Press "Enter" to skip to content

இலங்கை நெருக்கடியை இந்தியாவுக்கு 1991-இல் ஏற்பட்ட நெருக்கடியுடன் ஒப்பிட முடியுமா?

  • எம்.மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

அந்நியச் செலாவணி இல்லாமல் இலங்கை கடுமையான நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. கடன்களை உரிய நேரத்தில் கட்ட முடியாது என அறிவித்துவிட்டது. 1991-ஆம் ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த இரு தருணங்களையும் ஒப்பிட முடியுமா? இந்தியா அப்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டது எப்படி?

1990-களின் தொடக்கத்தில் ஏற்கெனவே கடன் பெருகியிருந்த இந்தியாவுக்கு கூடுதலாகக் கடன் தேவைப்பட்டது. தவணைகள் மொத்தமாக சுமார் 5 பில்லியன் டாலராக இருந்தது. கடனுக்கு வட்டி செலுத்த பணம் இல்லாத நிலைதான்.

இப்போது இலங்கையும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. சுமார் 51 பில்லியன் டாலர்கள் கடன்களுக்கான தவணைகளை உரிய காலத்தில் செலுத்த முடியாது என்று அறிவித்திருப்பதால், கூடுதல் கடன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் தனக்கு நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து, 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா படிப்படியாக மீளத் தொடங்கியது. அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோர் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவுக்கு அப்போதிருந்த நிலையையும் இப்போது இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் நிலையையும் ஒப்பிட்டு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் “இரண்டு நிலைகளும் முற்றிலும் வெவ்வேறானவை” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் அப்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான மணிசங்கர் அய்யர்.

இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது ஏன்?

சீர்திருத்தங்கள் தேவைப்பட்ட பொருளாதார கட்டமைப்பு, வளைகுடாப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு 1980-கள் தொடங்கி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. 90களின் தொடக்கத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்து, நெருக்கடி உச்சத்துக்கு சென்றது.

“எண்பதுகளின் கடைசி 5 ஆண்டுகளில் அரசு சிறிதும் கவலையின்றி செலவு செய்து வந்தது” என்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

1989-ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றபோது கஜானா காலியாக இருந்ததாக அவரே கூறியிருக்கிறார். அடுத்ததாக சந்திரசேகர் பிரதமரானார். யஷ்வந்த் சின்ஹா அவரது நிதியமைச்சராகவும், மருத்துவர் மன்மோகன் சிங் அவரது பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார்கள்.

“அந்தக் காலகட்டத்தில் ஒரு வகையான சோசலிச பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியாவில் இருந்தது” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் கணபதி.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

தங்கக் கட்டி

பட மூலாதாரம், Getty Images

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது பல நாடுகளின் குறுகிய காலக் கடன்களின் சுமை இந்தியாவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்ததது. குறுகிய காலக் கடன்களுக்கான தவணைகள் மொத்தமாக சுமார் 5 பில்லியன் டாலராக இருந்தது. அனைத்தும் சுமார் 90 நாள்களுக்குள் கட்ட வேண்டியவை. அப்போதுதான் வேறு வழியில்லாமல் தங்கத்தை அடமானம் வைக்க அரசு முடிவு செய்தது.

கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் அரசு அடமானம் வைத்தது. ஆனாலும் பெரிய பலன் கிடைக்கவில்லை.

இதன் பிறகு வந்த நரசிம்மராவ் அரசும் தங்கத்தை அடமானம் வைத்தது. அதிலும் சிக்கல் தீரவில்லை. அந்தத் தருணத்தில் நடந்த வளைகுடாப் போரும் இந்தியாவின் நெருக்கடியை அதிகரித்தது.

இந்தியா மீண்டது எப்படி?

நரசிம்மராவ் அரசு அமைந்த பிறகு ஜூலை 24-ஆம் தேதி முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தது. அந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்தியாவில் அதுவரை இருந்த சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கியது.

நரசிம்மராவ்

பட மூலாதாரம், Getty Images

“நரசிம்மராவ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பல வகையான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. தொழிற் கொள்கை சீர்திருத்தம், வர்த்தகக் கொள்கைச் சீர்திருத்தம், மூலதனச் சந்தை சீர்திருத்தம், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு போன்றவை அதில் அடங்கும்” என்கிறார் பொருளாதார நிபுணரான கௌரி ராமச்சந்திரன்.

“நரசிம்மராவ் பிரதமரானதும், நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்குக்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். அரசில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை கொண்டு வரப்பட்டதால், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பும் போதுமானதாக வளர்ந்தது. தொழில்மயமனதால் ஏற்றுமதி அதிகரித்தது.” என்கிறார் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் கணபதி.

இந்தியாவின் நெருக்கடியை இலங்கையுடன் ஒப்பிட முடியுமா?

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியையும் இந்தியாவில் 1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும் ஒப்பிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“தற்போது இலங்கையில் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் 1990-களில் பொருளாதார நெருக்கடி மட்டுமே ஏற்பட்டிருந்தது. நிலையான அரசு ஒன்று அமைந்ததும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடிந்தது” என்கிறார் கௌரி ராமச்சந்திரன்.

இரண்டு நாடுகளின் பொருளாதார அளவு, பலதரப்பட்ட தன்மை ஆகியவை காரணமாகவும் இவற்றை ஒப்பிடுவது முழுமையாகச் சரியாக இருக்காது என்கிறார் கணபதி.

“இந்தியாவின் பொருளாதார அளவு இலங்கையைவிடப் மிகப் பெரியது. கட்டமைப்பு மிகவும் விரிவானது. இலங்கையைப் பொறுத்தவரை சுற்றுலா, தேயிலை போன்ற சில துறைகளையே நம்பியிருக்கிறது. கொரோனாவால் இலங்கையின் அடிப்படைக் கட்டமைப்பே சரிந்துவிட்டது. இந்தியாவுக்கு கொரோனாவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பொருளாதார கட்டமைப்பு காரணமாக மீண்டு வர முடிந்திருக்கிறது” என்கிறார் அவர்.

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவும், அரசின் தவறான நிதி மேலாண்மையும் காரணம் என்கிறார் கணபதி.

“புதிய அரசு வரியைக் குறைத்தது. அதைச் செய்திருக்கக் கூடாது” என்கிறார் அவர்.

சுற்றுலா, தேயிலை, ஆடை உற்பத்தி ஆகிய மூன்று துறைகளும் முடங்கிவிட்டன. இறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணி இல்லை. நாணயத்தின் மதிப்பு சுமார் இரண்டு மடங்கு சரிந்துவிட்டது. அதனால் விலைவாசி உயர்ந்திருக்கிறது.

இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இருக்கிறது. இதில் சுமார் 35 பில்லியன் டாலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது இலங்கை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »