ஏற்கனவே அங்குள்ளவர்களை மீண்டும் நிலைநிறுத்தியும் வருகிறார்.

நேட்டோ படைகளைத் தனது நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் புதினின் கோரிக்கை குறித்துப் பதற்றமடைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு உறுதியளிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த வாரம் யுக்ரேன் மீதான திட்டமிட்ட அல்லது தற்செயலான ரஷ்யத் தாக்குதல், பெரிய போரின் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலையைத் தூண்டியுள்ளது.

நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5-ன் கீழ், போர் விரிவடைந்தால், அது அமெரிக்கப் படைகளை ஈடுபடச் செய்யும். “ரஷ்யா, நேட்டோ நாடுகளைத் தாக்க முன்னேறினால், அமெரிக்கா தலையிடும்” என்று பைடன் கூறினார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »