Press "Enter" to skip to content

சென்னையில் குடியரசு தினம்: முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர்

பட மூலாதாரம், DIPR

சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.  தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். 

குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணா பதக்கம் மற்றும் காந்தியடிகள் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டன. 

முப்படை வீரர்களின் அணிவகுப்பு, காவல்துறையினரின் சிறப்பு படையின் அணிவகுப்பு, அரசு துறைகளின் சிறப்பை வெளிக்காட்டும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு காவல்துறையில் பெண் காவலர்களின் முரசு இசை நிகழ்ச்சி புதிதாக சேர்க்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் சிறந்த மூன்று காவல் நிலையங்களுக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது. சிறந்த காவல்நிலையத்திற்கான கோப்பை  திருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நா. உதயகுமார், திருச்சி நகர காவல் நிலைய ஆய்வாளர் சி தயாளன், திண்டுக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளர் சேதுபாலாஜி உள்ளிட்டோர் பெற்றனர். 

குடியரசு தின விழா நிகழ்வில் பாரத  தேசம் என்று பெயர் சொல்லுவார் என்ற பாடல் முழங்கியது. தமிழ் உணர்வை ஊக்குவிக்கும் பாடல்களும் ஒலித்தன.

குடியரசு தினம்

பட மூலாதாரம், DIPR

குடியரசு தின விழாவில், ஐந்து காவலர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைசெயலக காவலர் சரவணன், வேலூரைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

அடுத்ததாக, கலைநிகழ்ச்சிகளில் முதலாக, ஸ்ரீகாந் தேவாவின் இசையில் பாரதியாரின் பாரத தேசம் என்று சொல்லுவார் பாடலுக்கான நடனத்தை சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த நடனங்கள் பலரையும் ஈர்த்தன.

முதலில் ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்புற நடமான கல்பேலியா நடனம் அரங்கேறியது. ராஜஸ்தான் மாநிலத்தின்  கபேலியப் பழங்குடியினரின் நடனம் இது. இதில், ஆண்கள் வாசிக்க, பெண்களும் நடனமாடினர். அதனை அடுத்து, மகாராஷ்டிரா கோலி நடனம், அசாம் மாநிலத்தின் போடோ இன மக்களின் நடனம் உள்ளிட்டவை நடைபெற்றன.  

ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

74வது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் சார்பில் வந்த ஊர்தியில் கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரி இடம்பெற்றது. ‘தமிழ்நாடு வாழ்க’  என்ற வாக்கியத்தை அந்த ஊர்தி தாங்கிவந்தது.

காவல்துறையினரின் ஊர்தியில் காவல்துறையினர் பெற்ற விருதுகள் இடம்பெற்றன. பெண்களுக்கு காவல்துறையில் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் விதத்தில் அந்த  ஊர்தி அமைந்திருந்தது. அதோடு, போதைப் பழக்கத்தில் இளைஞர்கள் சிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு செய்தியை ஒலிக்கும் கணினி மயமான தொலைக்காட்சி பெட்டியுடன் அந்த  ஊர்தி வந்தது.

இளைஞர் நலத்துறையின் ஊர்தியில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை நினைவுகூரும் சிலைகள் இடம்பெற்றிருந்தன. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊர்தியில் செங்குத்து தோட்டம், ஹைடிரோபோனிக்ஸ் என்ற தண்ணீர் இல்லாமல் செய்யப்படும் விவசாயத்தைப் பற்றிய அலங்காரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சமூக நலத்துறையின் ஊர்தியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்த படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை, தீயணைப்புத் துறை ஊர்திகள் இடம்பெற்றன. ஊர்திகளின் அணிவகுப்பு நிறைவுபெற்றதும், குடியரசு தின விழாவின் நிறைவு பகுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தமிழ்நாடு காவல்துறையினர் முரசு குழுவினர் வழங்கினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »