Press "Enter" to skip to content

அய்மன் அல் ஜவாஹிரி: பின் லேடனின் ‘வலது கை’யாக மாறிய கண் மருத்துவரின் கதை

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர்.

எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர். மே 2011 இல் அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல்-காய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அதற்கு முன்பு ஜவாஹிரி பின்லேடனின் வலது கையாகக் கருதப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த “சதிகாரர்” இவர் என்று நம்பப்பட்டது.

ஜவாஹிரி 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட 22 “அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள்” பட்டியலில் பின்லேடனுக்குப் பின் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜவாஹிரி அல்-காய்தாவின் மிக முக்கியமான செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார். 2007-இல் 16 காணொளிகள் மற்றும் ஒலிநாடாக்களை வெளியிட்டார். இது பின்லேடனை விட நான்கு மடங்கு அதிகம். இதன் மூலம் தங்களது இயக்கத்துக்கு உலகம் முழுவதும் இருந்து ஆட்களைச் சேர்க்க முயற்சி நடந்தது.

ஜவாஹிரியைக் கொல்ல அமெரிக்கா முயற்சி செய்வது இது முதல் முறையல்ல. 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அவர் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்த தாக்குதலில் நான்கு அல்-காய்தா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்தத் தாக்குதலில் தப்பிய ஜவாஹிரி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொளியில் தோன்றி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை எச்சரித்தார்.

மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர்

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் 1951-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்ட மரியாதைக்குரிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஜவாஹிரி.

அவரது தாத்தா, ரபியா அல்-ஜவாஹிரி, மத்திய கிழக்கின் சன்னி இஸ்லாமிய கற்றலின் மையமான அல்-அஸ்ஹரின் தலைமை இமாமாக இருந்தார். அதே நேரத்தில் அவரது மாமா ஒருவர் அரபு லீக்கின் முதல் பொதுச் செயலாளராக இருந்தார்.

பின் லேடன்

பட மூலாதாரம், Reuters

ஜவாஹிரி பள்ளியில் இருந்தபோதே இஸ்லாமிய அரசியலில் ஈடுபட்டார். எகிப்தின் பழமையான, மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்தின் உறுப்பினராக இருந்ததற்காக 15 வயதில் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவரால் மருத்துவம் படிக்க முடிந்தது. 1974 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1995 இல் இறந்த அவரது தந்தை முகமது அதே கல்லூரியில் மருந்தியல் பேராசிரியராக இருந்தார்.

அடிப்படைவாத இளமைப் பருவம்

ஜவாஹிரி ஆரம்பத்தில் குடும்ப பாரம்பரியத்தையே கடைப்பிடித்தார். கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் மருத்துவமனையைக் கட்டினார். ஆனால் எகிப்திய அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்த தீவிர இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன.

எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் 1973-ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, ​​அவர் அதில் இணைந்தார்.

ஜவாஹிரி

பட மூலாதாரம், Reuters

1981 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது அதிபர் அன்வர் சதாத்தை சிப்பாய்கள் போல உடையணிந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருடன் ஜவாஹிரியும் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இஸ்லாமிய ஜிஹாதிகளின் கோபத்துக்கு சதாத் ஆளானார்.

நீதிமன்ற விசாரணையின்போது ஜவாஹிரியின் வாதம், அவரை இஸ்லாமியவாதிகளின் தலைவராக அடையாளப்படுத்தியது.

சதாத்தின் படுகொலையில் அவருக்கு தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

அவர் எகிப்தில் சிறையில் இருந்தபோது அதிகாரிகளால் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார் என்று சக கைதிகள் கூறுகின்றனர். இந்த அனுபவமே அவரை ஒரு வெறித்தனமான தீவிரவாதியாக மாற்றியதாக கூறப்படுகிறது.

1985-ல் விடுதலையானதைத் தொடர்ந்து ஜவாஹிரி சௌதி அரேபியாவுக்குச் சென்றார்.

பின்னர் பாகிஸ்தானின் பெஷாவருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் சென்றார். அங்கு அவர் சோவியத் ஆக்கிரமிப்பின் போது மருத்துவராகப் பணிபுரிந்தார். அந்தத் தருணத்தில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஒரு பிரிவை அங்கு நிறுவினார்.

1993-ஆம் ஆண்டு எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் மீண்டும் செயல்படத் தொடங்கியபோது ஜவாஹிரி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எகிப்திய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னணியில் ஜவாஹிரி இருந்தார்.

ஜவாஹிரி

பட மூலாதாரம், Getty Images

1990 களின் நடுப்பகுதியில் எகிப்திய அரசைக் கவிழ்த்து இஸ்லாமிய அரசை அமைப்பதற்கான அவரது அமைப்பின் தாக்குதல்களால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜவாஹிரிக்கு 1999-இல் எகிப்திய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மேற்கு நாடுகளுக்குக் குறி

ஜவாஹிரி 1990 களில் புகலிடம் மற்றும் நிதி ஆதாரங்களைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்ததாகக் கருதப்படுகிறது.

1997 ஆம் ஆண்டில், ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அங்குதான் ஒசாமா பின்லேடன் இருந்தார்.

பின் லேடன்

பட மூலாதாரம், Getty Images

ஒரு வருடம் கழித்து, எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத், பின்லேடனின் அல்-காய்தா உள்ளிட்ட 5 அமைப்புகள் இணைந்து யூதர்களுக்கு எதிரான இஸ்லாமிய முன்னணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பின் முதல் பிரகடனத்தில் அமெரிக்க குடிமக்களை கொல்லக் கட்டளையிடும் ஃபத்வா அடங்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு 223 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களில் பின்லேடனும் அல்-காய்தாவும் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தனர் என்பதற்கு சான்றாகக் கிடைத்த செயற்கைக்கோள் தொலைபேசி உரையாடல்களில் ஜவாஹிரியும் பேசியிருந்தார்.

அந்தத் தாக்குதல்கள் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியது.

அதற்கு மறுநாள் ஜவாஹிரி ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு பேசினார்.

“போர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »