Press "Enter" to skip to content

யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு: எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறதா மேற்கு நாடுகள்?

  • ஜுபைர் அஹமது
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், SERGEI MALGAVKO

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடுமையான நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மேற்கு நாடுகளின் தலைவர்களின் கொள்கையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

மேற்கத்திய ஊடகங்கள் இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகப் மேற்கு நாடுகளை சேராத நிபுணர்கள் கவலை தெரிவித்ததோடு, மேற்கத்தியத் தலைவர்கள் இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கத்திய தலைவர்கள் ரஷ்யாவை பகைவனாகச் சித்தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில், தற்போதைய நெருக்கடிக்கு மேற்கு நாடுகளும் பொறுப்பாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகவியலாளர்களின் வலையமைப்பான அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சங்கம், மேற்கத்திய ஊடகங்களின் “இனவெறி” சார்ந்த செய்திகள் குறித்து ஒரு அறிக்கையில் கவலை தெரிவித்தது.

மேற்கு நாடுகளின் போலித்தனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாயன்று தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்குவதாக அறிவித்தார், இந்த நடவடிக்கை ரஷ்யாவை நீண்ட காலத்திற்குப் பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்று அவர் கூறினார்.

“உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய லாபம் அடைபவர்கள் மீது நடவடிக்கை” என்றும் அவர் அறிவித்தார். அவர் ரஷ்ய அதிபர் புதினின் முதலாளித்துவ நண்பர்களைக் குறிப்பிடுகிறார், அவர்கள் இந்தப் படையெடுப்பில் புதினுக்கு ஆதரவளிப்பவர்கள்.

biden

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவைத் தவிர, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது ‘கடுமையான’ பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளின் தாக்கம் ரஷ்யாவிற்குள்ளும் தெரிய ஆரம்பித்துள்ளதாக மேற்கத்திய ஊடகங்களில் கூறப்படுகின்றது. அமெரிக்க ஊடகமான சிஎன்என், ரஷ்யர்கள் தங்கள் பணம் மூழ்கும் முன் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, வரிசையில் நின்று பண இயந்திரங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆனால், ரஷ்ய ஊடகங்கள் மீது அரசு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த அதிக செய்திகள் அங்கு வெளியாக வாய்ப்புகள் மிகவும் குறைவே.

ஆனால் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் பற்றிப் பேசும் பெரும்பாலான மேற்கத்திய ஊடக நிருபர்கள் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ரஷ்ய எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்யவில்லை என்பதைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழாய் மூலம் ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ரஷ்ய நிறுவனமான கேஸ்ப்ராம், ஐரோப்பிய வாங்குதல்களின் பேரில், இன்னும் யுக்ரேன் வழியாக எரிவாயுக் குழாய்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகத் திங்களன்று அறிவித்தது.

யுக்ரேன் 2014 ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவிலிருந்து எரிவாயு பெறுவதை நிறுத்திவிட்டது. ஆனால் குழாய் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயுவை எடுத்து வருகிறது. போருக்குப் பின்னரும் இந்தப் போக்கு தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், எரிவாயுவைப் பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாகும்.

ஐரோப்பிய நாடுகளில், ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயு நிறுத்தப்பட்டால், ஐரோப்பாவின் வீடுகளில் வெப்பம் வழங்கும் சாதனங்கள் முழுவதும் பாதிக்கப்படலாம். குளிர் காலத்தில் மக்கள் கடுமையான சிரமத்தை சந்திக்க நேரிடும். வீடுகளைச் சூடாக்குவதற்கு மட்டுமல்லாமல், விமானங்கள் மற்றும் கார்களுக்கு எரிபொருள் நிரப்பவும் இந்த எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய ஏற்றுமதியாளராக இருக்கும் கத்தாரை விட ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் மலிவு விலையில் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

தடை – இருமுனைக் கத்தி

ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ள அச்சல் குமார் மல்ஹோத்ரா, பொருளாதாரத் தடைகள் இரு முனைக் கத்தி போன்றது என்கிறார்.

அவர் பிபிசியிடம், “புதின் பொருளாதாரத் தடைகளுக்குப் பழகிவிட்டார். இது வரை தடைகள் ரஷ்யாவைப் பாதித்ததும் இல்லை. அவை இதுவரை பலனளிக்கவில்லை. யுக்ரேன் மீதான தாக்குதலுக்கு முன்னரே, மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்பதை யூகித்திருக்கலாம். அதை எவ்வாறு சமாளிப்பது என்றும் திட்டமிட்டிருக்கலாம். பொருளாதாரத்தை விட தேசிய பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் புதின். தடைகள் என்பது இரு முனைக் கத்தி என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தடைகள் ரஷ்யாவை மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளையும் பாதிக்கும் என்பதியும் அவர் அறிவார்” என்று கூறுகிறார்.

putin

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெரெமி ஸ்கெஹில் மேற்கத்திய தலைவர்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்த முயற்சித்த சில மேற்கத்திய பத்திரிகையாளர்களில் ஒருவர். ஒரே நேரத்தில் பல ட்வீட்களில், யுக்ரேனில் ரஷ்யா செய்வது எல்லா வகையிலும் தவறு என்றும் யாரும் அதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் வாதிட்டார். ஆனால், மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடும் கண்டிக்கத்தக்கது என்பது அவர் கருத்து.

ஜெரெமெ ஸ்கெஹில், “தனது குற்றங்களை ஒப்புக்கொள்ளத் தொடர்ந்து மறுப்பது ரஷ்யாவின் மீதான கண்டனக்குரலை, குறிப்பாக, நேட்டோ மற்றும் அமெரிக்க ராணுவவாதத்தின் வரலாற்றை அறிந்தவர்களின் பார்வையில் மட்டுப்படுத்துகிறது. இது புதினுக்குச் சாதகமாகிறது” என்கிறார்.

ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிப்புடன் ஒப்பீடு

21 ஆம் நூற்றாண்டின் 22 ஆண்டுகளில், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்தான் (2021) மற்றும் ஈராக் (2003) ஆகியவற்றை ஆக்கிரமித்தன. சிரியாவில் அதிபர் பஷர் அசாத்துக்கு எதிராக படைகளை ஏவியது, லிபியா மற்றும் சோமாலியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. தாக்குதலுக்கான காரணத்தை, அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு உரையில் கூறினார்: “நமது மற்றும் பிற அரசாங்கங்களால் சேகரிக்கப்பட்ட உளவுத்துறை மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி, ஈராக் அரசாங்கத்திடம் இதுவரை இல்லாத அளவு ஆயுதக் குவிப்பு உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சி ஈராக்கின் அண்டை நாடுகளுக்கும் ஈராக் மக்களுக்கும் எதிராகப் பேரழிவு ஆயுதங்களை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளது.”

இந்தக் காரணத்துடன், ஜனாதிபதி புஷ் மற்றொரு காரணத்தையும் கூறினார். அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேன் அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். அமெரிக்காவில் 9/11 தாக்குதலில் சதாம் ஹுசைனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூட அதிபர் புஷ் கூறினார்.

ஆனால் ஈராக் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பேரழிவு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததையடுத்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

2) Q&A Ukraine

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

line

மேற்கத்திய ஊடகங்கள் தாங்கள் அறியாமல் தவறு செய்துவிட்டதாகக் கூறி இவ்விவகாரத்தைத் தவிர்த்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுக்ரேன் நெருக்கடியின் போது, சமூக ஊடகங்களில் மக்கள் ரஷ்யாவையும் புதினையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொரியா மற்றும் வியட்நாம் போன்ற பிற நாடுகளின் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் விவாதிக்கின்றனர், இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஜெரெமி ஸ்கெஹில், இது குறித்து, “ரஷ்யாவின் நடவடிக்கைகள் பற்றி மேற்கத்திய தலைவர்களின் பல அறிக்கைகள் துல்லியமாக இருக்கலாம், ஆனால் அவை அவர்களின் சொந்த ராணுவவாதம் மற்றும் போலித்தனம் மற்றும் தார்மீக உரிமையின்மை ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கிறார்.

ஊடகங்கள் மீதான இனவாதம் என்ற குற்றச்சாட்டு

பல நாடுகளில் உள்ள ஊடக அமைப்புகள் மேற்கத்திய ஊடகங்களை விமர்சித்துள்ளன, யுக்ரேன் போரின் செய்திகள் இனவாதம் சார்ந்தவை என்று குற்றம் சாட்டின.

“போரில் பாதிக்கப்பட்ட சிலரை மற்றவர்களை விட அதிகமாகக் காட்டும் செய்திகளின் உதாரணங்களை நாங்கள் கண்காணித்துள்ளோம்” என்று அரபு மற்றும் மத்திய கிழக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் (AMEJA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ் நியூஸ், த டெலிகிராஃப் மற்றும் அல் ஜசீரா ஆங்கிலம் போன்ற முக்கிய ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி இந்த அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டது.

“இந்தச் செய்திகள், யுக்ரேனியர்களின் காகசியன் இனம் அல்லது அவர்களின் பொருளாதார நிலை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன, மேலும் அவர்களை மத்திய கிழக்கு நாடுகள் அல்லது வட ஆபிரிக்காவைச் சேர்ந்த மக்களுடன் ஒப்பிடுகின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்துச் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான காணொளி கிளிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இது ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற இடம் அல்ல, ஒப்பீட்டளவில் ஐரோப்பிய நகரம் இது. இங்கு இது போன்ற விஷயங்களை நீங்கள் எதிர்பார்க்க முடியாது என்று கீயவ்வில் இருந்து ஒரு மூத்த சிபிஎஸ் செய்திகள் நிருபர் கூறினார்.

மற்றொரு நிருபர் யுக்ரேன் பற்றிக் கூறுகையில், அது வளரும் மூன்றாம் உலக நாடு அன்று என்று தெரிவித்தார்.

மற்றொரு நிருபர் யுக்ரேனில் இருந்து வந்த அகதிகளைப் பற்றிக் கூறுகையில், “அவர்கள் பணக்கார நடுத்தர மக்கள், அவர்கள் வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் ஐரோப்பாவில் வசிக்கும் அண்டை வீட்டினராகத் தெரிகிறார்கள்” என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »