Press "Enter" to skip to content

காலநிலை மாற்றம்: ஐபிசிசி அறிக்கை தரும் 5 முக்கிய பாடங்கள்

  • மட் மெக்ராத்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) இந்த வாரம் வெளியிட்ட புதிய அறிக்கை, காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், தாக்கங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கிறது.

உலக வெப்பம் அதிகமானால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இந்த அறிக்கை.

அதிலிருந்து நாம் கற்ற ஐந்து விஷயங்கள் இங்கே.

1. நாம் நினைத்ததை விட மோசமான நிலை

கிரீன்லாந்தில் பனிப்படலம் உருகுவது முதல் பவளப்பாறைகள் அழிவது வரை, காலநிலை தொடர்பான தாக்கங்கள் நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் உலகைத் தாக்குகின்றன. மேலும் IPCC ஆல் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிக விரைவாக,

உலக மக்கள்தொகையில் சுமார் 40% பேர் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு “அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்கள்” என்று இப்போதைய புதிய அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

ஆனால், பிரச்னை தொடங்க மிகக் குறைந்த அளவே காரணமான நாடுகளின் மீது தான் மிக அதிக பாரம் சுமத்தப்படுகிறது.

“தற்போதுள்ள உமிழ்வு நிலை தொடரும் பட்சத்தில், ஆப்பிரிக்காவில், மக்காச்சோளம் விளையும் பகுதிகளில் 30% உற்பத்தி குறையும் என்றும் பீன்ஸ் உற்பத்தி, 50% குறையும் என்றும் அரசாங்கங்களுக்கும் தனியார் துறைக்கும் உதவும் உலகளாவிய மையமான குளோபல் சென்டர் ஃபார் அடாப்டேஷனின் முதன்மைச் செயல் தலைவர், பாட்ரிக் வெர்கௌவன் கூறுகிறார்.

“எனவே உலகின் சில பகுதிகள், குறிப்பாக ஆப்பிரிக்காவில், வாழத் தகுதியற்றதாக மாறும். இந்தப் புதிய காலநிலைப் பாகுபாட்டை உருவாக்கும் காரணிகளை விரைவில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐபிசிசி அறிக்கை தெளிவாக கூறுகிறது,” என்று அவர் பிபிசி செய்திகளிடம் கூறினார்.

2. இழப்புகளுக்கும் சேதங்களுக்கும் அறிவியல் ஆதாரங்கள்

பணக்கார நாடுகள் இந்த இழப்பு மற்றும் சேதம் குறித்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக, வளரும் நாடுகள் வலியுறுத்து முயற்சிக்கின்றன.

இந்தப் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள், மாற்றியமைக்க முடியாதவை அல்லது கடல் மட்ட உயர்வு போன்ற மெதுவாகத் தொடங்கும் நிகழ்வுகள் என வரையறுக்கப்படுகின்றன.

நீண்ட காலமாகவே கார்பன் உமிழ்வு அளவுகள் இதற்குப் பொறுப்பாகக் கருதப்படுவதால், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதற்குப் பெருமளவு காரணமான பணக்கார நாடுகள் இதற்கான எதிர்கால இழப்புகள் மற்றும் சேதங்களுக்குக் கால வரையற்றுப் பொறுப்பாக்கப்படவும் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் வேண்டியிருப்பதால் அஞ்சுகின்றன.

இழப்பு மற்றும் சேதத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

கிளாஸ்கோ COP26 மாநாட்டில், இழப்பு மற்றும் சேதத்திற்கான பிரத்யேக நிதி வசதியை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடுத்ததால் இந்தப் பிரச்னையில் அரசியல் ரீதியான மேல் செயல்பாடு ஸ்தம்பித்தது.

இயற்கைக்கும் மக்களுக்கும் பரவலான பாதகமான தாக்கங்கள் மற்றும் தொடர்புடைய இழப்புகள் ஆகியவை கால நிலை மாற்றத்தின் கண்ணுக்குத் தெரியும் தாக்கங்களாக உள்ளன என இப்போது IPCC தெளிவாகக் கூறுகிறது.

IPCC யின் இந்த ஒப்புதல், காலநிலைப் பேச்சுக்களில், இழப்பு மற்றும் சேதம் குறித்த விவாதத்தை ஊக்குவிக்கக்கூடும். இந்த உண்மையை ஐரோப்பிய ஒன்றியத்தின் COP தலைவர் அலோக் ஷர்மா அங்கீகரித்துள்ளார், அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் எகிப்தில் COP27 தொடங்கும் வரை ஐ நா பேச்சுவார்த்தைகளுக்குப் பொறுப்பாக உள்ளார்.

“இன்றைய அறிக்கை காலநிலை மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் இழப்பு மற்றும் சேதத்தின் புதிய பரிமாணத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் வலியுறுத்துகிறது. எதிர்வரும் பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை” என்று அவர் கூறினார்.

3. தொழில் நுட்பம் சிறந்த ஆயுதமன்று

வெப்பமயமாக்கலைக் கட்டுப்படுத்தவும் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலைத் தீர்ப்பதை விட, அதிக தீவிரமாக்குகின்றன என்று ஐ பி சி சி அறிக்கை தெரிவிக்கிறது.

சரியான இடத்தில் சரியான மரங்களை வளர்க்கவில்லை என்றால் தீமையே அதிகம் விளையும் என ஐபிசிசி தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

காற்றிலிருந்து கரியமில வாயுவை உரிஞ்சும் இயந்திரங்களால் அதிக வெப்பமான வாயுக்கள் வெளியேறும் ஆபத்து உள்ளது என்ற கவலையும் எழுந்துள்ளது.

ஐ பி சி சி விவாதங்களில் பார்வையாளராக இருந்த ஹெயின்ரிச் போல் ஃபௌண்டேஷனின் லிண்டா ஷ்னெய்டர், “வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை நீக்கிவிட்டால், கார்பன் சுழற்சியில் உள்ள மற்ற வாயுக்கள் எதிர்வினை ஆற்ற வாய்ப்புண்டு. பெருங்கடல்கள், நில நீர்த்தேக்கங்களில் வாயு வெளியீடு இருக்கும். வளிமண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கரியமில வாயுவில் ஒரு பகுதி, மீண்டும் வளிமண்டலத்தில் கலக்கும்” என்று கூறுகிறார்.

4. நம்பிக்கை அளிக்கும் நகரங்கள்

பெரிய நகரங்கள் தட்பவெப்ப தாக்கங்களுக்கு ஊற்றுக்கண்களாக இருந்தாலும், வெப்பமயமாதலின் மோசமான தாக்கங்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பையும் அவை வழங்குகின்றன.

வாகனங்கள்

பட மூலாதாரம், Getty Images

நகரங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமையான போக்குவரத்து மற்றும் கட்டடங்களுக்கு அவை அழுத்தம் கொடுக்கலாம். இது லட்சக்கணக்கான மக்களின் அழிவுகரமான காலநிலை தாக்கங்களைக் கட்டுப்படுத்த உதவலாம்.

“உலகின் நகரங்களை அணிதிரட்டுவதற்கான முக்கிய இடமாக நாங்கள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறோம். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் கடலோர நகரங்களில் உள்ளனர், எனவே இது ஏற்கனவே நுழைவுப் புள்ளியாக உள்ளது, கடலோர நகர்ப்புற வளர்ச்சியைச் சுற்றி அணிதிரட்டத் தொடங்குவது உதவலாம்.” என்று IPCC இணைத் தலைவர் டெப்ரா ராபர்ட்ஸ் கூறினார்.

5. வேகமாகக் குறையும் காலக் கெடு

இது தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் பாதிப்புகளின் மேலோட்டமான மதிப்பீடாக இருந்தாலும், நாம் சரியான நேரத்தில் செயல்பட்டால், மோசமான தாக்கங்களைத் தவிர்க்க முடியும் என்று இதன் ஆசிரியர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சீராக்கும் இந்த வாய்ப்பு, இந்த தசாப்தத்தின் எஞ்சிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்று புதிய அறிக்கையின் இறுதி வாக்கியம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடம்பெயர்ந்தனர்

பட மூலாதாரம், SADDAM MOHAMED

“ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் இந்த பூமியை வாழத்தகுந்ததாக்கக் கிடைத்துள்ள குறுகிய வாய்ப்பும் இழக்கப்படும்.”

உலகம் உமிழ்வைக் கடுமையாகக் குறைத்து, மாற்றங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைக் கணிசமாக உயர்த்தினால், அது சில பேரழிவுகளில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்கக்கூடும்.

மேலும் இது பசுமை ஆற்றல் மற்றும் மின்சார கார்களுக்கான செலவு மட்டும் இல்லை. கல்வி, சுகாதார அமைப்புகள் மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் முதலீடு செய்வது, அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் என்றும் இதன் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இயற்கையில் முதலீடு செய்வது மோசமான தாக்கத்திலிருந்து காக்கும் ஒரு அரணாக இருக்கும் என்று IPCC கூறுகிறது. இந்த அறிக்கை, உலகின் 30-50% பாதுகாக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் இங்கர் ஆண்டர்சன், “இயற்கையை நாம் பேணினாலன்றி இயற்கை நம்மைக் காக்காது” என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »