Press "Enter" to skip to content

யுக்ரேன் – ரஷ்யா இடையிலான மோதலை உங்கள் குழந்தைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?

இளம் வயதினர் முன்பை விட அதிகமான செய்தி ஆதாரங்களை பெறமுடிகிறது. இதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் கணினிமய தளங்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி உங்கள் பிள்ளைகள் கேள்விப்பட்டிருந்தால், அவர்கள் கவலையாகவோ அல்லது குழப்பமாகவோ உணரலாம். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பெற்றோர்கள் எவ்வாறு பேசலாம் என்பதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன.

உங்கள் குழந்தையின் குறிப்பை பின்பற்றவும்

உங்கள் பிள்ளையின் வயதைப் பொருத்து, போர் பற்றி பேசுவது கடினமாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ தோன்றலாம். ஆனால் இதை ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பதால் குழந்தைகள் குழப்பமாகவும், தனிமையாகவும் உணரலாம், மேலும் பயத்திற்கும் இது வழிவகுக்கும். இது காலப்போக்கில் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பள்ளியில் அவர்கள் படித்த, பார்த்த அல்லது கேட்டதை புரிந்துகொள்ள உதவ, குழந்தைகளுடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்களை நடத்துவது முக்கியம்.

தாங்கள் சொல்வதை மற்றவர்கள் செவிமடுக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். அவர்கள் உணர்வது சாதாரணமானதுதான் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

உரையாடலை தொடங்கும்போது அமைதியாக இருப்பது முக்கியம். எனவே அதிக கவலை அல்லது பயத்தை உருவாக்காத வகையில் உங்கள் பதிலைத் தெரிவிக்கவும். “குழந்தைகள் வாழ்க்கை நிகழ்வுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.

எனவே, பெற்றோர்கள் உரையாடலைத் தொடங்குவதற்கு முன் அவர்கள் இது பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் மருத்துவ உளவியலாளர் மிரி சிசாக்-கோஹன்.

“பெற்றோர்கள் நிதானமாக இருப்பது மிகவும் முக்கியம். குழந்தைகளிடம் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறுகிறார்.

line

உங்கள் கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணைய தளத்தில் வெளியிடலாம்.

2) உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியா மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

அவர்களுக்கு என்ன தெரியும் என்று கேளுங்கள்

ஒரு குழந்தையுடன் கடினமான தலைப்பு பற்றிய உரையாடலுக்கு, இரண்டு படி அணுகுமுறையை சிசாக்-கோஹென் பரிந்துரைக்கிறார். முதலாவது, குழந்தையின் மனதில் இருப்பதை புரிந்துகொள்ள அவர்களைப்போலவே சிந்திப்பது. அடுத்தது, உங்கள் கண்ணோட்டத்தை அளிக்க பெற்றோராக உங்கள் பாத்திரத்திற்குத் திரும்புவது.

குழந்தையின் கவலைகளைக் கண்டறிவதற்கான ஒரு வழியாகவும், அவர்கள் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆளாகியிருக்கிறார்களா? என்பதை அறியவும், அவர்கள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று குழந்தையிடம் பெற்றோர்கள் கேட்கலாம்.

குழந்தை முக்கியமாக என்ன நினைக்கிறது என்று அறிந்து உரையாடலை அவர்கள் கட்டுப்பாட்டில் விடுவதற்கு, எளிமையான கேள்விகளைக் கேட்பது மிகமுக்கியம் என்று அவர் கூறுகிறார். “குழந்தைகள் உண்மையில் எது குறித்து ஆர்வமாக உள்ளனர் என்று தெரிந்துகொள்ளவும், அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் தகவல்களால் அவர்களை மூழ்கடிக்காமல் தடுக்கவும் , இந்தபதில்கள் உங்களுக்கு உதவும்,” என்று அவர் விளக்குகிறார்.

பேச நினைக்கும் விஷயத்தை கேள்விகளுடன் துவங்கும்போது, உங்கள் குழந்தையின் உணர்ச்சி நிலை வெளிப்படுகிறது. இதன் மூலம் உரையாடலை எப்படிக்கொண்டு போகவேண்டும் என்பது உங்களுக்கு தெரியவருகிறது. எந்தவொரு தவறான எண்ணங்களையும் உண்மை தகவல்கள் மூலம் சரிசெய்வதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.

வெளியே அவ்வளவாகத்தெரியாத அறிகுறிகளை கவனியுங்கள்

சில குழந்தைகள் வெளிப்படையாகப்பேசலாம், மற்றவை அமைதியாகக் கவலைப்படலாம். எனவே அவர்கள் பதற்றமாக இருப்பதற்கான வெளியே அவ்வளவாகத்தெரியாத அறிகுறிகளை கவனிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் உணர்வுரீதியாக பெரியவர்களுடன் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம். தூங்குவதற்கு சிரமப்படலாம். விரல் நகங்களைக் கடிக்கலாம் அல்லது கட்டைவிரலை சூப்பலாம்.

ஆனால் கவலையின் சில மறைமுக அறிகுறிகள் , மனநிலை ஊசலாட்டம் போல் தோன்றலாம். அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் கோபமாக இருப்பதுபோலத்தோன்றலாம். வயிற்று வலியால் பாதிக்கப்படலாம் அல்லது பசியில் மாற்றம் ஏற்படலாம்.

“குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு வழியாக பிடிவாதக்காரர்களாக மாறக்கூடும். மேலும் இது அவர்கள் அனுபவிக்கும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிரானதாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

டூம்-ஸ்க்ரோலிங்கில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்கவும்

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட தாங்கள் படிக்கும் செய்திகளின் வகை மற்றும் அளவு ஆகியவற்றில் சமநிலையை பராமரிக்க வேண்டும். செய்தி உள்ளடக்கத்தை அதிகமாகப் பயன்படுத்துவதிலிருந்து, வயதுவந்த குழந்தைகளை விலக்கி வைப்பது மிகவும் சவாலானது.

ஆனால் முடிந்தால், அதிக பயத்தையும் பதற்றத்தையும் தூண்டக்கூடிய, அவர்கள் வயதிற்கு பொருத்தமற்ற,தொலைக்காட்சிமற்றும் இணையத்தில் வரும் படங்களிலிருந்து சிறு குழந்தைகளை விலக்கி வைக்க முயற்சி செய்யுங்கள்.

“போரில் சிக்கிய குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா? இல்லையா? என்பது போன்ற சிறிய விவரங்களை குழந்தை தெரிந்துகொள்ள விரும்பலாம் அல்லது அவர்கள் ஆர்வம் காட்டாமல் போகலாம். ஆனால் குழந்தை எந்த அளவிற்கு புரிந்துகொண்டுள்ளது என்று தெரிந்துகொள்வது முக்கியம். அதிகமான தகவல்களை அவர்கள் மீது திணித்து திக்குமுக்காட வைப்பதை இது தவிர்க்கும். எனவே, சிறு குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வையுங்கள்,” என்று அவர் கூறுகிறார்.

சமநிலையை கண்டறியவும்

குழந்தைகள் சாதாரணமாகவும் நன்றாகவும் உணர உதவும் செயல்களைச் செய்ய பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்கலாம். சமைப்பது, அவர்களுக்குப் பிடித்த படம் பார்ப்பது, நடைபயிற்சி செய்வது அல்லது அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

மறந்துவிடாதீர்கள்: நிகழ்வுகள் எந்த சூழலில் நடக்கிறது என்பதை புரியவையுங்கள். சில நிகழ்வுகள் எதைக் குறிக்கின்றன என்பதை நீங்கள் விளக்க வேண்டும். இந்த நேரத்தில் பயங்கரமான விஷயங்கள் செய்திகளில் அடிபடுகின்றன. ஆனால் அவை அரிதானவை மற்றும் அடிக்கடி நடக்காது என்று குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

மக்கள் செய்திகளை பற்றிப்பேசுவதற்கு அதிக நேரம் செலவழித்தாலும், நீங்கள் யுக்ரேனுக்கு அருகில் இல்லாதவரை இதுபோன்ற நிகழ்வுகள் உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ பாதிக்கும் சாத்தியக்கூறு இல்லை.

உங்கள் பிள்ளைக்கு கவலையான எண்ணங்கள் இருந்தால், அவர்களை செய்யும்படி ஊக்குவிக்கக்கூடிய இன்னும் சில விஷயங்கள் இங்கே உள்ளன:

• அவர்களின் கால்களை தரையில் ஊன்றி சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளச்செய்யுங்கள். இது அவர்களின் மனதின் மீதான கவனத்தை உடலின் மீது திருப்ப உதவும்.

• அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களை நினைவூட்டி, தூங்கச் செல்வதற்கு முன் இவற்றைப் பற்றி சிந்திக்க சொல்லுங்கள். இதனால் அவர்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்.

• தூங்கச் செல்வதற்கு முன் அவர்கள் நன்றியுடன் இருக்கும் மூன்று விஷயங்களை கண்டறியச்சொல்லுங்கள்.

• அவர்களின் படுக்கைக்கு அருகில் நல்ல விஷயங்களை வையுங்கள். அவர்களைச் புன்னகைக்க வைக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை வையுங்கள். அவர்கள் உறங்கச் செல்லும் முன் இவைகளை கடைசியாகப் பார்க்குமாறு இருக்கவேண்டும்.

• அவர்களுக்கு கெட்ட கனவுகள் வந்தால், அவற்றைப் பற்றி பேச அல்லது அவற்றை வரைய ஊக்குவிக்கவும்.

அவர்கள் உதவ விரும்பினால் ஊக்குவிக்கவும்

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளியுங்கள். இது அவர்களுக்கு, செயல்கள் மற்றும் விளைவுகளின் மீதான கட்டுப்பாட்டின் உணர்வை அளிக்க உதவும். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை நன்கொடையாக வழங்கலாம். தொண்டு நிறுவனங்களுக்கு பணம் திரட்டலாம்.

உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பலாம் அல்லது சமாதானத்திற்கு வேண்டுகோள்விடுக்கும் ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். “இது இரக்கத்திற்கான ஒரு சிறந்த பாடம். ஏனென்றால் படிப்பதன் மூலம் இரக்கத்தை கற்பிக்க முடியாது. இரக்கத்தை செயலில்தான் காட்ட முடியும் ,” என்று சிசாக்-கோஹன் விளக்குகிறார்.

பொய் சொல்லாதீர்கள்

ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு முடிந்தவரை உறுதியளிக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் தேவைக்கு அதிகமாக உறுதியளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களின் சில கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குத் தெரியாதபோது அதை தெரிவியுங்கள். மேலும் தகவலைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

“குழந்தையிடம் பொய் சொல்வது நம்பிக்கையை கெடுத்துவிடும்.”எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறுவதற்கு பதிலாக, “விஷயங்கள் மாறும்”, இதுவே வாழ்க்கையில் உண்மை. எல்லாம் மாறுகிறது. நல்லது மற்றும் கெட்டது இரண்டும் மாறும் என்று சொல்லுங்கள்,” என்கிறார் கோஹேன்.

“கொரோனா பெருந்தொற்று என்ற எடுத்துக்காட்டை நீங்கள் கொடுக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் இருந்த இடத்தில் இப்போது நாம் இல்லை. மீண்டு வரமுடியும் என்பதை வலியுறுத்துவது மிகவும் நல்லது. மேலும் குழந்தை எதிர்கொண்டு அதிலிருந்து வெளியே வந்த சம்பவங்களைக்கூட குறிப்பிடுவது நல்லது,” என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »