Press "Enter" to skip to content

வாஷிங் மெஷினை சரி செய்யாததால் பெண்ணுக்கு முதுகுவலி – ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

பட மூலாதாரம், BARCROFT MEDIA

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (14/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

பழுதான வாஷிங் மெஷினை சரி செய்ய வராததால் துணிகளை கையால் துவைத்த பெண்ணுக்கு முதுகுவலி உண்டானது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கில் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க எலெகட்ரானிக் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, ‘தினத்தந்தி’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், “பெங்களூரு பலகெரேயை சேர்ந்த ஒருவர், ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள கடையில் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங் மெஷினை விலைக்கு வாங்கி இருந்தார். அந்த நபர் வாஷிங் மெஷின் வாங்கும் போது, விலையில் இருந்து அதிகப்படியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி, 2 ஆண்டுக்கு வாரண்டியை கூடுதலாக பெற்றிருந்தார்.

இந்நிலையில், வாரண்டி காலம் இருக்கும் போது அந்த நபருக்கு சொந்தமான வாஷிங் மெஷின் பழுதானது. இதையடுத்து, அதனை சரி செய்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் அந்த நபர் புகார் அளித்திருந்தார். வாஷிங் மெஷின் பழுது செய்யும் நபர் வந்து, அதனை புகைப்படம் மட்டுமே எடுத்து சென்றதாக தெரிகிறது. வாரண்டி காலம் இருந்தும், வாசிங் மிஷினை சரி செய்ய எலெக்ட்ரானிக் நிறுவனத்திடம் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த நபர் எலக்ட்ரானிக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், “வாஷிங் மெஷின் பழுதானதால் எனது மனைவி துணிகளை தொடர்ந்து தனது கையால் துவைத்ததால் முதுகுவலி உண்டானது. இதற்கு சிகிச்சை பெற்றதற்காக ரூ.2 லட்சம் உள்பட ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில், வாரண்டி இருந்தும் வாஷிங் மெஷின் பழுது நீக்காததால், அந்த நபருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி எலெக்ட்ரானிக் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர்தான்

கமல்ஹாசன்

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் பல ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ரத்ததான குழு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இக்குழுவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

“நான் மீண்டும் திரையில் நடிக்கச் சென்றுவிட்டதாக விமர்சிக்கின்றனர். சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான். மகாத்மா காந்திக்கு திரைப்படம் பிடிக்காது. ஆனால், அவரை திரை மூலம் பார்த்தவர்கள் அதிகம். தண்டி யாத்திரையை திரை வழியாகத்தான் நான் பார்த்தேன்.

என் திரைப்படத்தில் அரசியலும், சமூக சேவை பற்றிய விஷயங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

தலைமைக்கு ஒரு கட்சி வந்துவிட்டால், அதற்கு சலாம் போட இது அரசாட்சி அல்ல. இது மக்களாட்சி. இதில் கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஒன்றியம் என்றாலே, தங்களைத்தான் சொல்வதாக சிலர் கோபித்துக்கொள்கின்றனர். நான் எல்லா ஒன்றியத்தையும்தான் சொல்கிறேன்.

ஓட்டு எண்ணிக்கை, எவ்வளவு கமிஷன் வாங்கலாம், எவ்வளவு பணக்காரன் ஆகலாம் என்பது அல்ல அரசியல். ஓர் ஏழையை பணக்காரன் ஆக்குவது அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் ஆக்குவதுதான் அரசியல்.

என்னைவிட சிறப்பாக அரசியலை யாராலும் செய்ய முடியாது. அவர்களிடம் மேடை மட்டுமே உள்ளது. என்னிடம்தான் தொழில்நுட்பம் இருக்கிறது. படம் காண்பித்து அதன்மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் என்றால் அதையும் செய்ய தயாராக இருக்கிறேன்,” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கை நெருக்கடியில் இருந்து மீள 18 மாதங்கள் செல்லும்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் செல்லும் என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அதில், “இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுகிறது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதால் கிடைக்க வேண்டிய பிரதான உதவிகள் கிடைக்கவில்லை.

எனவே, நன்கொடையாளர் மாநாட்டில் சீனாவுடன் ஓர் உரையாடலை மேற்கொள்ள முயல்கிறேன். விரைவில் அதை நடத்த விரும்புகிறேன்..

1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய மாற்றத்தை மேற்கொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கையை சீனா நிராகரிப்பதாக தெரிவித்த நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்தது.

சில முன்னாள் அமைச்சர்கள், பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பதவியை ஏற்காமையால் அதை நான் ஏற்றுக் கொண்டேன்.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்ய நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பிணை எடுப்பதை அரசாங்கம் நாடுகிறது என்றாலும், நடந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண நன்கொடையாளர் முகவர் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

சீனா-அமெரிக்கா இணைந்து இலங்கைக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து அவதானம்

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா மற்றும் அமெரிக்கா இணைந்து ஆதரவளிப்பது தொடர்பாக இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சிங், “இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக சீன தூதுவருடனான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அப்போது வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான யோசனைப் பகிர்வு ஆர்வம் மிக்கதாகக் காணப்பட்டது.

அத்துடன் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான இலங்கை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது” என ட்விட்டரில் பகிர்ந்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுளது.

மேலும், கொழும்பிலுள்ள சீன தூதரகம், “இரு தரப்பு ஆர்வம்மிக்க விடயங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் மற்றும் சீன தூதுவருக்கிடையில் நட்பு ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இரு நாடுகளும் இணைந்து உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பிலும் அப்போது அவதானம் செலுத்தப்பட்டது” என தெரிவித்துள்ளது என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »